இறைவனின் விருந்துக்கு தயாரா நாம்? | குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (11.10.2020)பொதுக்காலத்தின்  28 ஆம் ஞாயிறு-I: எசா: 25: 6-10; II: திபா:  23: 1-3. 3b-4. 5. 6; III: பிலி:  4: 12-14, 19-20; IV: மத்:22: 1-14

ஒரு மனிதர் மிகுந்த பசியுடன் வேகமாக ஒரு உணவு விடுதியை அணுகுகிறார்.உணவு விடுதியின் வாசலில் ஒரு தாயானவள் தன் இரு குழந்தைகளையுடன்,யாராவது தங்களின் பசியை ஆற்ற முன்வர மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தார். போகிறவர்கள் வருகிறவர்கள் இதைக் கண்டும் காணாமல் போய்க்கொண்டிருந்தனர்.  இந்நிலையில் உள்ளே சென்று மேசையில் அமர்ந்து தனக்கு தேவையான உணவை சர்வரிடம் கூறிவிட்டு, அதற்காக காத்திருந்த அந்த மனிதரின் பார்வை அந்த தாய் மேல் பட்டது. அம்மா பசிக்கிறது என்று கூறிய தன் குழந்தையின் கண்ணீரைத் துடைக்க முடியாமல் தானும் அழுது கொண்டு இருந்தார் அந்தத் தாய். இதைக்கண்டு மனம் நெகிழ்ந்த அந்த மனிதர் திடீரென மேசையிலிருந்து எழுந்து வெளியே சென்று பசியால் வாடியிருந்த அந்தத் தாயையும் இரு பிள்ளைகளையும் கூட்டி வந்தார். தான் அமர்ந்திருந்த மேசையிலேயே அவர்களை அமர வைத்து அவர்களுக்கு தேவையான உணவை வாங்கிக் கொடுத்தார்.இதுவரை தாங்கள் கண்டிராத உணவை கண்டபோது அழுது கொண்டிருந்த அந்த தாயும் பிள்ளைகளும் தங்கள் கண்ணீரைத்
துடைத்தவர்களாய் சிரித்த முகத்துடன் வயிராற உண்டனர். இதைக் கண்ட மற்றவர்கள் மனம் நெகிழ்ந்து போனார்கள்.பசிக்கு மட்டும் உணவளிக்காமல் அவர்களுக்கு தன்னுடைய சகோதர அன்பையும் சேர்த்து  விருந்தளித்தார் அந்த மனிதர்.

"ஆண்டவர் மலைமேல் பெரியதொரு விருந்தை ஏற்பாடு செய்கிறார். தன் மக்களின் அழுகையின் முக்காட்டை அகற்றிவிடுகிறார்" என்ற வார்த்தைகளை இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் நூலில் நாம் வாசிக்கிறோம். அதே போல நற்செய்தியிலும் திருமண விருந்து பற்றிய உவமை இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. விருந்து என்பது  பல வகை உணவு பதார்ந்தங்களை வழங்குவது மட்டும் அல்ல. மாறாக நல்ல உணவுடன் ,அன்பு ,
உபசரிப்பு, மரியாதை, விருந்தோம்பல் அனைத்தையும் சேர்த்தளித்து வந்தாரை மனம்குளிரச் செய்வதே உண்மையான விருந்து.

கடவுள் தன் மக்களுக்கு அளிக்கும் விருந்து இத்தகையது தான். அது அன்பு அமைதி மகிழ்ச்சி யை அளிக்கும் விருந்து. பாகுபாடின்றி அனைவரையும் மரியாதை செய்யும் விருந்து. கவலையை போக்கும் விருந்து. மன்னிக்கும் விருந்து.
மனநிறைவைத்தரும் விருந்து. ஆன்மீக விருந்து. அழுகையின் முக்காட்டை அகற்றும் விருந்து. சோதனையை வென்றிட தெம்பு தரும் விருந்து.கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்கும் தன் அன்பு மகனையே உணவாகத் தரும் விருந்து. நம் உடல் உள்ள ஆன்மாவிற்கு ஆற்றல் தரும் விருந்து.

இவ்விருந்தில் பங்குகொள்ள நம்மை எவ்வாறு தயாரிக்கிறோம் என சிந்தித்துப் பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம்?
நம் அன்றாட வாழ்வே இறைவன் தரும் விருந்து தான்.காலையில் கண் விழித்தது முதல் இரவில் தூங்கச் செல்லும் வரை நம்முடைய தேவைகளை எல்லாம் நிறைவேற்றும் இறைவனின் பராமரிப்பை உணர்வதும்,நன்றி கூறுவதுமே அவருடைய விருந்தில் தொடர்ந்து பங்குபெற நம்மைத் தயாரிப்பதாகும். நம்முடைய தேவைகள் நிறைவேற்றப்பட்டதை போல நமக்கு அடுத்திருப்போரின் தேவையை நிறைவேற்ற முயன்ற உதவி செய்வதே உண்மையான தயாரிப்பாகும். கடவுள் நமக்குக் காட்டிய நெறியின் படி வாழ்ந்து எந்த சூழ்நிலையிலும் கடவுளை விட்டு விலகாமல் இருப்பதே உண்மையான சிறந்த தயாரிப்பு.நாம் இத்தகைய தயாரிப்புகளை மேற்கொள்கிறோமா என சிந்திதத்தால் இல்லை என்ற பதில் தான் கிடைக்கும்.பல வேளைகளில் அலட்சியமான மனநிலையில் தான் நாம் இருக்கிறோம். இத்தகைய மனநிலையோடு இறைதரும் விருந்தில் நாம் பங்கு பெற இயலாது என்பதை நாம் உணர வேண்டும்.

திருமண ஆடையின்றி வந்தவரை புறம்பே தள்ளுவதை நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். கடவுள் கூறிய திருமண ஆடை என்பது அன்பு அமைதி மகிழ்ச்சி நீதி போன்ற இறையாட்சி விழுமியங்களே! இறையாட்சி விழுமியங்களை வாழ்வாக்குவது கடினமான காரியம் என்றாலும் இயலாத காரியமல்ல. கடவுள் தரும் ஆற்றலால் அது இயலும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கிறிஸ்து வழியாக கடவுள் நம் அனைவருடைய தேவைகளையும் நிறைவேற்றுகிறார் என்பதை மிகத்தெளிவாக கூறுகிறார். கிறிஸ்துவையே நமக்கு வழங்கி நம்மை அனுதினமும் வலுப்படுத்துகிறார் கடவுள். அத்தகைய வலுவூட்டும் இறைவனின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு என கூறும் அவர் எச்சூழலிலும் அது வறுமையோ வளமையோ என்னால் வாழ முடியும் என மார்தட்டுகிறார்.பவுலின் இத்தகைய மனநிலை நம்மிடம் இருப்பதே நாம் இறைவனின் விருந்தில் பங்கொள்கிறோம் என்பதற்கான அடையாளம்.

எனவே அன்றாடம் இறைதரும் திருவிருந்தில் பங்கு பெறும் நாம் உகந்த தயாரிப்போடும் தகுந்த திருமண ஆடையோடும் பங்கு பெறுகிறோமா என நம்மையே ஆய்வு செய்வோம். கிறிஸ்துவை நற்கருணை வழியாக பெற்றுக்கொள்ளும் நாம் எச்சூழ்நிலையிலும் அவரைப்போல வாழ்ந்து கடவுளுக்காக எதையும் செய்ய ஆற்றல் உள்ளவர்களாய் வாழ இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

உம் மகனை எமக்கு அளித்து ஆற்றல் வழங்கும் இறைவா!
நீர் எமக்கு அன்றாடம் அளிக்கும் விருந்திலே தகுந்த தயாரிப்போடு பங்கு பெறும் வரம் தாரும்.  கிறிஸ்துவின் வலுவூட்டும் ஆற்றலால் எந்த சூழ்நிலையிலும் உமது பிள்ளைகளாய் வாழந்து உமக்கு சான்று பகரும் ஆற்றலை எங்களுக்குத் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 3 =