இறைவனோடு ஒன்றித்திருக்கத் தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் திங்கள்
I: 1சாமு: 15: 16-23
II : திபா 50: 8-9. 16bஉ-17. 21,23
III: மாற்: 2: 18-22

கடவுளோடு இணைந்திருப்பதே கிறிஸ்தவ வாழ்வின் மையம். இயேசு யோவான் நற்செய்தி வாயிலாக என்னோடு இணைந்திருந்தாலன்றி உங்களால் எதுவும் செய்ய இயலாது எனக் கூறியுள்ளார். அவ்வாறு இணைந்திருக்க நமக்கு பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் இறைவேண்டல் மிக முக்கியமானது. இந்த இறைவேண்டலிலிருந்து தோன்றியது கடவுளுக்கு கீழ்படிந்து நடத்தலும் நோன்பு இருத்தலும். இவற்றைப் பற்றி இன்றைய வாசகங்கள்  நமக்குத் தெளிவாகக் கூறுகின்றன.

இன்றைய முதல் வாசகமானது கீழ்படிதலைப் பற்றி நமக்குக் கூறி கடவுளுக்குக் கீழ்படிந்தவர்களாக வாழ அழைக்கிறது. இஸ்ரயேலின் கடைக்குலமான பெஞ்சமின் குலத்தைச் சார்ந்த சாதாரண மனிதன் சவுலை கடவுள் அரசனாக்கினார். ஆனால் சவுலோ தொடக்கத்திலிருந்தது போல் கடவுளுக்குக் கீழ்படியவில்லை. அமலேக்கியருக்கு எதிராகப் போர் புரிந்த பின் கடவுளுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் அங்கிருந்த கொழுத்த ஆடுகளையும் மாடுகளையும் நாட்டிற்கு கொண்டு வநந்தான் சவுல். கழுதையைத் தேடிச் சென்றவனை கடவுள் அரசனாக்கினார். ஆனால் பதவி வந்தவுடன் தன் விருப்பம் போல் நடந்து ஆடுகளையும் மாடுளையும் கட்டிக் கொண்டான் சவுல். அதற்கு காரணமாக அவற்றை கடவுளுக்கு பலியிடப்போவதாகவும் கூறினான். ஆண்டவர் சாமுவேலின் வழியாக பலியை விட கீழ்படிதல் உயர்ந்தது எனக் கூறி சவுலை நிராகரித்தார். இந்நிகழ்வு சவுல் கடவுளோடு இணைந்திருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. சவுல் கடவுளோடு இணைந்திருந்தால் அவரின் குரலுக்கு நிச்சயம் செவிகொடுத்து கீழ்படிந்திருப்பார் அல்லவா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் நோன்பு இருக்கவில்லை என்ற கேள்வி வருகிறது. நோன்பு இருத்தலும் கடவுளைத் தேடி இணைவதற்கான வழிதான். ஆனால் கடவுள் தன் அருகில் இருப்பதை உணராமல் அவரைத் தேடி நோன்பிருப்பது நிச்சயமாக அர்த்தமற்ற செயல்தான். நாம் எப்போது நோன்பிருப்போம்? தவறுகளால் கடவுளை விட்டுப் பிரிந்த தருணங்களில் அவரோடு மீண்டும் இணைய மனம்வருந்தி வேண்டுவதே உண்மையான நோன்பு. அது கடவுளை மீண்டும் உணர வைக்கிறது. அவரோடு நம்மை ஒன்றிணைக்கிறது. யூதர்கள் அடிக்கடி நோன்பு இருந்து செபித்தார்கள். ஆனால் வாழ்க்கையில் மாற்றமில்லை. அது வெறும் சடங்காக மாறியது. அதனாலேயே இயேசுவை தந்தை கடவுளால் அனுப்பப் பட்ட மெசியாவாக அவர்களால் உணரமுடியவில்லை. ஆனால் சீடர்களோ மெசியாவைக் கண்டுகொண்டு அவரோடு இணைந்திருந்ததால் அங்கே நோன்புக்கு அவசியமில்லாமல் போயிற்று.

ஆம் அன்புக்குரியவர்களே இறைவனோடு நாம் இணைந்திருக்க விரும்பினால் நாம் அவருக்கு கீழ்படிய வேண்டும். கீழ்படிதலோடு  இறைவேண்டலையும் நோன்பையும் சரியான புரிதலோடு மேற்கொள்வோமேயானால் நாமும் நிச்சயமாக இறைவனோடு இணைந்திருக்க முடியும்.

இன்று நாம் புனித வனத்து அந்தோணியாரின் விழாவைக் கொண்டாடுகிறோம்.எகிப்திலே செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். என்னதான் தினமும் திருப்பலி சென்று செபித்தாலும் நிறைவு இல்லை. உனக்குள்ளதை விற்று ஏழைகளுக்குக் கொடு என்ற கடவுளின் வார்த்தைக்குக் கீழ்படிந்து செல்வத்தைத் துறந்தார். துறவு வாழ்வு மேற்கொண்டு காட்டிலே தவமிருந்தார். அவருடைய கீழ்படிதலும் தவமும் அவரை கடவுளோடு இணைத்தது. உலக சோதனைகளை வென்றார். 

அறிவியல் நவீன உலகத்தில் இருக்கின்ற நாம், கடவுள் தேவையில்லை ;அறிவியல் கண்டுபிடிப்புகள் மட்டும் போதும் என்று கருதுவது தவறாகும். எந்த உயரத்திற்கு சென்றாலும் கடவுள் தான் அனைத்திற்கும் ஆதாரம். அடிப்படை ஆணிவேராக இருக்கிறார் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டு சிறப்பாக செயலாற்றும் பொழுது கடவுளின் அருளையும் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற முடியும். உலகத்தில் யார் எல்லாம் கடவுளுக்கு கீழ்ப்படிந்தார்களோ , அவர்கள் அனைவரும் கடவுளின் அருளையும் ஆசியையும் நிறைவாக பெற்றனர். கீழ்ப்படிதலில்தான்  கடவுளின் உண்மையான அருளும் ஆசீரும் இருக்கிறது. அந்தக் கீழ்படிதல் தான் இறைவனோடு ஒன்றித்திருக்கச் செய்யும். இன்றைய விழா கொண்டாடும் புனித வனத்து அந்தோனியாரும் கடவுளுக்கு கீழ்படிந்து இவ்வுலகம் சார்ந்த சொத்துகளை ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தார். அதன் வழியாக கடவுளின் அருளையும் ஆசியையும்  நிறைவாகப் பெற்றார். நாமும் அவரின் மதிப்பீடுகளை உள்வாங்கி இறைவனோடு இணைந்து இறை அனுபவத்தில் அகமகிழ முயற்சி செய்வோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா!  எங்களுடைய அன்றாட வாழ்வில் இந்த உலகம் சார்ந்த பொருட்களுக்கும் ஆசைகளுக்கும் கீழ்ப்படியாமல், உம்முடைய இறையாட்சி மதிப்பீட்டுக்கும் உமக்கும்    எந்நாலும் கீழ்படிய அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

15 + 2 =