இயேசுவை மெசியா என்று ஏற்றுக் கொள்ளத் தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் ஒன்பதாம் வெள்ளி; I: தோபி: 11: 5-17; II: திபா: 146: 1b-2, 6c-7, 8-9a, 9bc-10; III : மாற்: 12: 35-37

ஜூன் மாதம் என்றாலே இயேசுவின் திரு இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட மாதமாகும். மாதத்தின் முதல் வெள்ளி திருவழிபாட்டில் இயேசுவின் இதயமாக நாமும் மாறி அவரை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தி வாசகமானது இயேசுவின் மறைநூல் அறிவைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. 'இயேசு...'மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி?...தாவீது அவரைத்
தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?' என்று கேட்டார்'' (மாற்கு 12:35-37). மறைநூல் அறிஞர்கள் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். எனவேதான் இயேசுவை தாவீதின் மகன் என அழைத்தனர்.

இயேசு திருப்பால் 110 ஐ மேற்கோள்காட்டி தாவீது கடவுளைத் தலைவராக ஏற்றிருக்க , எப்படி மெசியா தாவிதின் மகனாக இருக்க முடியும்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். 

இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் சவால் என்னவென்றால், நாம் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளத் தயாரா?  என்பதுதான். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் யூதர்களும் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளத்  தயங்கினர்.  ஏனெனில் அவர்கள் பார்வையில் மெசியா என்பவர் ஒரு அரசரைப் போல, தங்களை அடக்கி ஆண்ட உரோமை அரசை வீழ்த்தி விடுதலை அளிப்பவர் . ஆனால் இயேசுவோ அப்படிப்பட்டவர் அல்ல. மெசியாவாகிய  இயேசு இவ்வுலகிற்கு  அக மனித விடுதலையைக் கொண்டு வந்தார்.  நம்முடைய அன்றாட வாழ்வுக்கு அக மனித விடுதலையைக் கொடுக்கும் மெசியாவாகிய இயேசுவை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாரா?

இறைவேண்டல் : 
அன்பு இயேசுவே!  நீர் இந்த உலகிற்கு கொண்டுவந்த அக விடுதலையை எங்கள் வாழ்வில் அனுபவிக்க அருளைத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

9 + 1 =