Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நூற்றாண்டு காணும் Lungro திருஆட்சிப் பீடத்திற்கு வாழ்த்து
இத்தாலியின் Lungro பைசான்டைன் கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஆட்சிப் பீடம் உருவாக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் ஏறத்தாழ ஆறாயிரம் விசுவாசிகளை, மே 25, இச்சனிக்கிழமையன்று, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அண்மை நூற்றாண்டுகளில் ஆண்டவர் உங்கள் திருஅவை குழுமத்திற்கு ஆற்றியுள்ள நன்மைகள் மற்றும் இரக்கத்தை நினைத்து, நன்றி சொல்வதற்கு இந்த யூபிலி ஆண்டு, நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றுரைத்த திருத்தந்தை, நம் உண்மையான மகிழ்வின் ஊற்றாகிய ஆண்டவரை, உங்களிலும், உங்கள் மத்தியிலும், மேலும் அதிகமாக அன்புகூருங்கள் என்று, Lungro விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.
திருவருள்சாதனங்களில் பங்குகொள்ளுதல், ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போர்மீது கவனம் செலுத்துதல், இளைய தலைமுறைகளுடன் பயணித்தல், ஒவ்வொரு குடும்பத்துடனும் நெருக்கமாக வாழ்தல் போன்றவற்றால், ஆண்டவர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துமாறும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
வெறுப்பைவிட அன்பும், பகைமையைவிட நட்பும், மோதல்களைவிட உடன்பிறந்த உணர்வும் மிகவும் அழகானவை என்பதற்குச் சாட்சி சொல்லும், கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், திருத்தந்தை கூறினார்.
நூறாம் ஆண்டைச் சிறப்பிக்கும் இக்கத்தோலிக்கருக்கு, தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Lungro திருஆட்சிப்பீடத்தைச் சார்ந்த அனைவருக்கும் தனது ஆசீரை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இத்தாலியின் கலாபிரியா மற்றும் பசிலிகாத்தா பகுதியில் வாழ்கின்ற, இத்தாலிய- அல்பேனிய இன மக்களுக்காக, 1919ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி, Lungro திருஆட்சிப்பீடம் உருவாக்கப்பட்டது.
(வத்திக்கான் செய்தி - மே 26, 2019)
Add new comment