புர்கினா ஃபாசோவில் தாக்குதலில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்


பதட்ட நிலையிலிருக்கும் BURKINA FASO நாடு பதட்ட நிலையிலிருக்கும் BURKINA FASO நாடு (AFP or licensors)

மேற்கு ஆப்ரிக்க நாடாகிய புர்கினா ஃபாசோவில், பிரிந்த கிறிஸ்தவ சபையின் ஆலயம் ஒன்று, தாக்கப்பட்டதில் இறந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார்.

புர்கினா ஃபாசோ நாட்டின் வடக்கேயுள்ள Silgadji பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயத்தில், ஏப்ரல் 28, இஞ்ஞாயிறன்று, வழிபாடு முடிந்துகொண்டிருந்தவேளையில், நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் ஆறு பேர் இறந்துள்ளனர். இத்தாக்குதல் குறித்து வெளியான செய்திகளின்படி, இரு சக்கர மோட்டார் வாகனத்தில் வந்த ஆயுதம் ஏந்திய மனிதர்கள், நடத்திய துப்பாகிச்சூட்டில், அவ்வாலயப் போதகர் Pierre Ouedraogo, அவரின் இரு மகன்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிகின்றது.

திருத்தந்தையின் செபம்

இந்நிகழ்வு குறித்து, வத்திக்கான் செய்திகளிடம் பேசிய, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இடைக்கால இயக்குனர், அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், புர்கினா ஃபாசோவில், கிறிஸ்தவ ஆலயம் மீது நடத்தப்பட்டுள்ள இப்புதிய தாக்குதல் குறித்த செய்தி அறிந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் கவலையடைந்தார் என்று தெரிவித்தார்.

இத்தாக்குதலில் இறந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் அந்நாட்டின் கிறிஸ்தவ சமுதாயத்திற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபிக்கின்றார் என்றும், ஜிசோத்தி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

சகிப்புத்தன்மையிலிருந்து வன்முறை

சமய சகிப்புத்தன்மை நிறைந்த வரலாற்றைக் கொண்டிருக்கின்ற, மேற்கு ஆப்ரிக்க நாடாகிய புர்கினா ஃபாசோவில், தற்போது முதன்முறையாக, ஒரு வழிபாட்டுத் தலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் மக்கள் தொகையில், ஏறத்தாழ அறுபது விழுக்காட்டினர் முஸ்லிம்கள் மற்றும், ஏறத்தாழ இருபத்தைந்து விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். அந்நாட்டில் பிரிவினைவாத வன்முறைகள் அண்மை மாதங்களாகவே இடம்பெற்று வருகின்றன.

2016 ஆம் ஆண்டிலிருந்து, ஆயுதம் ஏந்திய குழுக்களால், கிராமங்கள், பள்ளிகள் மற்றும், மருத்துவமனைகள் மீது, 200க்கும் அதிகமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள்ளனர். தற்போது, பத்து இலட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு, மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என, ஐ.நா. கூறியுள்ளது. 

(வத்திக்கான் செய்தி - 01 மே 2019)

Add new comment

8 + 12 =