புதிய, உறுதியான, எல்லாரையும் ஈடுபடுத்தும் இந்தியா..


பிரதமர் நரேந்திர மோடியுடன் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ். PC: Vatican News

புதிய, வலுவான மற்றும், எல்லாரையும் ஈடுபடுத்தும் ஓர் இந்தியாவை உருவாக்குவதற்கு, நாம் எல்லாரும் உழைப்போம் என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும், இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கவிருக்கும், நரேந்திர மோடி அவர்களுக்கும், இந்திய கத்தோலிக்கத் திருஅவை சார்பில், வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

இளையோர், பெண்கள், குறிப்பாக, கிராமப்புற பெண்கள் போன்றோரின் முன்னேற்றத்திற்கு நம்பிக்கை மற்றும் சக்தியளிக்கும், புதியதோர் இந்தியாவை உருவாக்குவதற்கு, இந்திய கத்தோலிக்கத் திருஅவை ஒத்துழைப்பு வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார், கர்தினால் கிரேசியஸ்.

விவசாயிகளின் வளர்ச்சிக்கு, புதிய வழிகளையும், நீடித்த நிலையான வாய்ப்புக்களையும் வழங்குகின்ற, யாரையும் ஒதுக்காத பொருளாதாரத்தை உறுதிப்படுத்துகின்ற புதியதோர் இந்தியா உருவாக்கப்படவும், அத்தகைய இந்தியாவில், அனைவரும் அமைதி மற்றும் வளமையை அனுபவிக்க இயலும், தொடர்ந்து முன்னேற்றங்கள் இடம்பெறும் எனவும், தனது மடலில் வாழ்த்தியுள்ளார் மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ்.

பாரதிய ஜனதா கட்சி, இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முக்கிய பங்கு வகித்த, அக்கட்சியின் தலைவர், அமித் ஷா அவர்களுக்கும், இந்திய கத்தோலிக்கத் திருஅவை சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளார் கர்தினால் கிரேசியஸ்.

இந்தியாவில், கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியிலிருந்து, மே 19 ஆம் தேதி வரை, ஏழு நிலைகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில், லோக் சபாவின் 543 இடங்களில், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி 353 இடங்களைப் பெற்று வெற்றியடைந்துள்ளது.

நரேந்திர மோடி அவர்கள், இந்தியாவின் பிரதமராக, இரண்டாவது முறையாக, மே 30, வருகிற வியாழனன்று பதவியேற்கிறார்.

(Fides - மே 29, 2019) 

Add new comment

1 + 0 =