திருத்தந்தை அன்னை மரியா பற்றி சொன்னது இதுதான்


Pope Francis and Mother Mary. PC: Aleteia.org

மரியா பயணிக்கிறார். நாசரேத்திலிருந்து, எலிசபெத், சக்கரியாவின் இல்லத்திற்கு. இது மரியா மேற்கொண்ட முதல் பயணம். இதன்பின்னர், அவர், இயேசுவின் பிறப்பிற்காக, கலிலேயாவிலிருந்து பெத்லகேமுக்கு; குழந்தையை, ஏரோதிடமிருந்து காப்பதற்காக, எகிப்துக்கு; ஒவ்வோர் ஆண்டும், பாஸ்கா விழாவில், எருசலேமுக்கு (காண்க லூக்கா 2:31). இறுதியில், இயேசுவைத் தொடர்ந்து, கல்வாரிக்கு, மரியா பயணிக்கிறார். இந்த பயணங்கள் அனைத்திலும் ஒரு பொதுவான அம்சம் உள்ளது: அவை எளிதானவையாக இல்லை; அவற்றை மேற்கொள்ள துணிவும், பொறுமையும் தேவைப்பட்டன.

பயணிக்கும் மரியாவை தியானிக்கும்போது, இந்நாட்டில், தியாகங்களையும், பக்தி முயற்சிகளையும் மேற்கொண்ட அன்னையரை, பாட்டிமார்களை எண்ணிப்பார்க்கிறோம். அமைதியாக, உறுதியாக, அவர்கள், தங்கள் குழந்தைகளுக்காகவும், குடும்பங்களுக்காகவும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், எதிர்நோக்கினர் (உரோமையர் 4:18). மரியாவையும், இந்நாடுகளின் அன்னையரையும் எண்ணிப்பார்க்கும்போது, நம் உள்ளங்களில் நம்பிக்கை எழுகிறது. நாம் அழுத்தந்திருத்தமாகச் சொல்வோம்: நம் மக்களில் எதிர்நோக்கிற்கு அதிக இடம் உண்டு.

மரியா, வயதில் முதிர்ந்த எலிசபெத்தைச் சந்திக்கிறார் (காண்க லூக்கா 1:39-56). வயதில் முதிர்ந்தவர் என்றாலும், எலிசபெத்துதான், தூய ஆவியாரால் நிறைக்கப்பட்டு, எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறார். நற்செய்தியில் இடம்பெறும் "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" (காண்க யோவான் 20:29) என்ற இறுதி பேற்றினுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். இங்கு இளமையும், முதுமையும், ஒன்று மற்றதன் மிகச் சிறந்ததை தூண்டி எழுப்பும்வண்ணம் சந்திக்கின்றன.

நமக்குள்ளேயே தங்கிவிடாமல், வெளியேறிச் செல்ல, தூய ஆவியார் நம்மைத் தூண்டுகிறார். அதே ஆவியானவர், வெளித்தோற்றங்களைத் தாண்டி பார்க்கும்படியும், மற்றவர்களில் உள்ள நல்லவற்றைப் பற்றி பேசவும் தூண்டுகிறார். இதுவே சந்திக்கும் கலாச்சாரத்தின் பண்பு. கிறிஸ்தவர்களாகிய நாம், சந்திப்பின் வழியே, அனைவரையும் அரவணைத்து காக்கும் திருஅவையின் தாய்மையை உணர்கிறோம். பல்வேறு வழிபாட்டு முறைகளைச் சேர்ந்தவர்கள் சந்திக்கும்போது, ஒவ்வொருவரும் தாங்கள் எந்தப் பிரிவினர் என்பதை முன்னிறுத்தாமல், அனைவரும் இணைந்து, இறைவனைப் புகழும்போது, மாபெரும் செயல்கள் நிகழ்கின்றன. மீண்டும் நாம் அழுத்தந்திருத்தமாகக் கூறுவோம்: "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" (காண்க யோவான் 20:29).

மரியா, எலிசபெத்தைச் சந்திக்க பயணிப்பது, இறைவன் எங்கு வாழ விரும்புகிறார் என்பதை, நமக்கு நினைவுறுத்துகிறது. மக்களின் நடுவில், இறைவனின் புனித இடம் உறைந்துள்ளது, இறைவனின் இதயத்துடிப்பை, நாம் மக்களில் உணர முடியும்.

மரியா மகிழ்கிறார். ஏனெனில், அவர், 'கடவுள் நம்மோடு' எனப்படும் 'இம்மானுவேல்'ஐ, தன் உதரத்தில் தாங்கியுள்ளார். மகிழ்வு இல்லாமல், நாம் செயலற்று போகிறோம், துயரமான நிலைக்கு அடிமையாகிறோம். துயரம் மற்றும் மனத்தளர்ச்சியில் நாம் மிதந்து செல்லும்போது, நம் நம்பிக்கை தடுமாறுகிறது. அரும்பெரும் செயல்களை ஆற்றவல்ல (காண்க லூக்கா 1:49) இறைவனின் குழந்தைகள் நாம் என்பதை உணராமல், அனைத்தையும் நம் பிரச்சனைகளாக மட்டுமே மாற்றிவிடுகிறோம். மரியா நம் உதவிக்கு வருகிறார், அனைத்தையும் பிரச்சனைகளாக குறைத்துவிடாமல், ஆண்டவரைப் போற்றிப் பெருமைப்படுத்துகிறார்.

நம் மகிழ்வின் இரகசியத்தை இங்கு நாம் உணர்கிறோம். மரியா, பல பிரச்சனைகள் நடுவிலும், இறைவனின் மேன்மையிலிருந்து துவங்குகிறார். நம் உள்ளங்களை, ஆண்டவருக்கும், நம் சகோதரர், சகோதரிகளுக்கும் திறந்து வைக்கும்போது, ஆண்டவர் எப்போதும் அற்புதங்களை ஆற்றுகிறார் என்பதை, மரியா நமக்கு நினைவுறுத்துகிறார் என்று கூறியிருக்கிறார்.  

 

Add new comment

4 + 12 =