விண்ணகத் தந்தையின் பராமரிப்பில் மகிழத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பதினொன்றாம்  சனி; I: 2 கொரி 12:1-10; II: திபா: 33:8-13; III : மத்: 6:6:24-34

பராமரிப்பு என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. பொறுப்பாகக் கவனித்துப் பேணுதல், அக்கறைகொள்தல், முன்கருதி தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்றவை அவற்றுள் சில. நம்முடைய வீட்டில் நம் பெற்றோர்கள் நம்மைப் பாராமரித்து வளர்த்ததால் தான் இன்று நாம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறோம் என்பதை மறுக்கமுடியாது. நமது வளர்ச்சிக்கு முழுப்பொறுப்பெடுத்து, நம்முடைய தேவைகள் என்னவென்ன என்பதை முன்கூட்டியே அறிந்து அதைப் பார்த்து பார்த்து செய்தவர்கள் தாம் நம் பெற்றோர். குழந்தை பராமரிப்பை பெற்ற தாயிடமும், குடும்பத்தைப் பராமரிக்கும் பாங்கை தந்தையிடமும் கண்டுணர்ந்திருக்கும் நாம் விண்ணகத் தந்தை நம்மை எந்த அளவிற்கு பராமரிக்கிறார் என்பதைச் சிந்தித்துப் பார்த்ததுண்டா?

கடவுளின் பராமரிப்பில் முழுமையாக மகிழ்ந்தவர் ஆபிரகாம். முன்பின் தெரியாத இடத்திற்கு கடவுளின் சொல்லைக்கேட்டு பயணமானவர் அவர். கடவுள் தனக்கு வேண்டியதைச் செய்வார் என அவர் நம்பினார். ஈசாக்கை பலியிட அழைத்துச் சென்ற தருணத்தில் கூட பலிக்கான ஆடு எங்கே எனக்கேட்ட ஈசாக்கிடம் ஆண்டவர் தருவார் என அவர் உரைத்தார். கடவுளின் பராமரிப்புக்குத் தன்னைக் கையளித்ததால் ஆண்டவரின் வாக்குறுதிகள் அனைத்தும் ஆபிரகாம் வாழ்வில் நிறைவேறின என விவிலியம் விளக்குகிறது.

நம்முடைய அன்றாட வாழ்வில் கடவுளின் பராமரிக்கும் அன்பு நமக்கு ஏராளம் கிடைக்கிறது. ஒவ்வொருநாளும் நாம் உண்ணும் உணவு,சுவாசிக்கும் காற்று, நமது பாதுகாப்பான பயணம் ,நாம் அருந்துகின்ற நீர் என ஒவ்வொன்றையும் நம்முடைய தேவைக்கு அதிகமாக வழங்கி விண்ணகத்தந்தை நம்மைப் பராமரிக்கின்றார். இந்த பெருந்தொற்று காலத்தில் உண்ண உணவின்றி இருக்கும் எத்தனையோ ஏழைகளுக்கு நல்லுள்ளம் படைத்த மக்கள் மூலம் உணவு மற்றும் பொருட்கள் வழங்குவதும் கூட இறைபராமரிப்புச் செயலே.

அதே நேரத்தில் பாலைநிலத்தில் மன்னாவாலும் காடைகளாலும் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு உணவளித்ததில் நிறைவுகாணாமல், ஆண்டவரின் சொல்லைமீறி தேவைக்கு அதிகமாகச் சேமிக்கப்பட்ட மன்னா கெட்டுப்போனது என்பதையும் விவிலியம் தெளிவாக விளக்குகிறது அல்லவா.
இந்நிகழ்வு நமக்கு எதைச் சுட்டிக்காட்டுகிறது ? விண்ணகத் தந்தையின் பராமரிப்பில் நம்மை மகிழவிடாமல் தடுப்பது எது? 

 நம்முடைய அன்றாடத் தேவைகள் நிறைவுற்ற போதும் அதில் மனத்திருப்தி அடையாமல் "நாளை" பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதாலேயே நம்மால் இறைவனின் பராமரிப்பில் மகிழ இயலவில்லை. இவ்வாறு கவலைப்படுவதால் நமது நம்பிக்கையின்மையும் அதிகரித்து வாழ்வில் சோர்வடைகிறோம்.
இன்றைய நற்செய்தியில் கவலை கொள்வதால் நம்முடைய வாழ்நாள் கூடப்போவதில்லை என்ற அழகிய உண்மையை இயேசு விளக்குகிறார். எனவே தேவையற்ற கவலைகளை விடுத்து ஒவ்வொருநாளும் விண்ணகத்தந்தையின் பராமரிக்கும் அன்பில் மகிழ்வோம். நம் வாழ்வு இனிதாகும்.

இறைவேண்டல்

தந்தையே உமது பராமரிப்பிற்கு எங்களை நம்பிக்கையுடன் கையளித்து கவலைகளின்றி மகிழ்ந்திட அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 4 =