இறைவனுடன் நட்புறவா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


இன்றையவாசகங்கள் (28.12.2020)
கிறிஸ்து பிறப்பு காலம்
I: 1 யோ: 1: 5 - 2: 2
II: திபா: 124: 2-3. 4-5. 7-8
III: மத்: 2: 13-18

இறைவனுடன் நட்புறவா?

ஒரு சிறுவன் தாயிடம் சென்று , "அம்மா நான் நல்ல நண்பனாக இருக்க என்ன செய்ய வேண்டும்?" என்ற கேள்வியைக் கேட்டான். இப்படி ஒரு கேள்வியை சற்றும் எதிர்பாராத தாயானவள் அந்தக் கேள்விக்கு உடனே விடையளிக்க முடியாமல் நாளை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினார். தன்னுடைய வாழ்வின் அனுபவங்களையெல்லாம் அலசிப்பார்த்து நான் நல்ல தோழியாக இருந்திருக்கிறேனா? என்று ஆராயத் தொடங்கினார். இறுதியாக தன்மகனை அழைத்து  "நல்ல நண்பனாக இருக்க முதலில் நண்பரிடம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒளிவு மறைவு இல்லாத, வெளிப்படையான பகிர்வு இருக்க வேண்டும்.ஆபத்தில் உதவ வேண்டும். மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறிவிட்டு "என்னுடைய சிறுவயதில் நான் இவ்வாறு இருக்கவில்லை. நீ பிறருக்கு நல்ல தோழனாக இருக் வேண்டும்" என வாழ்த்தினார்.

அன்புக்குரியவர்களே நாம் அனைவருமே இறைவனோடு நட்புறவில் வாழ அழைக்கப்ட்டுள்ளோம். இன்றைய முதல் வாசகமானது இச்செய்தியை நமக்கு மிகத்தெளிவாக எடுத்துக் கூறுவதாக உள்ளது. ஆனால் அவ்வாறு நட்புறவில் வளர நமக்குப் பலவழிகாட்டுதல்களும் தரப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமாக ஒளியில் நடக்கும் பண்பு. இங்கு ஒளி எனப்படுவது யாதெனில் நன்மை,நேர்மை, உண்மை,அமைதி போன்ற இயேசு காட்டும் வழி. இயேசு காட்டிய வழியில் வாழாமல் நம்மால் அவருடைய நண்பராய் இருக்க முடியாது. இயேசு தன் சீடர்களைப் பார்த்து நண்பர்கள் என்று கூறுவதைப் புனித யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். இயேசு எந்த ஒளிவு மறைவும் இன்றி தன் வாழ்க்கையைத் திறந்த புத்தகம் போல வாழ்ந்து காட்டினார். தன் சீடர்களையும் நண்பர்கள் என்று அழைத்து அவ்வாறே வாழத் தூண்டினார்.நமக்கும் அதே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இறைவனுடன் நட்புறவுடன் வாழ அவரிடம் நம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும். இறைவன் அனைத்தையும் அறிபவர். அவரிடம் நம்மால் எதையும் மறைக்க இயலாது.  ஆயினும் நம்முடைய திறந்த இதயத்தை அவர் விரும்புகிறார். நம்மை மன்னிக்கக் காத்திருக்கிறார். இயேசுவின் இரத்தம் நம்முடைய எத்தகைய பாவத்தையும் மன்னிக்க வல்லது என்ற ஆழமான ஆறுதலை அளிக்கின்ற செய்தி நமக்கெல்லாம் நம்பிக்கை ஊட்டுவதை நம்மால் மறுக்க இயலாது. ஏனெனில் உண்மையான அன்பு மன்னிக்கும். அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்.
இந்த இறைவனுடன்,நமக்காகத் தந்தையிடம்  பரிந்து பேசும் இயேசுவுடன் நட்புறவுடன் வாழ்வது நமக்குக் கிடைத்த பெரிய கொடையல்லவா?

இவ்வாறாக இறைவனுடன் நாம் கொண்டுள்ள இந்நட்புறவு சகமனிதருடனும் உண்மையான,தூய்மையான, ஒளிவு மறைவு அற்ற,மன்னித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நல்ல நட்புறவை உருவாக்க வழிவகுக்கிறது. இத்தகைய அனைவரோடும் உறவுடன் வாழும் தன்மை உண்மையான கிறிஸ்தவ வாழ்வுக்குச் சான்று பகர்கிறது. நம் அனைவரையும் மறு கிறிஸ்துவாக மாற்றுகிறது.

மேலும் இன்று திருஅவையோடு இணைந்து நாம் மாசில்லாக் குழந்தைகளின் விழாவைக் கொண்டாடுகிறோம். மீட்பரைக் காப்பாற்ற வாழ்வைத் தொடங்கும் முன்பே உயிர் நீத்த குழந்தைகளின் நினைவு நாள் இன்று. இக்குழந்தைகள் அனைவரும் இறைவனோடு உள்ள உறவில் இன்றும் நிலைத்திருக்கிறார்கள். நாமும் இனிவருகின்ற காலங்களில் இம்மாசற்ற குழந்தைகளைப் போன்று மாசில்லா மனம் கொண்டவர்களாக நம்மை மாற்ற முயற்சிப்போம். இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பெற்று, தேவைப்பட்டால் நம்முடைய நம்பிக்கையின் நிமித்தம் உயிர்துறக்கக்கூடத் துணிந்தவர்களாய் வாழும் வரம் கேட்போம்.
இறைவனுடன் நட்புறவுடன் வாழ்வோம். சகமனிதர்களுக்கு நல்ல நண்பர்களாய்த் திகழும் வரம் கேட்போம்.

இறைவேண்டல்

எங்களை உம்மோடு நட்புறவில் வாழ அழைத்தவரே திறந்த மனமும் மாசற்ற குணமும் கொண்டு உம்மோடும் சகமனிதர்களோடும் நட்புறவில் வாழவும்,எங்கள் நம்பிக்கைக்குச் சான்று பகரவும் வரம் தாரும் ஆமென்.

Add new comment

1 + 13 =