அகக்கோவிலில் உள்ள தேவையற்றவைகளை அகற்றுவோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் எட்டாம் வெள்ளி; I: சீஞா: 44: 1, 9-12; II: தி.பா: 149: 1-2. 3-4. 5-6a,9b ; III : மாற்கு :11: 11-26

உள்ளம் என்பது கோவில். அங்கே குடியிருப்பது தெய்வம். அன்பு, நம்பிக்கை, பொறுமை, ஈகை, இரக்கம் போன்ற கடவுளின் குணங்கள் அங்கே நிறைந்திருக்க வேண்டும். இல்லாவிடில் நமது உள்ளம் நிச்சயமாக கோவிலாக இருக்க இயலாது. நமது உள்ளம் இவை அனைத்தும் நிறைந்த கருவூலமாக இருக்கின்றதா இல்லையா என ஆய்வு செய்யவே நாம் இன்று அழைக்கப்பட்டுள்ளோம்.

இரு அருட்சகோதரர்கள் மிகவும் பக்தியாக திருப்பலியில் பங்கு பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களைக் காணும் போது தெய்வமே " உன்னில் தான் நான் உறைய வேண்டும் " என விரும்புவதைப் போன்ற எண்ணம் உண்டாகும்.இந்நிலையில் அவர்களில் ஒருவர் திருவிருந்து வழங்கச் சென்றார். எல்லாரும் வரிசையாகச் சென்று பக்தியுடன் நற்கருணை பெற்று உட்கொண்டனர். ஆனால் குறிப்பிட்ட இச்சகோதர் தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த அவ்வருட்சகோதரரிடம் நற்கருணையைப் பெற விரும்பாமல் சற்று அப்பால் உள்ள மற்றொரு தந்தையிடம் சென்று நற்கருணையைப் பெற முயற்சித்தார். அன்று அவருக்கு நற்கருணை கிடைக்கவில்லை.
ஏனெனில் அவர்  மனம் வெறுப்பால் நிறைந்திருந்தது.  எனவே தெய்வத்திற்கு இடமில்லாமல் போனது.

இச்சிறு நிகழ்வு நமக்குச் சொல்வதென்ன?
நம் அகத்திலுள்ள வேண்டாதவற்றை அகற்றாவிட்டால் நாம் கடவுளின் இல்லமாக மாறுவதற்கு சாத்தியமில்லை. 
இன்றைய நற்செய்தியில் இயேசு கோவிலில் வியாபரம் செய்தவர்களை அடித்து விரட்டுகிறார். ஆனால் உண்மையில் அவர் விரட்டியது அன்றைய யூத பெரியோர்களிடமிருந்த ஏற்றத்தாழ்வு காண்கின்ற, ஏமாற்றுகின்ற, அடிமைப்படுத்துகின்ற, பணப்பேராசை பிடித்த இரக்கமற்ற மனநிலைகளையே. இத்தகைய எண்ணங்களோடு ஆலயத்திற்கு வந்து ஆலயத்தைத் தீட்டுப்படுத்தாதீர்கள் என்று இயேசு கோபம் கொள்கிறார்.

நம் மனதிலும் கோபம், வெறுப்பு, பேராசை ,இச்சை உணர்வுகள், பணத்தாசை ,பதவி மோகம், கர்வம், இரக்கமற்ற எண்ணங்கள் நிறைந்திருந்தால் கடவுளின் கோவிலாக நம் உள்ளம் திகழாது. இறைவேண்டல் என்னும் சாட்டையைக் கையிலெடுப்போம்.
நம் எண்ணங்கள் சொற்கள் செயல்களை நல்லவையாக்கி தேவையற்றவையை அடித்து விரட்டுவோம். ஆலயங்களாய் மாறுவோம்.

இறைவேண்டல்

எங்கள் உள்ளங்களில் வாழ ஆசிக்கும் இறையே,  எங்களுக்குள் இருக்கும், நீர் விரும்பாத அனைத்தையும் விரட்டியடிக்க சக்தி தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 3 =