இலங்கையின் வலியோடு திருத்தந்தையின் செய்தி


நெகோம்போ புனித செபஸ்தியார் ஆலயம் (Madusanka Siriwardana)

இலங்கையின் குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து தன் உயிர்ப்பு விழா செய்தியிலும், பின்னர் திங்கள் தின அல்லேலூயா வாழ்த்தொலி உரையிலும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் தின டுவிட்டர் செய்தியிலும் அது குறித்து எழுதியுள்ளார்.

'உயிர்ப்பு ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இலங்கையின் கிறிஸ்தவ சமூகத்துடன், செபத்தில் மீண்டும் இணைவோம். இறந்தோரையும், காயமடைந்தோரையும், மக்கள் அடைந்துவரும் அனைத்து துன்பங்களையும், உயிர்த்த கிறிஸ்துவிடம் ஒப்படைப்போம்' என இத்திங்களன்று வெளியிட்ட முதல் டுவிட்டரில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்களன்று வெளியான இரண்டாவது டுவிட்டரில், 'பாவம் மற்றும் மரணத்தின் மீது இயேசு கண்ட வெற்றியை நம் வாழ்விற்குள் வரவேற்போம். அதன் வழியாக, இயேசுவின் உருமாற்றும் வல்லமையை அனைத்து படைப்பிற்கும் நாம் கொணரமுடியும்' என எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள முதல் டுவிட்டரில், இயேசுவின் காலியான கல்லறையைக் குறித்து தியானித்துக் கொண்டிருக்கும் வேளையில், 'திகிலுற வேண்டாம். அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்' என்ற வார்த்தைகள் நம் காதில் விழுகின்றன என எழுதியுள்ளார்.

 உயிர்ப்பு ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டிவிட்டரில், 'இயேசுவின் உயிர்ப்பே இவ்வுலகின் உண்மையான நம்பிக்கை' என எழுதியுள்ளார்.  

(வத்திக்கான் செய்தி) 

Add new comment

1 + 0 =