இந்தியாவின் தண்ணீர் மனிதர் - இராஜேந்திரசிங்


இந்தியாவின் தண்ணீர் மனிதர் - இராஜேந்திரசிங் அவர்கள் மாணவர்களுக்கு விளக்கம் கூறுதல்

கோடைக்காலம் என்றதும், தமிழக மக்களை அச்சுறுத்தும் ஓர் அவலம், தண்ணீர் தட்டுப்பாடு. தண்ணீருக்காக, தமிழகம், யாரிடமும் கையேந்தவேண்டிய அவசியமில்லை என்பதை, ஆணித்தரமாகக் கூறுபவர், திருவாளர் இராஜேந்திரசிங் அவர்கள். இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும் இவர், இராஜஸ்தான் மாநிலத்தில் நீர்வளம் குறைவாக இருந்த 1000 கிராமங்களில் ஆண்டு முழுவதும் நீர்வசதி கிடைக்கும்படி செய்துள்ளார். அங்கு நீரின்றி காய்ந்து கிடந்த Arvari, Ruparel, Sarsa, Bhagani, Jahajwali என்ற ஐந்து நதிகளில், ஆண்டு முழுவதும், தண்ணீர் ஓடும்படி செய்துள்ளார்.

இந்தியாவின் பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு முறைகளைக் கடைப்பிடித்து, தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த ஆயிரம் கிராமங்களுக்கு, தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தந்ததை பாராட்டி, இராஜேந்திரசிங் அவர்களுக்கு, தண்ணீருக்காக வழங்கப்படும் நொபெல் விருது என்று கூறப்படும் ‘ஸ்டாக்ஹோம் நீர் விருது’(Stockholm Water Prize) 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கு இவ்விருது வழங்கப்பட்ட நேரத்தில், "இன்றைய தண்ணீர் பிரச்சனையை, தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் கொண்டு மட்டும் தீர்க்கமுடியாது. இப்பிரச்சனை, உண்மையில், நமது அரசுகளின் கொள்கைகள், தலைமைத்துவம், மக்களின் பங்கேற்பு, பெண்களுக்கு அதிகாரம், நாட்டின் பாரம்பரிய முறைகள், ஆகியவற்றைச் சார்ந்தது. இவற்றை நன்குணர்ந்து, நமக்கு வழிகாட்டியிருப்பவர் இராஜேந்திரசிங்"என்று, ஸ்டாக்ஹோம் விருதுக் குழு அறிவித்தது.

ஆசியாவின் நொபெல் விருது என்றழைக்கப்படும், ‘ரமோன் மகசேசே’ (Ramon Magsaysay) விருதையும் இவர் 2001 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். ‘தி கார்டியன்’ எனப்படும் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான "50 people who could save the planet" அதாவது, “பூமிக்கோளத்தைக் காப்பாற்றக்கூடிய 50 மனிதர்கள்” என்ற கட்டுரையில் இராஜேந்திரசிங் அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 60 வயதான திருவாளர் இராஜேந்திரசிங் அவர்கள், தமிழ் நாட்டின் நீர்வளம் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் கூறிய சில உண்மைகள்:

எந்த மாநிலத்திடமும் தண்ணீர் கேட்டு, தமிழகம் கையேந்தத் தேவையில்லை. இங்கு கிடைக்கும் மழை நீரைச் சேமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

தமிழகத்தில் மண் வளம் சிறப்பாக உள்ளது. தண்ணீர் இல்லாததால் மட்டுமே வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சி ஏற்படுவதற்கு, ஆறுகளில் மணல் அள்ளப்படுவதும் ஒரு முக்கியக் காரணம்.

இருபது விழுக்காடு மழை பெய்யும் இராஜஸ்தானில், ஆறுகளில் தண்ணீர் ஒடும்போது, எண்பது விழுக்காடு மழை பெய்யும் தமிழகத்தின் ஆறுகள் வறண்டு கிடப்பது, வியப்பாகவும், வேதனையாகவும், கண்ணீரை வரவழைப்பதாகவும் இருக்கிறது. 

(வத்திக்கான் செய்தி - 01 மே 2019) 

Add new comment

9 + 10 =