நீதிபதிகளின் பொறுப்புகுறித்து திருத்தந்தை சொன்னது


Pope Francis meets judges. PC;America Magazine.org

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நுணுக்கமான பல சட்டங்கள் உலகெங்கும் பெருகிவந்தாலும், அடிப்படையில் மதிக்கப்படவேண்டிய மனித உரிமைகள் பறிக்கப்பட்டு வருவது, வேதனை நிறைந்த புதிராக உள்ளது என்று கூறினார்.

உலகின் அனைத்து நாடுகளிலும், நீதிகிடைக்காமல் தவிப்பதில் பெரும்பாலானோர் வறியோர் என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோரின் காலணிகளில் நம்மையே பொருத்திப் பார்க்கவேண்டும் என்ற வழக்கமான சொற்றொடரைப் பயன்படுத்திய அதே மூச்சில், வறியோருக்குக் காலணிகளும் கிடையாது என்பதை எடுத்துரைத்தார்.

நீதித்துறை சந்திக்கும் சவால்கள்

நீதித்துறை எடுக்கவேண்டிய முடிவுகளில், அரசியல்வாதிகளின் ஆதிக்கமும், ஊடகங்களின் செயல்பாடுகளும் பெருமளவு ஊடுருவியிருப்பதால், நீதிபதிகள், நடுநிலையோடு தீர்ப்பு வழங்க இயலாமல் போகிறது எனபதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில், வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

நீதிபதிகளின் பங்கு

மனித சமுதாயத்தில் மிகவும் வலுவிழந்து நிற்கும் மக்களுக்கு உதவுவது, நீதிபதிகள் முன் இருக்கும் மிகப்பெரும் பொறுப்பு என்று திருத்தந்தை தன் உரையின் இறுதியில் வலியுறுத்திக் கூறினார்.

தனி மனித மாண்பை முதன்மைப்படுத்தி, நீதியை நிலைநிறுத்தும் மிகக் கடினமானப் பணியை ஆற்றுவதற்கு, துணிவுடன் செயல்படுவதன் வழியே, சமுதாய மாற்றங்களைக் கொணரும் சிற்பிகளாக நீதிபதிகள் மாறமுடியும் என்று

சமுதாய உரிமைகளும், பிரான்சிஸ்கன் கொள்கையும் என்ற தலைப்பில், சமூகவியல் பாப்பிறைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த 100க்கும் அதிகமான நீதிபதிகள் கலந்துகொண்டஅனைத்து அமெரிக்க நீதிபதிகளின் உச்சி மாநாட்டில்,  திருத்தந்தை கூறினார்.

உச்சிமாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கையெழுத்திட்டனர்.

ஒரு சிலரிடம் செல்வம் குவிகிறது

மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள ஒருசிலரது கரங்களில், உலகின் பெரும்பான்மை செல்வங்கள் குவிந்து வருவதையும், கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை நலவாழ்வும், மனித மாண்பும் குறைந்து வருவதையும் நாங்கள் கவனத்தில் கொள்கிறோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நீதிபதிகள் என்ற பொறுப்பில் இருக்கும் நாங்கள், மனித உரிமைகளை நிறைவேற்றவும், அதனை துணிவுடன் நடைமுறைப்படுத்தவும் எழுந்துள்ள மிகப்பெரும் தேவையையும் உணர்கிறோம் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் சமமான உரிமைகள்

அனைத்து நலன்களும், பொருளாதார, சமுதாய, மற்றும் கலாச்சார உரிமைகளும், மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதற்கு, அரசுகள், தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, நீதிபதிகள் இவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், ஒரு சிலரது தன்னல செயல்பாடுகளால், பூமிக் கோளத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இழைக்கப்படும் அழிவுகள் நிறுத்தப்படவும், பாரிஸ் மாநகரில் எடுக்கப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படவும், அனைத்து நாடுகளும் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்பதையும், நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

பூமிக்கோளத்தைக் காப்பதற்கும், மனித மாண்பை நிலைநிறுத்தவும், உலக அமைதியைக் கொணரவும், மனித உரிமைகளை உண்மையாக்கவும், அமெரிக்க கண்டத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும், இணைந்து செயலாற்றவேண்டும் என்று, இவ்வறிக்கையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.

Add new comment

1 + 19 =