தமிழ்நாடு டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன்: வலுக்கும் எதிர்ப்பு


Hydrocarbon plan implementation on paddy fields. PC; Puthiyathalaimurai

டெல்டாப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நல்லூர் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

விவசாயிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பருத்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திட்டத்தை உடனடியாக கைவிடாவிடில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரித்தனர். இதனிடையே கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அனைத்து அரசியல் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து பொதுவான அமைப்பின் கீழ் போராடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து தலவிருட்சமான தில்லை மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று அவர்கள் சுவாமியிடம் மனு கொடுத்து முறையிடும் நூதன போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Add new comment

2 + 16 =