திருத்தந்தையின் புதுமையான ட்விட்டெர் செய்தி


இளையோருடன் திருத்தந்தை, பானமாவில் (ANSA)

தன் அன்பின் மிகுதியால், நம்மை மீட்பதற்காக, தன்னையே இயேசு கையளித்தார் என்ற கருத்தை மையமாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், ஏப்ரல் 15, இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"உன்னை மீட்பதற்காக, கிறிஸ்து, தன் அன்பின் மிகுதியால், தன்னையே முழுமையாகப் பலியாக்கினார். எதுவும் தன்னை தடை செய்யாது என்ற விருப்பத்துடன் அன்புகூரும் நண்பர் அவர் என்பதன் அடையாளமாக, சிலுவையில் விரிந்திருக்கும் அவரது கரங்கள் அமைந்துள்ளன" என்ற சொற்களை, திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

மேலும் ஏப்ரல் 14, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட குருத்தோலை ஞாயிறை மையப்படுத்தி, தன் முதல் டுவிட்டர் செய்தியையும், அதே ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட இளையோர் உலக நாளையொட்டி தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியையும் திருத்தந்தை இஞ்ஞாயிறு வெளியிட்டார்.

"தன்னையே தாழ்த்தியதன் வழியே, இயேசு, நமக்கு நம்பிக்கையின் பாதையைத் திறந்ததோடு, அப்பாதையில் அவரே நமக்கு முன் செல்லவும் ஆர்வம் கொண்டார்" என்பது, திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியாக இருந்தது.

"உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படும் இந்நாளில், இவ்வுலகின் இளம் புனிதர்களைப்பற்றி குறிப்பிட விரும்புகிறேன். சிறப்பாக, நமக்கு அடுத்த வீடுகளில், இறைவனுக்கு மட்டுமே தெரிந்த வகையில் வாழும் இப்புனிதர்கள் வழியே, அவர் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வெளியிட்ட இரண்டாம் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன. 

(வத்திக்கான் செய்தி)

Add new comment

1 + 16 =