இயேசுவின் பாதையில் இரக்கத்தோடு வாழ்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பதிமூன்றாம் வியாழன்; I: தொநூ:   : 23: 1-4, 19; 24: 1-8,62-67; II: திபா:  106: 1-2. 3-4ய. 4b-5; III: மத் : 9: 9-13

'இறக்கத் தானே பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு வாழ்வோம்' என்று புனித அன்னை தெரசா மிக அருமையாக கூறியுள்ளார். 'இரக்கம்' என்ற பண்பானது இந்த உலகிலேயே மிக உயர்ந்த உன்னதமான பண்பாகும். கடவுள் இந்த உலகத்தில் மனிதனைப் படைத்த பொழுது மிகுந்த மகிழ்ச்சியோடு படைத்தார். மனிதன் தன்னுடைய சுயநலத்தின் காரணமாக கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்த போதிலும் கடவுள் அவர்களை  முழுமையாக அழிக்வில்லை. மனிதன் மனமாற பல வாய்ப்புகளைக் கொடுத்தார். அவ்வாய்ப்புகளெல்லாம் கடவுளின் இரக்கமேயன்றி வேறில்லை.

இயேசுவின் இறையாட்சிப் பணியில் இரக்கச் செயல்பாடுகள்  மேலோங்கி இருந்தன. இந்த சமூகத்தில் அடையாளம் காணப்படாத ஏழைகள், பாவிகள், புறவினத்தார், பெண்கள் போன்றவர்களுக்கு தன்னுடைய இரக்கத்தைக் கொடுத்து, முழுமையான வாழ்வைப் பெற்றுக் கொள்ள வழிகாட்டினார் அவர்.

இயேசு பாவிகளோடும் வரித்தண்டுபவர்களோடும் உணவு உண்பதை பரிசேயர் விமர்சனப்படுத்தினர். எனவேதான் பரிசேயர் இயேசுவின் சீடர்களிடம்  "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?'' என்று கேட்டனர். இந்தக் கேள்வி பரிசேயர்களின் இறுகிய தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. சக மனிதர்கள் மீது அன்பும் இரக்கமும் இல்லாத மனநிலையைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. பரிசேயர்கள் திருச்சட்டங்களை அறிந்திருந்தாலும் அதை வாழ்வாக்கத் தவறினர்.திருச்சட்டங்கள் மனிதத்தையும் மனிதநேயத்தையும் போதிக்கக் கூடியவை. ஆனால் அவர்கள் பெரும்பாலும் இரக்கமற்ற மனிதர்களாகவே வாழ்ந்தனர். எனவே அவர்களால் வாழ்வின் முழுமையைச் சுவைக்க முடியவில்லை.

 ஆண்டவர் இயேசு பரிசேயர்  கேட்ட கேள்விக்கு பதிலாக " நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்று  கூறியுள்ளார். இது இயேசுவின் உச்சகட்ட இரக்கம் மிகுந்த மனநிலையைச்  சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. யூதர்களைப் பொறுத்தவரை பலி செலுத்துவது என்பது ஒரு மிகப்பெரிய உன்னதமான இறைவேண்டல். அது கட்டாயமாக ஆற்றப்பட வேண்டிய  கடமை.  ஆனால் இயேசு அதையும் கடந்து பலியை விட இரக்கம் தான் மேலானது என்று கூறியுள்ளார். 

"இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" என மத் 5:7. ல் இயேசு கூறியுள்ளார். எனவே
 நம் அன்றாட வாழ்வில் நாம் இரக்கத்தோடு வாழும் பொழுது நாம் மறு கிறிஸ்துவாக  மாற முடியும். உலகமே பாவிகள் ,தீயவர்கள் என ஒதுக்குபவர்களை நாமும் ஒதுக்காமல் குறைந்த பட்சம் அவர்களைப் பற்றிய அவதூறான எண்ணங்களை மாற்றுவோம். பொறுமையுடன் இருப்போம். மன்னிக்க முயலுவோம். இத்தகைய இரக்கச் செயல்களை நாம் செய்யும் போது நாமும் கடவுளின் இரக்கத்தைப் பெறுவோம். எனவே இயேசுவின் பாதையில் இறையாட்சிப் பணியில் இரக்கம் உள்ளவர்களாக வாழ  முயற்சி செய்வோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! எங்கள் வாழ்வில் இரக்கத்தோடு  எந்நாளும் வாழ்ந்திட தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

15 + 4 =