Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மனித வாழ்வை அங்கீகரிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவியுங்கள் - திருத்தந்தை
இத்தாலியின் பிளாரன்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும், மாசற்றவர்களின் மருத்துவமனைகள் நிறுவனத்தின் எழுபது பேரை, மே 24, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைப்பினர், கடந்த அறுநூறு ஆண்டுகளாக, கைவிடப்பட்ட சிறார் மாண்புடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அளித்துவரும் அவர்களின் சேவைகளைப் பாராட்டினார்.
மாசற்றவர்களின் மருத்துவமனை, 15ம் நூற்றாண்டில், Filippo Brunelleschi என்ற செல்வந்தாரல் பிளாரன்ஸ் நகரில் அமைக்கப்பட்டது. இது, பெற்றோர் இல்லாத அல்லது கைவிடப்பட்ட சிறாரைப் பராமரிப்பதற்கென, ஐரோப்பாவில் எழுப்பப்பட்ட முதல் நிறுவனமாகும். பல்வேறு சேவைகள் மற்றும் நடவடிக்கைகள் வழியாக, சிறார் மற்றும் வளர்இளம் பருவத்தினரின் உரிமைகளை ஊக்குவிப்பதற்காக, இந்நிறுவனம் உழைத்து வருகிறது. இக்காலத்தில், சிறாரின் நிலைமை குறித்த ஆய்வுகளையும் இது மேற்கொண்டு வருகிறது.
புறக்கணிக்கப்பட்ட சிறார், குழந்தைப்பருவமும், வருங்காலமும் திருடப்பட்ட சிறார், பசி அல்லது போரிலிருந்து தப்பித்து, ஆபத்து நிறைந்த பயணங்களை மேற்கொள்ளும் சிறார் போன்றவர்களை, இக்காலத்தில் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பொருளாதார, சமுதாய மற்றும் கலாச்சார நிலைகளால், குழந்தை பிறப்பு என்ற சிறந்த கொடையைப் புறக்கணிக்கும் நிலையிலுள்ள அன்னையரால், குழந்தைகளின் வாழ்வு, கருவிலே மடிந்து விடுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, மனித வாழ்வை மதிக்கும் ஒரு கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட வேண்டியது, எவ்வளவு முக்கியமாக உள்ளது என்றும் கூறினார்.
எந்த ஒரு தாயும், தனது குழந்தையைக் கைவிடும் நிலைக்கு உட்படக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கு, பல்வேறு நிலைகளில் பொறுப்புடன் கடமைகள் ஆற்றப்பட வேண்டும் என வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பாவிச் சிறாரைப் பராமரிக்கும் பிளாரன்ஸ் நிறுவனம், வரலாற்றில் சிறிய, பெரிய கதைகளைக் கொண்டிருக்கின்றது என்றும் கூறினார்.
(வத்திக்கான் செய்தி - மே 25, 2019)
Add new comment