Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நோத்ரு தாம் தீயிலிருந்து காப்பாற்றப்பட்ட புனிதப் பொருள்கள்
ஏப்ரல் 15, திங்கள் மாலை, நோத்ரு தாம் பேராலயத்தில் எரிந்துகொண்டிருந்த தீ அணைக்கப்படுவதற்கு முன்பே, பிரான்ஸ் அரசுத்தலைவர், இம்மானுவேல் மக்ரோன் அவர்கள், அப்பேராலயம் மீண்டும், முன்னைவிட அழகாகக் கட்டி முடிக்கப்படும் என்று அறிவித்ததும், ஏப்ரல் 16, செவ்வாய் பிற்பகல் நேரத்திற்குள், 70 கோடி யூரோக்கள் நிதி உதவிக்கு உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.
மேலும், இப்பேராலயத்தின் கட்டுமானப் பணிகள் மிக விரைவில் துவங்கப்பட்டு, 2024ம் ஆண்டு, பாரிஸ் மாநகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் போது, பேராலயம், ஓரளவாகிலும் மறுசீரமைக்கப்பட்டு, மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் என்று தான் நம்புவதாக, மக்ரோன் அவர்கள் கூறியுள்ளார்.
முள்முடியும், ஏனைய புனிதப்பொருள்களும்
இயேசு கிறிஸ்து தன் பாடுகளின்போது அணிந்திருந்ததாகச் சொல்லப்படும் முள்முடி, அவர் அறையப்பட்ட சிலுவையின் ஒரு பகுதி, மற்றும் கிறிஸ்துவை சிலுவையில் பிணைத்த ஆணிகளில் ஒன்று, என, மிக முக்கியமான புனிதப் பொருள்களுடன், பிரெஞ்சு நாட்டின் புனிதர்கள் பலரின் புனிதப் பொருள்களும், இந்தப் பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன என்று CNA செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
தீயணைப்பு வீரர்களின் மனிதச் சங்கிலி
மேலும், தீயின் நடுவே, தீயணைப்பு வீரர்கள் மனிதச் சங்கிலியை உருவாக்கி, அனைத்து புனிதப் பொருள்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றினர் என்றும், கிறிஸ்துவின் முள்முடி, மற்றும் பேராலயத்தின் நற்கருணைப் பேழையில் வைக்கப்பட்டிருந்த நற்கருணைகள், தீயணைப்புப் படையினரின் ஆன்மீக வழிகாட்டி, அருள்பணி Jean-Marc Fournier அவர்களால் முதலில் காப்பாற்றப்பட்டன என்றும் CNA செய்தி கூறுகிறது.
பேராலயத்தின் கோபுரத்தில் ஒரு சில புனிதப் பொருள்கள் பதிக்கப்பட்டிருந்தன என்றும், கோபுரம் தீயினால் முற்றிலும் எரிந்து விழுந்தபோது, இந்தப் புனிதப் பொருள்களும் எரிந்து போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பீடம், சிலுவை, இசைக்கருவி
பேராலயத்தின் நடுவே அமைந்திருந்த பீடமும், பீடத்திற்குப் பின்புறம் வைக்கப்பட்டிருந்த தங்க சிலுவையும் தீயினால் தீண்டப்படாமல் இருந்தன என்றும், 15ம் நூற்றாண்டு முதல், இந்த ஆலயத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த மாபெரும் இசைக்கருவியான ‘ஆர்கனு’ம் தீயினால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
இப்பேராலயத்திற்குப் புகழ் சேர்க்கும் வண்ணம் அமைந்திருந்த பெரும் வண்ணக் கண்ணாடி ஓவியங்களும், அவற்றைத் தாங்கி நின்ற மரச்சட்டங்களும் தீயிலிருந்து காக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.
நோத்ரு தாம் பேராலயத்தின் முன்புறம் அமைந்துள்ள இரு கோபுரங்களைக் காப்பதற்கு, தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட போராட்டம் வெற்றியளித்தது என்பதும், அவ்விரு கோபுரங்களும், அவற்றில் வைக்கப்பட்டிருந்த ஆலய மணிகளும் காக்கப்பட்டன என்பதும், குறிப்பிடத்தக்கன.
(CNA)

Add new comment