இலங்கையில் புதிய தடை அமலுக்கு வந்தது


Image of a girl wearing Burka. (newsvanni)

இலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகள் புர்கா அணிய  பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பயன்படுத்தி அமல்படுத்தியுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல மத ஸ்தலங்களில் பெண்களை பயன்படுத்தி தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது. தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதற்காக தயார் நிலையிலிருந்த ஆடைகளை, சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டு வெடித்த வீட்டில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.  இந்நிலையில், நாட்டு மக்களின் நன்மை கருதி இலங்கையில் பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய தடை செய்யப்படுவதாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில்,

தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக் கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்படுகிறது.  நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காத வகையில் அமைதியும் நல்லிணக்கம் மிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்காக அதிபர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுமாறும் ஆள் அடையாளத்தை பாதுகாப்பு படையினர் உறுதிப் படுத்தும் பொழுது அவர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு பிறகு அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Add new comment

3 + 1 =