Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளையின் விருது
‘நூறாவது ஆண்டு’ என்று பொருள்படும் Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளை, "பொருளாதாரமும், சமுதாயமும்" என்ற பெயரில் உருவாக்கியுள்ள ஒரு விருதை, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றும் பேராசிரியர் Mary Hirschfeld அவர்களுக்கு, மே 29, இப்புதனன்று வழங்கியது.
இந்த விருதுக்கென உலகின் 12 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டிருந்த 45 நூல்களில், "அக்குவினாஸும் வணிகச் சந்தையும்: மனிதாபிமானப் பொருளாதாரம் நோக்கி" என்ற பெயரில், Hirschfeld அவர்கள் எழுதியுள்ள நூல், இவ்வாண்டின் விருதுக்கென தெரிவு செய்யப்பட்டது.
இந்த விருதை தீர்மானிக்கும் குழுவுக்கு தலைவராகப் பணியாற்றிய ஜெர்மன் கர்தினால் Reinhard Marx அவர்கள், இவ்விருது வழங்கும் விழாவில் உரையாற்றுகையில், திருஅவையில், சமுதாயச் சிந்தனைகள், திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களின் காலத்திலிருந்து எழுந்தது என்பது பொதுவான கருத்து என்றாலும், புனித தாமஸ் அக்குவினாஸ் வாழ்ந்த காலம் முதல், திருஅவை, மனித சமுதாயத்தைக் குறித்த எண்ணங்களை வெளியிட்டு வந்துள்ளன என்று கூறினார்.
இன்றைய உலகம், பொருளாதாரத்தை, வெறும் எண்ணிக்கைகள் அடங்கிய கண்ணோட்டத்துடன் சிந்திக்கும் வேளையில், கத்தோலிக்கத் திருஅவை, பொருளாதாரத்தையும், மனிதர்களையும் இணைத்துச் சிந்திக்க நம்மைத் தூண்டுகிறது என்று Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளையின் தலைவர், பேராசிரியர், Anna Maria Tarantola அவர்கள், இவ்விழாவில் உரையாற்றினார்.
இவ்விருதைப் பெற்றுக்கொண்ட பேராசியர் Hirschfeld அவர்கள், பொருளாதாரத்தைக் குறித்து தான் பல ஆண்டுகள் சிந்தித்து வந்த போதெல்லாம், தனக்குள் கவலைகள் அதிகம் உருவாயின என்றும், 20 ஆண்டுகளுக்கு முன், தான் கிறிஸ்தவ மறையைத் தழுவியபின், தன் கவலைகளை, நம்பிக்கைகளாக மாற்ற முடிந்தது என்றும், அந்த நம்பிக்கையை, தன் ஆசிரியப் பணி வழியே மற்றவர்களுக்குப் பகிர முடிகிறது என்றும், எடுத்துரைத்தார்.
திருஅவையின் சமுதாய எண்ணங்களை வளர்க்கும் நோக்கத்துடன் திருத்தந்தை புனித 2 ஆம் ஜான்பால் அவர்களால் 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளை, 2018 ஆம் ஆண்டு தன் வெள்ளிவிழாவைக் கொண்டாடியது.
(வத்திக்கான் செய்தி - மே 30, 2019)
Add new comment