Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மாற்றுத் திறனாளிகளை சந்தித்து உற்ச்சாகமூட்டிய- திருத்தந்தை
ஏப்ரல் 25, வியாழன் இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரையும் நான் அன்புடன் வாழ்த்துகிறேன், குறிப்பாக, கேட்கும் திறனற்றவர்களையும், அவர்களின் நண்பர்கள், குடும்பத்தினரையும் சிறப்பான முறையில் வாழ்த்துகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த குழுவினரிடம் கூறினார்.
செவித்திறன் குறைபாடுள்ளோர் கழகங்களின் இத்தாலிய ஒன்றியத்தைச் சேர்ந்த உறுப்பினர்களையும், இக்கழகங்களினால் பயன்பெறுவோரையும், இவ்வியாழனன்று திருப்பீடத்தின் கிளமெந்தீனா அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இந்த ஒன்றியம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.
தூக்கியெறியும், மற்றும் புறக்கணிக்கும் கலாச்சாரம் பெருகியுள்ள இன்றைய காலத்தில், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கலாச்சாரத்தை வளர்க்க, செவித்திறன் குறைபாடுள்ளோர் கழகங்களின் இத்தாலிய ஒன்றியம், பல ஆண்டுகளாக முயன்றுவருகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இறைவனின் பிரசன்னத்தை செவிகளால் கேட்டு உணர்வதைவிட உள்ளத்தின் நம்பிக்கை வழியே உணர்வது மிகச் சிறந்தது என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செவித்திறனில் குறையுடையோர், தங்கள் உள்ளத்தில் உணரும் இறைவனை, பிறருக்கும் உணர்த்த முடியும் என்று கூறினார்.
இவ்வுலகின் பல்வேறு ஓலங்களுக்கு நடுவே இறைவனின் குரலைக் கேட்காமல் போகும் மக்களுக்கு, இறைவனின் சொற்களை மனதில் உணரும் பக்குவத்தை, செவித்திறனில் குறையுடையோர் சொல்லித்தர வேண்டும் என்று, திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
இத்தாலியிலும், உலகெங்கிலும், செவித்திறனில் குறையோடு வாழ்வோரை, இன்னும் குறிப்பாக, சமுதாயத்தின் ஓரங்களில் தள்ளப்பட்டோர் நடுவே இக்குறையுடன் வாழ்வோரை, இந்நேரத்தில், சிறப்பாக நினைவுகூர்கிறேன் என்று, திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.
அனைவரையும் உள்ளடக்கியதாக திருஅவை விளங்கவேண்டும் என்ற உண்மையை வலியுறுத்திக் கூற, செவித்திறன் குறையுடையோர் சக்தி மிகுந்த அடையாளமாக விளங்குகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.
மேலும், உயிர்ப்பு ஞாயிறைத் தொடர்ந்துவரும் எண் கிழமைகளில், உயிர்ப்பின் பல்வேறு பரிமாணங்களை வலியுறுத்தும் டுவிட்டர் செய்திகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வருகிறார்.இந்த ட்விட்டர் செய்தி இவர்களுக்கே என இருப்பதாக தோன்றிற்று.
"கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அவருடன், படைப்பாற்றல் மிக்க நமது நம்பிக்கை, இக்காலத்தின் பிரச்சனைகளைச் சந்திக்க எழுகிறது, ஏனெனில் நாம் தனியே இல்லை என்பதை உணர்கிறோம்" என்ற சொற்கள், ஏப்ரல் 25, இவ்வியாழனன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
Add new comment