Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இது நம் அடையாளம்! | குழந்தைஇயேசு பாபு
இன்றைய வாசகங்கள் (12.10.2020) பொதுக்காலத்தின் 28 ஆம் திங்கள்- I:கலா: 4: 22-24, 26-27, 31 - 5: 1; II: திபா: 113: 1-2. 3-4. 5,6-7; III: லூக்: 11: 29-32
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தங்களுடைய அடையாளத்தை அறிய விரும்புகின்றனர். தங்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று பல தேடல்களையும் முன்னெடுப்புகளையும் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையான அடையாளம் என்பது சுயநலம் மிகுந்ததாக இருக்காது ;மாறாக, பிறர் நலம் மிகுந்ததாக இருக்கும். நாம் இவ்வுலகம் சார்ந்த பெயருக்கும் பெருமைக்கும் நம்மையே உட்படுத்தும் பொழுது இறுதியில் நம் வாழ்க்கை நிறைவற்றதாகத் தான் முடியும். ஆனால் பெயருக்காகவும் பெருமைக்காகவும் நம் வாழ்க்கையை வாழாமல் மனிதநேய சிந்தனையோடு நற்செயல்களை செய்யும்பொழுது இயேசு என்ற அடையாளத்தை நம்மால் வாழ்வாக்க முடியும் .அந்த அடையாளம் தான் மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நிலையானது.
புனித சவேரியார் மிகச் சிறந்த அறிவாளி. அவர் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். அறிவு தான் மிகச்சிறந்த செல்வம் என்ற சிந்தனை கூட அவருக்கு இருந்தது. இருந்தபோதிலும் புனித இஞ்ஞாசியார் கூறிய இறைவார்த்தையை கேட்டபிறகு தன் வாழ்வில் வெறுமையை காண்கின்றார். உலகம் சார்ந்த பெயரும் பட்டமும் பெருமையும் நம் ஆன்மாவை ஒருபோதும் காக்காது என்ற உண்மையை ஆழமாக அறிந்து கொண்டார். எனவே ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் மட்டுமே தன் ஆன்மாவை தூய்மைப்படுத்தும் என்ற ஆழமான சிந்தனையை பெற்றார்.இறுதியில் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் இறைப்பணியாளராக மாற தம்மையே அர்ப்பணித்தார். இதுதான் கிறிஸ்தவ வாழ்வின் அடையாளம். திருமுழுக்குப் பெற்று பெயரளவில் கிறிஸ்தவ வாழ்வு வாழ்வது நம் அடையாளம் அல்ல; மாறாக, இறைவார்த்தையின் படி வாழ்வது தான் நம் அடையாளம். இத்தகைய ஆழமான கருத்தை தான் இன்றைய நற்செய்தியின் மூலமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு அறிவுறுத்த விரும்புகிறார்.
ஆண்டவர் இயேசு தான் இறையாட்சி பணி செய்த பொழுது அவர் செய்த வல்ல செயல்களையும் போதனைகளையும் கண்ணால் கண்டும் யூதர்கள் இயேசு மெசியா என்று ஏற்றுக்கொள்வதற்கும் நம்புவதற்கும் தயங்கினர். யூதர்கள் இயேசுவை நம்புவதற்கு அடையாளம் ஒன்று கேட்டனர். எனவே இயேசு மிகுந்த வருத்தமும் கோபமும் உள்ளவராய் " இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது" என்று கூறியுள்ளார். இயேசு தீய தலைமுறையினர் என்று கூறியதற்கு காரணம் கடவுளை சோதிப்பவர்கள் அனைவருமே தீயத்தலைமுறையினராகக் கருதப்பட்டனர். வி.ப:17:1-7 என்ற வசனத்தில் கடவுளைச் சோதிப்பவர்கள் தீயத்தலைமுறையினராகக் கருதப்படுகின்றனர் . இயேசுவின் அரும்பெரும் செயல்களை கண்டும் இயேசுவை நம்பாத அவர் காலத்து மக்களை தீயத்தலைமுறையினர் என சாடுகின்றார். எனவே ஆண்டவர் இயேசு யோனாவைப் போல மக்கள் மனமாற உதவியாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார். 'யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும்
இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்'' (லூக்கா 11:30) இந்த இறைவசனம் மக்கள் மீது இயேசு கொண்டிருந்த அன்பினை சுட்டிக்காட்டுகின்றது.
யோனா எவ்வாறு நினிவே மக்கள் மனம் மாறி கடவுளுடைய இரக்கத்தைப் பெற உதவி செய்தாரோ அதேபோல ஆண்டவர் இயேசுவும் தன்னையே முழுவதுமாக கையளித்து நான் மனமாற்றம் அடைந்து மீட்புப் பெற வழிகாட்டியுள்ளார். இது அவரின் தியாக மனநிலையை சுட்டிக்காட்டுகிறது. மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலி புனித குழந்தை தெரசம்மாள் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைவரும் மனம் மாறி ஆன்மாவை காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஜெபத்திலும் தவத்தில் ஈடுபட்டார். அதன் வழியாக பல ஆன்மாக்களை புனித பாதையில் மீட்டெடுத்தார். இப்படிப்பட்ட சான்று பகர கூடிய வாழ்வை வாழத்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார். நினிவே மக்கள் யோனா கூறிய வார்த்தைகளைக் கேட்டு இறைவார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து மீட்புப் பெற்றதைப் போல இயேசுவும் அவர் காலத்து மக்கள் யோனாவை அடையாளமாக வைத்துக்கொண்டு மீட்புப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
நம்முடைய அன்றாட வாழ்விலும் ஆண்டவர் இயேசுவை அறியவும் அனுபவிக்கவும் பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் நம் மனம் போன போக்கில் வாழ்ந்து வருகின்றோம்.புதிய பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் எதிர்பார்கிறோம். இப்படிப்பட்ட மனநிலை நம்மிடம் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டு இறைவனின் வார்த்தைக்கு செவிசாய்க்க கூடிய மக்களாக வாழும் பொழுது நிச்சயமாக வாழ்வில் நிறைவை காணமுடியும். அதுவே நம் இறைவன் நம்முடன் இருக்கிறார் என்பதற்கான அடையாளம். நினிவே மக்கள் பெற்ற புது வாழ்வை நாமும் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு தேவையான நல்ல உள்ளத்தை இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம்.
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! உம்முடைய வார்த்தைகளின் வழியாக எங்களை மனமாற்றம் பெற்று புது வாழ்வு வாழ வாய்ப்பு கொடுத்து வருகிறீர். ஆனால் பல நேரங்களில் எங்களுடைய பலவீனத்தின் காரணமாக பாவங்கள் பல செய்து வருகிறோம். உன் வார்த்தைக்கு எதிராக எம் வாழ்வை வாழ்ந்து வருகிறோம் . எனவே அவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டு உன் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவும் உயிருள்ள உம் வார்த்தையின் படி வாழந்து உம் அன்பின் அடையாளங்களாகத் திகழத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment