தூய ஆவியின் கனிகள் வேண்டுமா! | குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (14.10.2020)பொதுக்காலத்தின்  28 ஆம் புதன்- I:  கலா: 5: 18-2; II: திபா:  1: 1-2, 3,4,6; III: லூக்:   11: 42-46

தூய ஆவியார்  நம்முடைய வாழ்விலே மிக முக்கியமான பங்கு வகிக்கிறார். தூய ஆவியினால் நிரப்பப்படும் பொழுது நம்முடைய வாழ்வு ஆசீர்வாதமான வாழ்வாக மாறுகின்றது. நம்முடைய அன்றாட வாழ்வில் கடவுளின் அருளைப் பல நேரங்களில் உணராமல் இருப்பதற்குக் காரணம் நாம் தூய ஆவியினுடைய வல்லமையை உணராமல் இருப்பதே ஆகும். இத்தகைய மனநிலையை மாற்றி தூய ஆவியால் வழிநடத்தப்பட நம்முடைய உள்ளத்தையும், செயல்பாட்டையும் தூய்மை உள்ளதாக மாற்ற வேண்டும். அவ்வாறு வாழும்பொழுது இவ்வுலகம் சார்ந்த மாயைகளையும், கவர்ச்சிகளையும் நம்மிடமிருந்து அகற்றிவிட்டுத் தூய ஆவியின் கனிகளைப் பெற்று முழு நிறை உள்ள வாழ்வை வாழ முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தூய ஆவியால் வழிநடத்தப்படத் தடையாயுள்ள இவ்வுலகம் சார்ந்த மாயக்கவர்ச்சிகளைப் பற்றி எடுத்துரைக்கிறார். கலாத்தியத் திருஅவையில் யூதமயமாக்கும் கிறிஸ்தவர்கள் சிலர் பவுல் எடுத்துரைத்தப் போதனைக்கு எதிராகப் பேசினர். யூதத் திருச்சட்டத்தின் வழியாக மட்டும்தான் மீட்புப் பெற முடியும் எனவும், மோசேயின் சட்டமாகிய விருத்தசேதனம் போன்றவற்றை  நாம் மீட்புப் பெறக்  கடைபிடிக்கவேண்டும் எனவும் எடுத்துரைத்தனர். மேலும் பவுல் பிற இனத்து கிறிஸ்தவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் சட்டங்களை நீக்கிவிட்டதாக குற்றம்சாட்டினர். இத்தகைய மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் திருத்தூதர் பவுல் இந்த திருமுகத்தைக் கடுமையான முறையில் எழுதியுள்ளார்.

உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது அன்பினாலும், நம்பிக்கையினாலும் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். "கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர், விருத்தசேதனம் செய்து கொண்டாலும், செய்து கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு எப்பயனும் இல்லை. அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது " ( கலா:5:6) என்ற வார்த்தைகள் ஒருவர் மீட்புப் பெற திருச்சட்டங்களைத் தாண்டி அன்பும் நம்பிக்கையும்தான் தேவை என்றக் கருத்தை வலியுறுத்தியுள்ளார்.  மேலும் "தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள் ; அப்போது உன்னியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள் " ( கலா: 5:16) என்ற வார்த்தைகள் உலகம் சார்ந்த மாயக் கவர்ச்சிகளை விட்டுவிட்டுத் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழத் திருத்தூதர் பவுல் வழிகாட்டியுள்ளார். மேலும் இன்றைய முதல் வாசகத்தில் "நீங்கள் தூய ஆவியால் நடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருக்க மாட்டீர்கள்" (கலா: 5: 18) என்ற வார்த்தைகள் திருச்சட்டத்தை மேற்கோள்காட்டி வாழ்க்கையை முடக்கிக்  கொள்ளாமல்,தூய ஆவியின் செயல்களை அறிந்து  ஆவியானவர் தரும் கனிகளை முழுமையாக சுவைக்க முடியும்.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே தூய ஆவியாரின் வழிநடத்தலில் வாழும் பொழுது ஊனியல்பின் செயல்களான பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு,  பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் போன்றவற்றை அடையாளம் காண முடியும். இவை அனைத்தும் தூய ஆவியின் கனிகளை சுவைப்பதற்குத் தடையாக இருக்கின்றது.

எனவே தூய ஆவியின் கனிகளைச் சுவைப்பதற்கு நாம் அன்பையும், இறை நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தூய ஆவியின் கனிகளான " அன்பு, மகிழ்ச்சி,அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு மற்றும் தன்னடக்கம் போன்ற மதிப்பீடுகளை நாம் வாழ்வாக்க முடியும். தூய ஆவியினுடைய கனிகள் உள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை  எனவும் திருத்தூதர் பவுல் சுட்டிக்காட்டியுள்ளார்.  எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே "தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்" ( கலா: 5: 25) என்ற வார்த்தைகள் தூய ஆவினுடைய வழியிலேயே நாம் வாழும் பொழுது தூய ஆவியின் கனிகளைப் பெற்று  நிறையுள்ள வாழ்வை வாழ முடியும். இப்படிப்பட்ட மன நிலையைப் பெற்றுக்கொள்ள இன்றைய முதல் வாசகத்தில் வழியாக திருத்தூதர் பவுல் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகம்  யூதர்களின் திருச்சட்டத்தின் பெயரால் யூதர்கள் செய்த குறுகிய மனப்பான்மையை இயேசு விமர்சனம் செய்கிறார். யூதர்கள்  திருச்சட்டத்தைக் கடைபிடிப்பதாய் நினைத்துக்கொண்டு தங்களிடம் இருப்பதில் பத்தில் ஒரு பங்கைக் காணிக்கையாகப்  படைத்தனர்.  ஆனால் நீதியையும், கடவுளின் அன்பையும் பொருட்படுத்தவில்லை. எனவே அவர்களுடைய வெளிவேடத் தன்மையைக் கண்டு 'ஐயோ!  உங்களுக்கு கேடு '  எனக் கடுமையாகச் சாடியுள்ளார். நம்முடைய அன்றாட வாழ்விலும் இவ்வுலகம் சார்ந்த சட்டங்களுக்கும், பொருட்களுக்கும், பதவிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நீதியையும், கடவுளின் அன்பையும் மறந்து  சுயநலத்தோடு வாழும் பொழுது நிச்சயமாக இயேசு நம்மை கண்டும் "ஐயோ ! உங்களுக்கு கேடு " எனக் கூறுவார். எனவே இவ்வுலகம் சார்ந்த பொருளுக்கும் பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நீதியையும், கடவுளின் அன்பையும் இந்த மண்ணுலகத்தில் நிலைநாட்ட உழைக்கும் பொழுது கடவுளின் துணையும், தூய ஆவியாரின் வழிநடத்தலும் நமக்கு இருக்கும். நாம் தூய ஆவியாரால்  வழிநடத்தப்படும் பொழுது நிச்சயமாக தூய ஆவியின் கனிகளைப் பெற்று நிறை உள்ளவர்களாக நாம் வாழ முடியும். அப்படிப்பட்ட நிறைவுள்ள கிறிஸ்தவர்களாக வாழத் தேவையான தூய ஆவியின் கனிகளைப் பெறத் தடையாய் உள்ள அனைத்தையும் நம்மிடமிருந்து அகற்றத் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :

தூய ஆவியின் அருட்கனிகளை  வழங்கும் வல்லமையுள்ள இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் ஊனியல்புக்கு  அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் தூய ஆவியின் வழிநடத்துதலுக்கு  அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் ,அதன்படி வாழவும் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 4 =