பிரிவினையை மாற்றி ஒன்றிப்புக்கு திருத்தந்தை செய்தது என்ன தெரியுமா


Patriarch Sviatoslav tells the Pope about potential unification. PC: risu.org.ua

உலகில் ஒரே அமைப்பாக, கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்துவந்த கிறிஸ்தவத்தில், 1054 ஆம் ஆண்டில் பெரிய பிரிவினை ஒன்று உருவாகி, கிழக்கில் ஆர்த்தடாக்ஸ் சபை, மேற்கில் உரோமன் கத்தோலிக்கத் திருஅவை என, இரண்டாகப் பிரிந்தது. இதற்குப் பின்னாளில் தலைமைத்துவத்தை ஏற்ற கத்தோலிக்கத் திருத்தந்தையர், ஆர்த்தாடக்ஸ் கிறிஸ்தவ சபைகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்தனர். 1999 ஆம் ஆண்டு, மே மாதத்தில், புனித திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் அவர்கள், ருமேனியாவுக்கு, திருத்தூதுப்பயணம் மேற்கொண்டார்.

அப்பயணம், 1054 ஆம் ஆண்டிற்குப் பின்னர், ஒரு கத்தோலிக்க திருத்தந்தை, ஆர்த்தாடக்ஸ் கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் ருமேனியாவுக்கு மேற்கொண்ட முதல் திருத்தூதுப்பயணமாகவும், ஆர்த்தாடக்ஸ் சபையுடன் நல்லுறவை உருவாக்கும் முயற்சியாகவும் அமைந்தது. மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த நாடுகளில், கம்யூனிசம் வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் என, உலகளவில் போற்றப்பட்ட புனித திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் அவர்கள், ருமேனியாவில் நல்வரவேற்பையும் பெற்றார். அச்சமயத்தில், தலைநகர் புக்காரெஸ்ட்டில் மட்டுமே பயண நிகழ்வுகளை நிகழ்த்துவதற்கு, ஆர்த்தடாக்ஸ் சபை, திருத்தந்தைக்கு அனுமதியளித்தது.

அந்நாட்டில் கத்தோலிக்கர் பெரும்பான்மையாக வாழ்கின்ற டிரான்சில்வேனியப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதியளிக்கவில்லை. ஆயினும், இது நடைபெற்று இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ருமேனியாவில் மேற்கொண்ட மூன்று நாள்கள் (மே,31-ஜூன்02, 2019) திருத்தூதுப் பயணத்தில், புக்காரெஸ்ட் நகரிலிருந்து, வடகிழக்காக மோல்டோவா எல்லையிலுள்ள Iasi நகர் வரையிலும், வடமேற்காக, டிரான்சில்வேனிய மாநிலத்திலுள்ள பிளாஜ் நகருக்கும், சுமுலியு சுக் அன்னை மரியா திருத்தலத்திற்கும் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டார். மழை பெய்து சகதியால் நிறைந்திருந்த வளாகத்தில், திறந்தவெளித் திருப்பலியையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றினார்.

மேலும், ஆர்த்தாடக்ஸ் சபையுடன் உள்ள திறந்த காயங்களைச் சரிசெய்யும் விதமாக, புக்காரெஸ்ட் நகர், மக்களின் மீட்பு ஆர்த்தடாக்ஸ் புதிய பேராலயத்தில், ருமேனிய ஆர்த்தாடக்ஸ் சபைத் தலைவர் முதுபெரும்தந்தை டானியேல் அவர்களுடன் சேர்ந்து செபித்தார் திருத்தந்தை. அச்சபையின் மாமன்றத்திலும் உரையாற்றினார். பழங்காலத் தவறுகளையும், முற்சார்பு எண்ணங்களையும் மறந்து, பொதுவான இலக்கு நோக்கி ஒன்றிணைந்து நடைபயில்வோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

Add new comment

4 + 3 =