Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நோயாளிகள், எண்களாக அல்லாமல், மனிதர்களாக நடத்தப்பட
மருத்துவத் துறையில், புதிய தொழில்நுட்பங்களால் வழங்கப்படும் வாய்ப்புகள் அனைத்தும், நன்னெறிப்படி சரியானவையே என பலர் நம்புகின்றவேளை, மனிதர்மீது நடத்தப்படும் எந்தவொரு மருத்துவ பரிசோதனைகள் அல்லது சிகிச்சைகள், மனிதரின் வாழ்வையும், மாண்பையும் மதிக்கின்றனவா என முதலில் கவனமுடன் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.
இத்தாலிய கத்தோலிக்க நலவாழ்வு பணியாளர் அமைப்பு (ACOS) துவங்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டையொட்டி, அந்த அமைப்பின் ஏறத்தாழ 300 பிரதிநிதிகளை, மே 17, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த பல ஆண்டுகளாக, மருத்துவத் துறையில், புதிய தொழில்நுடபங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும், பரிசோதனைகளும், சிகிச்சைகளும், நன்னெறிப் பண்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்று கூறினார்.
ஒவ்வொரு மனிதரும் தனித்துவமிக்கவர்கள் என்று போதித்த கிறிஸ்துவின் மனிதத்தை நோக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நோயாளிகளை, எண்களாகவோ அல்லது கருவிகளாகவோ நோக்காமல், அவர்கள் ஒவ்வொருவரும் மனிதர்களாகப் பார்க்கப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குணப்படுத்தல், உடலை மட்டுமல்ல, ஆன்மாவையும் சார்ந்தது என்பதை நினைவுபடுத்திய திருத்தந்தை, இந்த அமைப்பினர், சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கும், உதவி தேவைப்படுகின்றவர்களுக்கும் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.
நோயாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளோர், உதவி அதிகம் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள் என்றும், திருத்தந்தை கூறினார். கத்தோலிக்க நலவாழ்வு பணியாளர் அமைப்பு, செபம் மற்றும் இறைவார்த்தைக்கு எப்போதும் விசுவாசமாக இருந்து, தங்கள் அமைப்பின் கொள்கைகளுக்கு உயிரூட்டம் அளிக்குமாறு கூறியத் திருத்தந்தை, தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
(வத்திக்கான் செய்தி - மே 18, 2019)
Add new comment