Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கத்தோலிக்க அருள்பணியாளருக்கு பாகிஸ்தான் அரசின் விருது
கிறிஸ்தவ இஸ்லாமிய உரையாடலை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவருக்கு, பாகிஸ்தான் அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது. புனித தோமினிக் சபையைச் சேர்ந்த அருள்பணி ஜேம்ஸ் சன்னன் (James Channan) அவர்கள், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே, பாலங்களை உருவாக்கி வருவதற்காக, பாகிஸ்தான் அரசின் மத விவகாரங்கள் துறையின் அமைச்சர் Noor-ul-Haq Qadri அவர்கள் இவ்விருதை வழங்கியுள்ளார்.
இலாகூர் நகரில் நடைபெற்ற இவ்விருது விழாவில் அருள்பணி சன்னன் அவர்கள் பேசுகையில், தான் இப்பணியை நல்ல முறையில் செய்வதற்கு உதவிய இஸ்லாமிய நண்பர்களுக்கு சிறப்பான முறையில் நன்றி கூறினார்.
கடந்த 50 ஆண்டுகளாக புனித தோமினிக் சபையின் துறவியாக வாழும் அருள்பணி சன்னன் அவர்கள், 1978ம் ஆண்டு இறையியல் மாணவராக இருந்த காலத்திலிருந்து, இஸ்லாமிய, அரேபிய சிந்தனைகளையும் கற்றுத் தேர்ந்தார்.
இலாகூரில் அவர் உருவாக்கிய அமைதி மையத்தை, பல் சமய உரையாடல் திருப்பீட அவையின் முன்னாள் தலைவர், மறைந்த கர்தினால் Jean-Louis Tauran அவர்கள் திறந்து வைத்தார் என்று UCA செய்தி கூறுகிறது.
ஒருங்கிணைந்த மதங்களின் முனைப்பு - United Religions Initiative (URI) - என்ற அமைப்பின் ஆசிய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் அருள்பணி சன்னன் அவர்கள், இவ்வமைப்பு, பாகிஸ்தான் உட்பட 109 நாடுகளில் பணியாற்றுவதாகக் கூறினார்.
(UCAN - மே 30, 2019)
Add new comment