Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மிக புகழ்பெற்ற தேவாலயத்தில் பெரும் தீ விபத்து - கவலையில் பிரான்சும் உலக திருச்சபையும்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள நோட்ரடாமில் ஒரு மிக புகழ்பெற்ற தேவாலயத்தில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளன. ஆனால், இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டு கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கிய பகுதி தீ விபத்தில் இருந்து தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவாலயத்தில் உள்ள ஏராளமான புராதனமான கலைப்பொருட்களை காப்பாற்றுவதற்காக சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இது குறித்து பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் 'இந்த தீ விபத்து ஒரு மிக மோசமான சோக நிகழ்வு' என்று வர்ணித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் எதுவும் இன்னமும் தெளிவாக தெரியவில்லை. இந்த தீ விபத்தினால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், 'மிகவும் மோசமான இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்' என்று கூறினார். மேலும் புகழ்பெற்ற இந்த தேவாலயத்தை மீண்டும் புதுப்பிக்க சர்வதேச அளவில் நிதி திரட்டும் திட்டத்தை தொடங்க முயற்சி செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேவாலயத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் சில சீரமைப்பு பணிகளின் காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவாலய சுவரில் சில வெடிப்புகள் ஏற்பட்டதையொட்டி, அந்த கட்டடத்தின் அமைப்புக்கு சேதம் ஏற்படக்கூடும் என அச்சத்தில் சீரமைப்பு பணிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், தேவாலயத்தில் இருந்து கிளம்பிய தீ பிழம்புகளை வேதனையுடன் பார்த்து கொண்டிருந்தனர். மக்களில் சிலர் வீதிகளில் அழுதவாறு காணப்பட்டனர். வேறு சிலர் பிரார்த்தனை பாடல்களை பாடியவாறு வேண்டினர். கத்தோலிக்க மக்கள் புனித வாரம் கொண்டாடவுள்ள சமயத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதை வேதனையுடன் மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பாரீஸில் உள்ள பல தேவாலயங்களிலும் இந்த தீ விபத்து ஏற்படுத்திய சோகத்தை பதிவு செய்யும் விதத்தில் தேவாலய மணிகள் ஒலித்தன. உள்ளூர் நேரப்படி, திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்த இந்த தீ விபத்து, மிக குறுகிய நேரத்திலேயே தேவாலயத்தின் மேற்கூரையை சேதப்படுத்தியது. மேலும், தேவாலயத்தில் இருந்த கண்ணாடிகளால் ஆன சாளரங்கள் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட உள்கட்டமைப்பு அமைப்பு ஆகியவை இந்த தீ விபத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
(BBC Tamil)
Add new comment