இரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான அமெரிக்கத் தடை விலக்குக்கு முடிவு


oil mining and processing

சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு மே மாதத்தில் முடிகிறது என்றும், அதன்பிறகு அவை அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இரான் நாட்டின் வருவாயில் பிரதானப் பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதன் மூலம், அந்த வருவாய் கிடைக்கச் செய்யாமல் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

இந்தப் பொருளாதாரத் தடைகள் சட்டவிரோதமானவை என்று ஈரான் கூறியுள்ளது. இந்த விதிவிலக்குகளுக்கு ``எந்த மதிப்பு அல்லது நம்பகத்தன்மையையும்'' அளிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளது.

இரானுக்கும், உலகின் ஆறு வல்லாதிக்க நாடுகளுக்கும் இடையிலான 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு ரத்து செய்த திரு. ட்ரம்ப், இந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தார்.

மேற்படி ஒப்பந்தத்தின்படி, பொருளாதாரத் தடைகளை நீக்கிக் கொண்டால், தனது அணுசக்தி செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்வதற்கும், சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிப்பதற்கும் ஈரான் ஒப்புக்கொண்டிருந்தது.

அணுசக்தி செயல்பாடுகள் மட்டுமின்றி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிக்கும் திட்டத்தையும், மத்திய கிழக்கில் ``அவதூறு ஏற்படுத்தும் செயல்பாடுகள்'' என அதிகாரிகள் கூறும் செயல்பாடுகளையும் சேர்க்கும் வகையில் ``புதிய ஒப்பந்தம்'' ஒன்றை உருவாக்க ஈரானுக்கு நெருக்குதல் தருவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

பொருளாதாரத் தடைகளால் ஈரானின் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதன் கரன்சிக்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மதிப்பு குறைந்திருக்கிறது. ஆண்டு பணவீக்கம் நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவதற்கு தயங்கும் நிலை ஏற்பட்டு போராட்டங்கள் உருவாகியுள்ளன.

(BBC Tamil)

Add new comment

5 + 9 =