செல்வத்தோடு செருக்கையும் களைந்து விண்ணரசில் முதன்மையாவோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 20 ஆம் செவ்வாய் 
I: எசே: 28: 1-10
II:  இச 32: 26-27. 28,30. 35-36
III:மத்: 19: 23-30

கடவுளே நம்மைப் படைத்தவர். நம்மைப் படைத்து உலகை ஆளுமாறு மற்ற உயிரினங்களை மனிதர்களாகிய நமக்கு அடிபணியச் செய்தவர். நமக்குள் இருக்கும் திறன்கள் அதன்மூலம் நாம் செய்யும் செயல்கள் அவற்றால் விளையும் வெற்றிகள் எல்லாமே அவருடைய கொடைதான். இதை நம்மில் எத்தனை பேர் உணர்கிறோம்? அவ்வாறு உணர்ந்திருந்தால் நம்மிடையே ஆணவம், செருக்கு, தற்பெருமை எண்ணங்கள் இருக்குமா என்ன?

உதாரணமாக ஒரு வகுப்பில் படிக்கும் மாணவன் ஆசிரியரின் உதவியுடன் நன்றாகப் படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுகிறான் என வைத்துக்கொள்வோம். நல்ல மதிப்பெண் பெற்றதால் அவன் ஆசிரியரை விட உயர்ந்தவன் ஆகிவிடுவானா? அப்படி நான் அந்த ஆசிரியரை விடப் பெரியவன் என்று எண்ணினால் அம்மாணவன் வாழ்வில் நிச்சயம் அழிந்து விடுவான். வளர மாட்டான். இதுதான் உண்மை. 

ஆம் அன்புக்குரியவர்களே உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை ஆண்டவர் சிதறடித்துவிடுவார் என்று அன்னையின் புகழ்பாடலிலே நாம் தியானிக்கிறோம். இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியேல் இறைவாக்கினர் செருக்குடன் சிந்தித்த அரசனை சாடுவதை நாம் வாசிக்கிறோம். திறமையும் செல்வமும் இருந்தால் யாரும் கடவுளாகிவிட முடியாது.  அவ்வாறு நினைத்தால் அது அழிவுக்கு இட்டுச்செல்லும் என்ற கருத்தை இறைவாக்கினர் கூறுகிறார். இச்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பென்ன? நாம் அனைவருமே கடவுளைப் போல வாழ அழைக்கப்பட்டவர்கள் தான். அன்பில், தாராள குணத்தில், மன்னிப்பில்,கருணையில் நாம் கடவுளைப் பிரதிபலிக்க வேண்டும். மாறாக நாமோ, கொஞ்சம் திறமையும், செல்வமும் இருந்துவிட்டால் நம்மை மற்றவர்களைவிட உயர்த்தி செருக்கான எண்ணத்தோடு தற்பெருமையோடு உலா வருகிறோமே.  இது மிகவும் தவறானது என்பதை நாம் உணர்ந்து கடவுள்முன்னும் பிறர் முன்னும் நம்மைத் தாழ்த்தும் போது நாம் நிச்சயமாக உயர்த்தப்படுவோம். அழிவினின்று காக்கப்படுவோம்.

இந்த செருக்கு என்கிற தீய குணம் செல்வத்தோடு மிகவும் தொடர்புடையது. செல்வம் சேர்ப்பது தவறல்ல. மாறாக செல்வம் இருப்பதால் மட்டும் நாம் பெரியவராகவோ உயர்ந்தவராகவோ மாறிவிட முடியாது.இத்தகைய எண்ணம் கொண்ட செல்வர்கள் நிச்சயம் விண்ணரசில் நுழைய முடியாது என்கிறார் நம் ஆண்டவர் இயேசு. மாறாக கடவுளிடன் பொருட்டு செல்வத்தின் மேல் உள்ள பற்றை விடுத்தவருக்கு விண்ணரசில் முதன்மையான இடம் உண்டு என்ற வாக்குறுதியைத் தருகிறார் இயேசு.

எனவே நம் தனிப்பட்ட வாழ்வில்  நம் திறமைகளின் பொருட்டும் செல்வத்தின் பொருட்டும் நம்மிடம் தற்பெருமை எண்ணங்கள் இருந்தால் ஆண்டவருடைய உதவியுடன் அவ்வெண்ணங்களை வேறோடு பிடுங்கி எறிய முயலுவோம். உலகப் பற்றுகளை தவிர்த்து விண்ணரசில் நுழைய நம்மையே தயார் செய்யத் தேவையான அருளை வேண்டுவோம். 

 இறைவேண்டல் 
அன்பு இறைவா! நாங்கள் செல்வச் செருக்கினால் அழிந்து விடாமல் விண்ணரசில் நுழையத் தகுதியான தாழ்ச்சியுள்ள பற்றற்ற மக்களாக வாழ உதவி புரியும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 4 =