பிறர் மனதை நோகடிக்கும் சொற்களைத் தவிர்ப்போமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பத்தாம் வியாழன்: I: 2 கொரி: 3: 15 - 4: 1, 3-6: II: திபா: 85: 8-9, 10-11, 12-13: III : மத்: 5: 20-26

கல்லூரியில் படிக்கின்ற மாணவர் ஒருவர் தன் வகுப்பிலுள்ள மற்ற மாணவர்களை மிகவும் தகாத வார்த்தைகளால் நோகடிப்பது வழக்கம். யாரேனும் ஏதாவது தவறு செய்தாலோ, வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் இருந்தாலோ அவர்களை "லூசு" ,"மெண்டல்", " படிக்க லாயக்கில்லாதவன்" என்றெல்லாம் கூறி கிண்டல் செய்வார். ஒருமுறை வகுப்பில் சிறிய தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் கேட்ட கேள்விக்கான பதிலை அம்மாணவனால் சரியாக எழுத முடியவில்லை. பல பிழைகள் இருந்தன. மறுநாள் அவ்விடைத்தாளை ஆசிரியர் திருத்திக் கொடுத்தார். அம்மாணவனின் விடைத்தாளை மற்றொரு மாணவரைக் கூப்பிட்டு வகுப்பில் சப்தமாக வாசிக்கச் செய்தார். அதில் பல பிழைகள் இருந்ததைக் கண்டு மற்ற மாணவர்கள் அவனை கிண்டல் செய்யவும் அவரைப் பார்த்து சிரிக்கவும் தொடங்கினர். அப்போது தான் அவருக்குத் தான் செய்த தவறு புரிந்தது. மனம் வலித்தது. தன்னுடைய தகாத வார்த்தைகளால் மற்றவர்களும் இவ்வாறுதானே வேதனையுற்றிருப்பார்கள் என உணர்ந்து கொண்டார்.

இன்றைய நற்செய்தியில் தன் சகோதரனைப் பார்த்து முட்டாள் என்று கூறுபவன் மரணத் தீர்ப்பு பெறுவான் என இயேசு கூறுகிறார். ஏன் அது கொலைக்குச் சமம் என இயேசு குறிப்பிடுகிறார். 
ஆயுதத்தால் பிறரின் உயிரை எடுப்பது மட்டும் கொலை அல்ல. பிறரை மரியாதைக் குறைவாக நடத்துவது, தகாத வார்த்தைகளால் நோகடிப்பது,
புறங்கூறி மற்றவர்களின் பெயரைக் கெடுப்பது போன்ற செயல்களெல்லாம் கொலைக்குச் சமமே. 

நன்றாக யோசித்துப் பார்த்தால்
நம்மை யாராவது தகாத வார்த்தைகளால் காயப்படுத்தினால் வருந்துகிறோம். ஆனால் பல வேளைகளில் அறிந்தே பலரை நம்முடைய தகாத வார்த்தைகளால் காயப்படுத்துகிறோமே அதை எண்ணி நாம் வருந்துகிறோமா?மன்னிப்பு கேட்கிறோமா? என சிந்திக்க நாம் இன்று அழைக்கப்பட்டுள்ளோம்.

தவறே செய்பவர்களாயினும் பிறரிடம் மென்மையாகவும், மரியாதையாகவும் நடந்து கொண்டு நல்ல வார்த்தைகளைப் பேசக் கற்றுக்கொள்வோம். அவ்வாறு நடந்தோமெனில் நாமும் மதிக்கப்படுவோம். சிந்தித்து செயல்படுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா நாங்கள் தகாத வார்த்தைகளால் பிறரைக் காயப்படுத்தாமல் மென்மையான அன்பான சொற்களால் பிறரை மதிப்புடன் நடத்த எமக்கு உம் அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 0 =