Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலக மயமாக்கப்பட்டு வருகிறது பாராமுகம் - திருத்தந்தை
இவ்வாண்டு சிறப்பிக்கப்பட உள்ள புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென 'புலம்பெயர்வோரைப் பற்றி மட்டுமல்ல' என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று, ஒரு செய்தியை வெளியிட்டார்.
இறையரசு இவ்வுலகில் மறைபொருளாக பிரசன்னமாக உள்ளது என்பதை நம் விசுவாசம் உறுதிச் செய்கின்றபோதிலும், இவ்வுலகில் எதிர்கொள்ளப்படும் அநீதிகளும், பாகுபாடுகளும், சமூக மற்றும் பொருளாதார சரிநிகரற்ற நிலைகளும், பெரும் தடைகளாக இருப்பதையும், மிகவும் ஏழை மக்களையே அவை பாதிப்பதையும் பார்த்து கவலையே அதிகரிக்கின்றது என, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார், திருத்தந்தை.
பாராமுகம் என்பது, இன்றையச் சூழலில், உலக மயமாக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம் பெயர்வோர், மிகவும் கீழ்த்தரமாக நோக்கப்பட்டு, இச்சமூகத்தின் அனைத்து தீமைகளுக்கும் அவர்களே காரணம் என்பதுபோல் நடத்தப்படுகிறார்கள் எனவும், தன் செய்தியில் கவலையை வெளியிட்டுள்ளார்.
ஆகவே, இன்றைய பிரச்னைக்குக் காரணம், புலம்பெயர்ந்தவர்கள் அல்ல, மாறாக, நாம் கொண்டிருக்கும் வீண் அச்சமே என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலவேளைகளில் நம் எண்ணங்கள் சகிப்பற்ற தன்மையுடையதாக, திறந்த மனமில்லாததாக, நம்மையறியாமலேயே இனவெறி கொண்டதாக இருப்பதே இதற்கு காரணம் எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார்.
இது புலம்பெயர்ந்தோர் பற்றியதல்ல, மாறாக நம் பிறரன்பு பற்றியது எனக்கூறும் திருத்தந்தை, பிறரன்பு செயல்கள் வழியாகவே நம் விசுவாசத்தை வெளிக்காட்ட முடியும் என கூறியுள்ளார்.
இந்த உலக நாள், புலம்பெயர்ந்தோர் பற்றியதல்ல மாறாக, நம் மனிதகுலம் பற்றியது, ஏனெனில் மனித குலம் என்பது, நம் அயலார்களுடனான கருணை உள்ளத்தால் பிணைக்கப்படவேண்டியது எனவும் கூறும் திருத்தந்தையின் செய்தி, இது புலம்பெயர்ந்தோரைப் பற்றியது அல்ல, மாறாக, எவரும் புறக்கணிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்குரியது எனவும் கூறுகிறது.
இது புலம்பெயர்ந்தோரைப்பற்றி மட்டுமல்ல, மாறாக, கடை நிலையில் இருப்போரை முதலிடத்திற்கு கொணர்வது, இறைவனின் கொடைகளை அனைவரும் முழுமையாகப் பெறவேண்டும் என எண்ணும் மக்கள் குலத்தைக் கொண்டது, கடவுளையும் மனிதரையும் உள்ளடக்கிய ஒரு நகரைக் கட்டியெழுப்புவதைப் பற்றியது என, புலம்பெயர்ந்தோர் உலக நாள் குறித்து, பல்வேறு தலைப்புக்களில், தன் கருத்துக்களை அச்செய்தியில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
(வத்திக்கான் செய்தி - மே 28, 2019)
Add new comment