Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
போரை எதிர்த்து குரல் எழுப்பிவந்த திருத்தந்தையர்
கடந்த நூறு ஆண்டுகளை மீள்பார்வை செய்யும் வேளையில், மனித குடும்பத்தைப் பிணைப்பதும், பொதுவான நலனை வளர்ப்பதும் திருஅவையை வழிநடத்திச் சென்ற கொள்கைகளாக இருந்ததைக் காணலாம் என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஒரு பன்னாட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.
"1919லிருந்து 2019 வரை கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையே அமைதிக்காக நம்பிக்கை" என்ற மையக்கருத்துடன், மிலான் நகரின் திரு இருதய கத்தோலிக்கப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், மே 14, இச்செவ்வாயன்று உரை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட்
"திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட் துவங்கி, திருத்தந்தை பிரான்சிஸ் வரை, மனித குடும்பத்தின் ஒருங்கிணைப்பு" என்ற தலைப்பில் கர்தினால் பரோலின் அவர்கள் வழங்கிய உரையில், கடந்த நூறு ஆண்டுகளில் ஒவ்வொரு திருத்தந்தையரும் மனிதகுலத்தை ஒருங்கிணைக்க ஆற்றிய பணிகளை சிறப்பாக குறிப்பிட்டுப் பேசினார்.
'பொருளற்ற படுகொலை' என்று முதல் உலகப்போரை குறிப்பிட்ட திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட் அவர்கள், தன் பணிக்காலம் முழுவதும், போரை எதிர்த்து குரல் எழுப்பிவந்தார் என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
பதினோராம், மற்றும் பன்னிரண்டாம் பயஸ்
இரண்டாம் உலகப்போரின் இருள் பரவி வந்த காலத்தில் பணியாற்றிய திருத்தந்தையர், பதினோராம் பயஸ், மற்றும் பன்னிரண்டாம் பயஸ் இருவரும், போரை வன்மையாகக் கண்டனம் செய்தனர் என்றும், "அமைதியால் நாம் எதையும் இழப்பதில்லை, போரினால் அனைத்தையும் இழக்கிறோம்" என்று பன்னிரண்டாம் பயஸ் அவர்கள் கூறிய சொற்களையும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் நினைவு கூர்ந்தார்.
திருத்தந்தை 23 ஆம் ஜான் - 'உலகில் அமைதி'
திருத்தந்தை 23 ஆம் ஜான் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் வழியே மனித குலத்தின் ஒற்றுமையை வலியுறுத்தினார் என்றும், 'உலகில் அமைதி' என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட திருமடல், கியூபா மோதலையும், அவ்வேளையில், உலகை அச்சுறுத்திய மற்றொரு உலகப்போரையும் மனதில் கொண்டு எழுதப்பட்டது என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.
ஐ.நா.அவையில் முதன்முதலாக உரையாற்றிய பெருமை பெற்ற திருத்தந்தை 6 ஆம் பவுல் அவர்கள், தொடர்ந்து பல பன்னாட்டுப் பயணங்களில், அமைதியையும், மனித குல ஒன்றிப்பையும் வலியுறுத்தியுள்ளார் என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தையர் 2 ஆம் ஜான்பால், 16 ஆம் பெனடிக்ட்
திருத்தந்தையர் 2 ஆம் ஜான்பால், மற்றும், 16 ஆம் பெனடிக்ட் ஆகிய இருவரும், அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தலில் வாழ்ந்த உலகிற்கு, நம்பிக்கை தரும் நல்ல கருத்துக்களை வழங்கிவந்தனர் என்பதை, எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்தார், கர்தினால் பரோலின்.
மனித குலம் சந்திக்கும் உலகமயமாக்கல், அக்கறையற்ற மனநிலை, மற்றும் படைப்பிற்கு இழைக்கப்படும் கொடுமை என்ற பல தளங்களில் அமைதியும், ஒற்றுமையும் குலைந்து வருவதை, தற்போது தலைமைப்பணியாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டி, அழைப்பு விடுத்துவருகிறார் என்பதை, திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையின் இறுதியில் விளக்கிக் கூறினார்.
(வத்திக்கான் செய்தி - 16 மே, 2019)
Add new comment