Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
துன்புறும் முதியோருக்காக திருத்தந்தை
அறுபதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதுக்கும் அதிகமானோரின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில், 90 கோடியாக இருந்தது. அது, 2050ம் ஆண்டில் ஏறத்தாழ 200 கோடியாக உயரும் எனக் கூறப்படுகின்றது மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள் சமுதாயத்தில் பல்வேறு வழிகளில் துன்புறும் பல வயது முதிர்ந்தவர்களுடன் நெருக்கமாக உள்ளேன் என்று, வயதானவர்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக நாளான (WEAAD), ஜூன் 15, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தி வழியாகக் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“மறக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, மறைவாக வாழ்கின்ற பல வயதானவர்களுடன் நெருக்கமாக உள்ளேன்; உடலிலும் மனதிலும் பலவீனமாக இருப்பவர்கள் புறக்கணிக்கப்பட தேவையில்லை என, எல்லாரையும் ஒன்றிணைக்கும் சமுதாயத்தை அமைப்பதற்குத் தங்களை அர்ப்பணித்துள்ளவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் இச்சனிக்கிழமையன்று இடம்பெற்றிருந்தன.
உலகில் வயதானவர்களில் ஆறு பேருக்கு ஒருவர், ஏதாவது ஒருமுறையில் உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர் என்று சொல்லி, ஐ.நா. பொது அவை, 2011ம் ஆண்டில், வயதானவர்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக நாளை உருவாக்கியது. 2050ம் ஆண்டுக்குள், உலக அளவில் இளையோரின் எண்ணிக்கையைவிட, அறுபது வயதுக்கு அதிகமானோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், புறக்கணிக்கப்படல், வன்முறை, உரிமை மீறல்கள் போன்ற துன்பங்களை முதியோர் எதிர்கொண்டு வருகின்றனர் என்றும், ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா.வின் உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகில் முதியோர்களில், 4 முதல் 6 விழுக்காடு வரை, ஏதாவது ஒருமுறையில் உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர் என்றும், இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் நிலைமையை வெளியே சொல்வதில்லை என்றும் தெரியவருகின்றது. மேலும், வயதானவர்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள, ஐ.நா. மனித உரிமைகள் வல்லுனர் Rosa Kornfeld-Matte அவர்கள், வயதானவர்கள், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.
Add new comment