Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தங்க பூமி மியான்மருக்கு தேவை இதுமட்டும்தான்
மியான்மார் நாடு, மீண்டும் ‘சுவர்ணபூமியாக’, அதாவது ‘தங்க நிலமாக’ மாறுவதற்கு, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் ஆயுத மோதல்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்று, யாங்கூன் பேராயர், கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறினார்.
மியான்மாரில் இடம்பெற்றுவரும் தேசிய ஒப்புரவு நடவடிக்கைக்கு ஆதரவாக, “தங்க நிலத்திற்குத் திரும்புங்கள் – அமைதியை அறுவடை செய்யுங்கள்” என்ற தலைப்பில், பொதுவான மடல் ஒன்றை எழுதியுள்ள கர்தினால் போ அவர்கள், இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மரம், எண்ணெய், எரிவாயு, விலைமதிப்பற்ற கற்கள், தாதுக்கனிகள் போன்ற நாட்டிலுள்ள அனைத்து வளங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், மியான்மார் மக்கள் மீது தனிப்பற்று வைத்துள்ள கடவுளின் கொடையாக, நாடு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மியான்மாரில் மாபெரும் வளங்கள் இருக்கின்றபோதிலும், தற்போது, தென் கிழக்கு ஆசியாவில் ஏழை நாடுகளில் ஒன்றாகவும் இந்நாடு உள்ளது என்றும் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், ஒருகாலத்தில், இப்பூமியின் சுவர்க்கமாக இருந்த மியான்மார், அறுபது ஆண்டுகால சர்வாதிகாரம் மற்றும் ஆயுதமோதல்களால் முடக்கப்பட்டுவிட்டது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர், பத்து இலட்சத்துக்கும் அதிகமான உள்நாட்டிலே புலம்பெயர்ந்துள்ளோர், கட்டாயச் சிறைவைப்பு மற்றும் அடிமைமுறையால், 40 இலட்சத்துக்கும் அதிகமான இளையோர், நாட்டைவிட்டு வெளியேறியிருப்பது, பொருளாதார நிலையால், ஒரு கோடிக்கு அதிகமானோர் புலம்பெயர்வு, ஏறத்தாழ 40 விழுக்காடு ஏழ்மை விகிதம் போன்றவற்றைப் பட்டியலிட்டுள்ளார், கர்தினால் போ.
மனிதர்களின் முட்டாள்தனம், தங்க பூமியை, பகல் கனவாக மாற்றியுள்ளது என்றும், மனிதரால் நிகழ்ந்த இந்நிலையை, முற்றிலும் எதிர்மாறான நிலைக்கு, நிரந்தரமாக மாற்ற இயலும் என்றும் கூறியுள்ளார், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான, கர்தினால் போ (AsiaNews).
Add new comment