விழிப்பாய் இருப்போம்!


இன்றைய வாசகங்கள் (08.11.2020)
பொதுக்காலத்தின்  32 ஆம் ஞாயிறு    
மு.வா: சாஞா: 6: 12-16
ப.பா: திபா: 63: 1. 2-3. 4-5. 6-7 
இ.வா: 1 தெச: 4: 13-18
ந.வா: மத்:  25: 1-13

"விழிப்பாய் இருப்போம்! "

ஒரு ஊரில் இரண்டு இளைஞர்கள் அரசு வேலைக்காக படித்து வந்தனர். அவர்களில் ஒரு இளைஞர் தகுதித் தேர்வினை எழுதி அரசு வேலையைப் பெற்றார். மற்றொரு இளைஞரால் அந்த வேலையை பெற முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என இவர்களை தெரிந்த ஒருவர் வெற்றி பெற்ற இளைஞரிடம் கேட்டபோது, அந்த வெற்றி பெற்ற இளைஞர் "நான் வெற்றி பெற்றதற்கு காரணம் தேர்விற்காக நான் படிக்கவில்லை; மாறாக வாழ்க்கைக்காக படித்தேன். தேர்வு தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று காத்திருக்காமல் ஒவ்வொரு நொடிப்பொழுதும் விழிப்பாய் இருந்து படித்தேன் "என்று பதில் கூறினார். இதே நபர் தோல்வியுற்ற அந்த இளைஞரிடம் "தோல்விக்கான காரணம் என்ன? "என்று வினவினார். அதற்கு அந்த இளைஞர் "எனக்கு அரசு வேலை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. ஆனால் எனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் அதற்கான தகுதி தேர்வுக்கு என்னை ஆயத்தப்படுத்த முடியவில்லை. அதிலும் குறிப்பாக   தேர்வுத் தேதி அறிவிக்கட்டும். பின்னர் தயார் செய்யலாம் என்று காத்திருந்தேன் . இதுதான் எனது தோல்விக்கு காரணம்" என மன வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார். நாம் விழிப்போடு ஒவ்வொரு நொடிப்பொழுதும் செயல்படும்போதுதான் நம் வாழ்விலேயே இலக்கினை அடைய முடியும். அத்தகைய சிந்தனையை பெற்றுக்கொள்ள தான் இன்றைய வழிபாடு நம்மை அழைக்கின்றது.

'விழித்திருத்தல்' என்பது ஒரு உன்னதமான கலை. வாழ்விலே வெற்றியடைந்த பல மாமனிதர்கள் தங்களுடைய வாழ்விலேயே விழித்திருந்து செயல்பட்டார்கள். பற்பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் இரவும் பகலும் விழித்திருந்து உழைத்தார். இறுதியில் தனது இலக்கில் வெற்றி அடைந்தார்.  சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தான் சிறுவயதில் படிக்கும் பொழுது போதிய பொருளாதாரம் இல்லாவிட்டாலும் வேலை செய்து விழித்திருந்து படித்தார். அதன்பிறகு மிகச்சிறந்த அறிவியல் அறிஞராக மாறினார். ஒரு அறிவியல் அறிஞராகவும் நாட்டின் குடியரசுத் தலைவராகவும் வலம் வந்த அவர் தான் செய்த ஒவ்வொரு செயல்பாடுகளிலும் விழிப்போடு செயல்பட்டார். எனவேதான் இராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் இந்த உலகமே பாராட்டும் அளவுக்கு உயர்ந்த நிலையை  அடைய முடிந்தது . எந்த ஒரு மனிதர் தான் செய்யும் செயல்பாடுகளிலும் முன்னெடுப்பு களிலும் விழிப்போடு செயல்படுகிறாரோ, அப்பொழுது வாழ்வில் வெற்றியை அடைய முடியும். வாழ்வில் சாதனை படைத்த பற்பல மாமனிதர்கள் இதைத்தான் செய்தார்கள். இன்றைய நற்செய்தி வாசகம் நாம் விழிப்போடு வாழ வேண்டும் என்ற சிந்தனையை சுட்டிக்காட்டுகின்றது. ஆண்டவர் இயேசு தனது பணி வாழ்வின் இறுதி காலகட்டங்களில் மனுமகனின் இரண்டாம் வருகையை குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். மத்தேயு நற்செய்தியாளர் தனது இலக்கு மக்களுக்கு 24 மற்றும் 25 அதிகாரங்களில் ஆண்டவரின் இறுதிநாளின் வருகையை குறித்து எழுதுகிறார். அவர் இவ்வாறு எழுதியதின் பின்னணி என்னவென்றால் ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்கு  பிறகு ஆண்டவரின் இரண்டாம் வருகை தாமதமாக இருந்ததால் மக்களின் நம்பிக்கை குறைந்தது. அவர்கள் தங்களை விழிப்போடு தயார் செய்யாமல் ஏனோதானோ என்று வாழ்க்கை நடத்தி வந்தனர். எனவேதான் மத்தேயு நற்செய்தியாளர் மிக அருமையாக அத்திமர உவமை, திருடன் மட்டும் பத்து கன்னியர்களின் உவமை போன்றவற்றின் வழியாக இறுதி நாளின் இரண்டாவது குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். ஆண்டவரின் வருகை நாம் எதிர்பாராத நேரத்திலும் நடக்க நேரிடும் என்ற கருத்தை வலியுறுத்தி எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்ற சிந்தனையை வழங்குகின்றார். இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கின்ற படி விழிப்போடு தங்களை எல்லா நேரத்திலும் தயார் செய்பவர்கள் பாராட்டப்பட்டு புது வாழ்வைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகத் தங்களை   எல்லா நேரத்திலும் விழிப்போடு தயார் செய்யாதவர்கள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர்.

நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு என்பது நாம் விழிப்போடு வாழக்கூடிய வாழ்வு. நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற மனநிலையோடு ஒவ்வொரு நொடிப்பொழுதும் விழிப்போடு நம்மை தகுதிப்படுத்தும் பொழுது நிச்சயமாக நாம் வாழ்விலே நம்முடைய இலக்கினை அடைய முடியும். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தின்  வழியாக நாம் அறிய வருகிறோம். 

நம் வாழ்வில் எல்லா நிலைகளிலும் நாம் தயாரிப்புடனும், முன்மாதிரியுடனும் விழிப்பாய் இருந்து செயல்பட அடைக்கப்பட்டு உள்ளோம். நம்முடைய அன்றாட வாழ்வில் எந்தவொரு செயல்பாட்டையும் இறுதி வரை தள்ளிப் போடாமல் இருக்க வேண்டும். முடிந்தவரை விழிப்போடு அந்த அன்றைய வேலையை அன்றே முடிப்பது நலமாகும். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் விழிப்போடு தங்களுடைய கடமைகளைச் செய்யக் கடமைப்பட்டுள்ளனர் . பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை கடமை உணர்வோடு வளர்க்க கடமைப்பட்டுள்ளனர். சம்பாதித்து எல்லா பொருட்களையும் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்தால் போதும் என்று பெற்றோர்கள் நினைக்காமல், தன்னுடைய முழுமையான அன்பை செலுத்தி அவர்களுடைய  பிள்ளைகள்   இறை பக்தியிலும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க விழிப்போடு வழிகாட்ட கடமைப்பட்டுள்ளனர்.  

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை நன்முறையில் உருவாக்க விழிப்போடு பாடம் நடத்த கடமைப்பட்டுள்ளனர். மாணவர்களும் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை விழிப்போடு கவனித்து விழிப்போடு படிக்க கடமைப்பட்டுள்ளனர். அவ்வாறு விழிப்புணர்வோடு அனைத்தும் நடந்தது என்றால் மாணவர்கள் மிகச் சிறந்த வெற்றியை பெற முடியும். நம்முடைய அன்றாட வாழ்விலேயே  பணி செய்யும் இடங்களில் சிறிய சிறிய பணிகளில்  விழிப்புணர்வோடு நம்முடைய கடமைகளை சரிவரச் செய்யும்பொழுது, நமக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்பட்டு மிகச் சிறந்த பணிகளைச்  செய்ய முடியும்.  எனவே நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொன்றிலும் விழிப்புணர்வோடு செய்வோம். நாம் நடந்தாலும் சாப்பிட்டாலும் படித்தாலும் தூங்கினாலும் அமர்ந்தாலும் விழிப்புணர்வோடு செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு விழிப்புணர்வோடு செயல்படும் பொழுது நம் வாழ்வில் சாதனையாளர்களாகவும் மனிதர்களாகவும் உருவாக்க முடியும். இதைத்தான் இன்றைய நற்செய்தியானது நம்மை சிந்திக்க அழைப்பு விடுக்கின்றது .

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே நாம் செய்கின்ற ஒவ்வொன்றிலும் விழிப்புணர்வோடு 
செயல்படுவோம்.  திருமுழுக்கின்  வழியாக கிறிஸ்துவை பின்பற்றுகின்ற நாம்  விழிப்போடு கிறிஸ்தவ வாழ்வை வாழ முயற்சி செய்வோம். ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் ஆண்டவர்  இயேசுவினுடைய நற்செய்தி மதிப்பீட்டின்படி வாழ்ந்து நம்மையே அவருக்கு உகந்த  கருவிகளாகக் கையளிக்க முயலுவோம். ஆண்டவர் இயேசு மீண்டும் வரும்பொழுது நிச்சயமாக அவரின் வருகையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டின்படி வாழ தவறும் பொழுது ஆண்டவர் இயேசுவின் வருகை நமக்கு தண்டனையாக மாறுகின்றது. ஆண்டவரின் இரண்டாம் வருகை   மகிழ்ச்சியாக இருப்பதற்கும் துன்பமாக இருப்பதற்கும் நம் வாழ்வைப் பொருத்தே அமைகின்றது. எனவே விழிப்புணர்வோடு இயேசுவினுடைய வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்தும் அப்பொழுது இயேசு விட்டுச்சென்ற இலக்கான இறையாட்சிப் பாதை வழி  மீட்பை நம்மால் அனுபவிக்க முடியும். அத்தகைய மனநிலையை பெற்றுக்கொள்ள திறந்த உள்ளத்தோடு இயேசுவினுடைய நற்செய்தி  விழுமியத்தை உள்வாங்குவோம். அப்பொழுது நாம் அவர் கொண்டுவந்த மீட்பை முழுவதுமாக அனுபவிக்க முடியும். அதன் வழியாக நம்முடைய இலக்கில் வெற்றி அடைய முடியும்.இலக்கு தெளிவோடு வாழ்வில் வெற்றி அடையவும் விழிப்போடு செயல்படவும் தேவையான அருளை வேண்டி மன்றாடுவோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா!  எங்களோடு அன்றாட வாழ்வில்  நாங்கள் எந்நாளும் விழிப்புணர்வோடு வாழ்ந்து எங்களையே நற்செய்தி மதிப்பீட்டின்படி தயார்படுத்தி மீட்பு என்ற உன்னதமான கொடையை அனுபவிக்கத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

திருத்தொ.  குழந்தைஇயேசு பாபு
சிலாமேகநாடு பங்கு
சிவகங்கை மறைமாவட்டம் 

Add new comment

2 + 7 =