Notre-Dame தீ விபத்திற்கு உலக கத்தோலிக்கத் தலைவர்கள்


பாரிஸ் Notre-Dame பேராலய உட்புறம் (AFP or licensors)

Île de la Cité எனப்படும் இடத்தில், அரசர் 7ம் லூயிஸ் ஆட்சி காலத்தில், 1163 ஆம் ஆண்டில் கோதிக் கலைவண்ணத்தில் இப்பேராலயக் கட்டடப் பணிகள் தொடங்கின. இது 1991 ஆம் ஆண்டில் உலக பாரம்பரிய சொத்துப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

ஐரோப்பாவின் மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றான பாரிஸ் Notre-Dame பேராலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தை முன்னிட்டு, உலக அளவில், கத்தோலிக்க, ஐ.நா., மற்றும் அரசுத் தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த கவலையையும், செபங்களையும் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 15, இத்திங்கள் மாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து கவலையுடன் பேசிய, பாரிஸ் பேராயர் Michel Aupetit அவர்கள், Notre-Dame பேராலய பங்கு மக்கள், பாரிஸ் நகர கத்தோலிக்கர் மற்றும் ப்ரெஞ்ச் மக்கள் எல்லாருடனும் செபத்தில் இணைந்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் கொரியாவின் சோல் கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விபத்து குறித்த செய்தி ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது, இவ்வேளையில், தென் கொரிய கத்தோலிக்க சமுதாயம், ப்ரெஞ்ச் மக்களின் வேதனைகளையும், துன்பங்களையும் பகிர்ந்துகொண்டு செபிக்கின்றது என்று கூறியுள்ளார். 

நியு யார்க் பேராயர், கர்தினால் திமோத்தி டோலன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த மிக அழகான செப இல்லம் கொளுந்து விட்டெறியும் இந்நேரத்தில், இதனை மேலும் சேதமடையாவண்ணம் இறைவன் காப்பாராக மற்றும், இத்தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களையும் இறைவன் காப்பாராக எனச் செபித்துள்ளார்.  

இந்தத் தீ விபத்தினால் இந்தப் பேராலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் கடுமையாகச் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளன. பேராலயத்தில் இருந்த கண்ணாடிகளாலான சாளரங்கள் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட உள்கட்டமைப்பு அமைப்பு ஆகியவை, இந்த தீ விபத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயினும், இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டு கோபுரங்கள் உள்ளிட்ட, பேராலயத்தின் முக்கிய பகுதி தீ விபத்தில் இருந்து தப்பியுள்ளன.

பாரிசிலுள்ள புகழ்பெற்ற ஈஃபில் கோபுரத்தைவிட, இந்தப் பேராலயத்துக்கு ஒவ்வோர் ஆண்டும், 13 மில்லியன் மக்கள் கூடுதலாக வருகின்றனர் எனக் கூறப்படுகின்றது.

(வத்திக்கான் செய்தி)

Add new comment

7 + 11 =