இறைவார்த்தையை வாழ்வாக்குவோம்! | குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (10.10.2020)பொதுக்காலத்தின்  27 ஆம் சனி- I: கலா:   3: 22-29; II:திபா  105: 2-3. 4-5. 6-7; III: லூக்:  11: 27-28

ஆங்கிலத்தில் "Walk the talk" என்ற வழக்கு உள்ளது. அதன் பொருள் நாம் என்ன சொல்கிறோமோ அதை செய்து காட்ட வேண்டும். வாழ்வாக்க வேண்டும் என்பது தான். உலகத்திலே மிகக் கடினமான காரியம் இதுவாகத்தான் இருக்கும். எல்லாரும் தான் சொல்லிய படி தன் வாழ்வை வாழ்வதில்லை. தடுமாற்றங்களும் தடமாற்றங்களும் முயற்சியில் தோல்வியும் கண்டிப்பாக ஏற்படும். ஆனால்  கடினமான செயலாக இருந்தாலும் சாத்தியமானது தான்.
இப்படி நமது வார்த்தைகளை வாழ்வாக்க இவ்வளவு சிரத்தை எடுக்க நேரும் போது இறைவார்த்தையை வாழ்வாக்க நாம் எவ்வளவு முயலவேண்டும் என்பதை உணர்ந்து வாழவே நாம் இன்று அழைக்கப்படுகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் "உம்மைப் பெற்றெடுத்த பெண் பேறுபெற்றவள் " என்று கூரிய பெண்ணிடம் "இறைவார்த்தையைக் கேட்டு அதை கடைபிடிப்போர் இன்னும் பேறுபெற்றோர் " என்று கூறி  அவருடைய மக்களாக வாழ அழைக்கப்பட்டவர்களாகிய நாம் அனைவரும் இறைவார்த்தையை கேட்பதிலும் அதன்படி வாழ்வதிலும் கருத்தாய் இருக்க வேண்டும் என்பதையும் அதுவே பேறுபெற்ற நிலை என்பதையும் கூறுகிறார் நம் ஆண்டவர் இயேசு.

"இதோ ஆண்டவருடைய அடிமை .உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் " என்று கூறியதால் கடவுளின் தாயாகும் நிலைக்கு உயர்த்தப்பட்டார் அன்னை மரியா.தன்னுடைய புகழ்பாடலில் "இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னை பேறுடையாள் எனப் போற்றுமே" என்று பாடிய அவர் இறைவனின் வார்த்தையை இறுதி மூச்சுவரை வாழ்வாக்கினார் என்பதில் ஐயமில்லை. அதற்காக அவர் தன் இதயத்தை வாள் ஊடுருவும் அளவுக்கு துன்பங்களை சகித்துக் கொண்டார்.அவர் பாடியதைப் போல இன்றும் அவரை பேறுபெற்றவர் என நாம் போற்றுகிறோம்.

ஆண்டவரே பேசும் உன் அடியவன் கேட்கிறேன் என்று கூறி இறைவார்த்தையை கடைபிடித்ததாலேயே சாமுவேல் இஸ்ரயேல் மக்களிடையே மிகச்சிறந்த நீதித்தலைவராய் உயர்ந்து விளங்கும் பேற்றினை பெற்றார் என விவிலியத்தில் வாசிக்கிறோம். 

நாங்கள் யாரிடம் போவோம். வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன என்று அறிக்கையிட்டார் பேதுரு. ஆம். இறைவார்த்தை நமக்கு வாழ்வைக் கொடுக்கிறது. அதை வாழ்வாக்க நாம் முயலும் போது கடவுளின் வாழ்வை பிரதிபலிப்பதோடல்லாமல் நாம் பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தப்படுகிறோம்.

இறைவார்த்தையை வாழ்வாக்க நமக்கு பலனில்லை என்று உணரும் போது நம் முன்மாதிரி இயேசுவை உற்று நோக்குவோம்.அவர் நமக்கு நம்பிக்கை தருவார். தைரியமூட்டுவார். இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுல் மிகத்தெளிவாக நமக்கு ககூறுவது இதுவே. இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையாலேயே நாம் வாழ்வடைகிறோம். எனவே  நம்பிக்கையோடு இறைவார்த்தையை வாசிப்போம். தியானிப்போம்.இயேசுவின் மேல் நம்பிக்கைகொண்டவர்களாய் தடுமாற்றங்கள்  வாழ்வில் வந்த போதும் இறைவார்த்தையை வாழ்வாக்கி பேறுபெற்றவர்களாக வாழ இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

வார்த்தையால் வாழ்வளிக்கும் இறைவா! உமது வார்த்தையை கேட்டு வாழ்வாக்க ஆசிக்கிறோம். ஆயினும் தடுமாற்றங்கள் கண்டு தயங்குகிறோம்.எமக்கு ஆற்றல் தாரும். உமது திருமகனை நம்பி அவர் காட்டிய பாதையில் உமது வார்த்தைகளை வாழ்வாக்கி உம்மால் பேறுபெற்றவர் என்று புகழப்பட வரம் தாரும் ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 2 =