பூமி காப்பாற்றப்பட திருத்தந்தை சொன்னதென்ன


Centesimus Annus Pro Pontefice அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் பங்குகொண்டவர்கள் சந்திப்பு (Vatican Media)

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பதற்கு, இதயங்களிலும் மனங்களிலும் ஏற்படுகின்ற உண்மையான மனமாற்றம் அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, தன்னை சந்திக்க வந்திருந்த ஒரு குழுவினரிடம் கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றுரைத்த திருத்தந்தை, ஐ.நா. வின் வளர்ச்சித்திட்ட இலக்குகளை, பல நாடுகள் நடைமுறைப்படுத்தி வருவது பற்றி பாராட்டினார்.

புதுப்பிக்கதக்க மற்றும் நீடித்த நிலையான சக்தியில் முதலீடு செய்வது, புதிய முறைகளில் எரிசக்தி கையாளப்படுவது, உலகளவில், குறிப்பாக இளையோர் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போன்றவை அதிகரித்துள்ளது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் எண்ணற்ற சவால்கள் உள்ளன. எனினும், நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து முயற்சிகளை எடுக்குமாறும், இதற்கு, மக்களில் மனமாற்றம் அவசியம் என்றும், திருத்தந்தை கூறினார்.

பசி, உணவு பாதுகாப்பின்மை, வீணாக்கும் கலாச்சாரம் உட்பட, உலகில் நிலவும் தற்போதைய பிரச்சனைகளுக்கு அளிக்கப்படும் தீர்வுகள், மேலெழுந்தவாரியாக இருத்தலாகாது எனவும், இதற்கு, மக்களை மையப்படுத்தும், அறநெறிசார்ந்த புதுப்பிக்கப்பட்ட கண்ணோட்டம் அவசியம் எனவும் திருத்தந்தை கூறினார்.

ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை ஊக்குவிக்க வேண்டும் என்றும், இதற்கு, உலகளாவிய வளர்ச்சித்திட்ட அமைப்புகளில் மாற்றம் தேவை என்றும் உரைத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்முயற்சியில் நம் வானகத்தந்தையின் இரக்கமுள்ள அன்பில் நம்பிக்கை வைத்து, முன்னோக்கிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். (vatican news)

Add new comment

13 + 1 =