வயதானவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்


வயது முதிர்ந்தவர்கள் பராமரிப்பு (Matti Matikainen)

வயது முதிர்ந்தவர்களின் மனித உரிமைகள் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டுமென்று, நியு யார்க் நகரின் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பங்கெடுக்கும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

வயது முதிர்ந்தவர்களின் மனித உரிமைகள் ஊக்குவிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, ஐ.நா. தலைமையகத்தில், ஏப்ரல் 15, இத்திங்களன்று தொடங்கிய கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

வயதானவர்கள் குறித்து, புதிய ஒப்பந்தங்கள் கொண்டுவருவதைவிட, உலகளாவிய சட்டத்தில் ஏற்கனவே உள்ள உரிமைகள், வாழ்வின் எல்லா நிலைகளிலும், முழுமையாய் ஊக்குவிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பேராயர் அவுசா அவர்கள் வலியுறுத்தினார்.

அனைத்து தரப்பினரின் மனித உரிமைகளை ஊக்குவிப்பது, தலைமுறைகள் இடைவெளியின்றி, தலைமுறைகளுக்கு இடையே ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க உதவும் என்றும் உரைத்த பேராயர் அவுசா அவர்கள், நாம் யாரையும் பின்னுக்குத் தள்ளக் கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.  

வயதானவர்களின் ஞானத்தையும்,  அவர்களை சமுதாயத்தில் முழுமையாகப் பங்கெடுக்க வைப்பதன் மதிப்பையும், மதித்துப் போற்றுவதற்கு, கல்வி, பயிற்சி, வாழ்வு முழுவதும் தொடர் பயிற்சி போன்றவை அவசியம் எனவும், பேராயர் அவுசா அவர்கள் கூறினார். இந்த ஐ.நா. கூட்டம் ஏப்ரல் 18, வருகிற வியாழனன்று முடிவடையும். 

(வத்திக்கான் செய்தி)

Add new comment

1 + 3 =