Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பல்கேரியா, வட மாசிடோனியா திருத்தூதுப்பயணங்கள் - திருத்தந்தை
பல்கேரியாவின் பாராளுமன்றத் தலைவர் Tsveta Valcheva Karayancheva அவர்களையும், வட மாசிடோனியா குடியரசின் பாராளுமன்றத் தலைவர் Talat Xhaferi அவர்களையும், வத்திக்கானில், மே 24, இவ்வெள்ளியன்று, தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அந்நாடுகளில் அண்மையில் தான் மேற்கொண்ட திருத்தூதுப்பயணங்களில் தனக்களித்த மாபெரும் இனிய வரவேற்பிற்கு நன்றியும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புகள் பற்றி செய்தியாளர்களிடம் அறிவித்த, திருப்பீட இடைக்கால செய்தி தொடர்பாளர், அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியஸ் விழாவையொட்டி வத்திக்கானில் சந்தித்த, பல்கேரிய உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவிடம், அந்நாட்டில் வயது முதிர்ந்தவர்கள் பராமரிக்கப்படும் முறையும், Rakovski நகரில் 245 சிறார் முதல்முறையாக நறக்கருணை வாங்கிய நிகழ்வும், தன்னை மிகவும் கவர்ந்ததாக, திருத்தந்தை தெரிவித்தார் என்று கூறினார்.
மேலும், பல்கேரிய பிரதிநிதிகள் குழுவில் வந்திருந்த ஆர்த்தடாக்ஸ் சபை குரு அந்தோனி அவர்களை வாழ்த்திய திருத்தந்தை, பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை Neofit அவர்கள் மீத தனக்குள்ள நன்மதிப்பு பற்றியும், அவர், விசுவாசம், மற்றும் தாழ்மையுள்ளம் கொண்ட மனிதர் எனவும் பாராட்டினார்.
வட மாசிடோனிய குழு
வட மாசிடோனியா குடியரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவிடம், அந்நாட்டில் தனக்கு கிடைத்த பெரும் வரவேற்பிற்கு, அரசு அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Skopje நகரில் நிறைவேற்றிய திருப்பலி, கல்கத்தா புனித அன்னை தெரேசா நினைவிடம் சென்றது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வின் முக்கிய அடையாளமாக அமைந்த, பல்வேறு மதங்களைச் சார்ந்த மாசிடோனிய இளையோரைச் சந்தித்தது தன் உள்ளத்தைத் தொட்டது என்று கூறினார். இந்நாட்டினர், ஐரோப்பாவில் கிறிஸ்தவம் நுழைவதற்கு வாயிலாக உள்ளனர் எனவும் திருத்தந்தை பாராட்டினார்.
(வத்திக்கான் செய்தி - மே 25, 2019)
Add new comment