Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நற்செய்தி அறிவிப்பில் நிறைவா! | குழந்தைஇயேசு பாபு
இன்றையவாசகங்கள் (03.12.2020)
திருவருகைக் காலத்தின் 1 ஆம் வியாழன்
புனித பிரான்சிஸ் சவேரியார் பெருவிழா
I: எசா: 61: 1-3
II: திபா: திபா 117: 1. 2
III: 1கொரி: 9: 16-19, 22-23
IV: மாற்: 16: 15-20
"நற்செய்தி அறிவிப்பில் நிறைவா!"
கிறிஸ்தவ வாழ்வின் இயல்பே நற்செய்தி அறிவிப்பதாகும். ஆண்டவர் இயேசு சென்ற இடமெல்லாம் நன்மை செய்து வந்தார். அதே போலவே தன் சீடர்களையும் நற்செய்தி அறிவிக்குமாறு அனுப்பிவைத்தார். இயேசுவைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலத்தை நாடாமல் பிறர் நலத்தோடு அனைத்தையும் தியாகம் செய்யும் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற வாழ்வியல் பாடத்தை சுட்டிக்காட்டியுள்ளார். கிறிஸ்தவம் என்றாலே நற்செய்தியை அறிவித்து அதை வாழ்வாக்கும் ஒப்பற்ற வாழ்வியலாகும். இன்றைய நாளில் நம் தாய்த் திருஅவையோடு இணைந்து நம் தாய்த்திரு நாட்டிற்கு மறைபரப்பு பணி செய்ய வந்த புனித பிரான்சிஸ் சவேரியாரின் பெரு விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். நற்செய்தியை அறிவிப்பதில் தான் நம் வாழ்வு முழுமை பெறும். அதன் வழியாக மட்டும்தான் நம் ஆன்மாவைக் காத்துக்கொள்ள முடியும் என்ற சிந்தனையை நமக்கு வழங்கியுள்ளார்.
இயேசுவினுடைய மதிப்பீடுகளை முழுமையாக அறிவதற்கு முன்பாக புனித பிரான்சிஸ் சவேரியார் இவ்வுலகம் சார்ந்த பட்டம், பதவி, மற்றும் பெருமை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் தனது நண்பரான புனித லொயோலா இஞ்ஞாசியாரை சந்தித்தப் பிறகுதான் மனித வாழ்வில் எது தனது ஆன்மாவை மீட்கும் என்பதை ஆழமாக புரிந்து கொண்டார். இதற்கு புனித இஞ்ஞாசியார் "ஒருவன் இந்த உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் அதனால் வரக்கூடிய பயன் என்ன?” என்று புனித பிரான்சிஸ் சவேரியாரிடம் கூறியபோது இவ்வுலகம் சார்ந்த பணம், பட்டம், பதவி, பெருமை போன்றவை அனைத்தும் வீணானதே என்பதைப் புரிந்து கொண்டார். நற்செய்தி அறிவித்து இயேசுவினுடைய மதிப்பீடுகளின்படி வாழ்வதுதான் தனது ஆன்மாவை மீட்கும் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டு நற்செய்திப் பணிக்குத் தன்னையே முழுமையாகக் கையளித்தார்.
"மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்கிற இயேசுவின் வார்த்தைகளைத் தனது உள்ளத்தில் ஏற்று, அதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்து, ஆண்டவர் இயேசுவை அறியாத எண்ணற்ற மக்களைத் தேடி, புனித பவுலடியாரைப் போல உலகின் கடையெல்லை வரைப் பயணம் செய்ய முடிவெடுத்தார். அதன்பிறகே கிறிஸ்துவை அறியாத நம்முடைய இந்திய நாட்டின் முன்னோர்களுக்கு நற்செய்தியை அறிவித்து,அதன் வழியாக அம்மக்களை இயேசுவின் பக்கம் திருப்பினார். அவர் செய்த இந்த மறைபரப்பு பணியின் வழியாகத்தான் நாம் அனைவரும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்களாக வாழ்ந்து ,சான்று பகர்ந்து வருகிறோம்.
இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு, தான் விண்ணகம் செல்வதற்கு முன்பாக சீடர்களிடம் நற்செய்தி அறிவிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். இயேசு சீடர்களை நோக்கி, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம்
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்றார் (மாற்கு 16:15)இவ்வசனம் திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவரும், இயேசுவின் சீடர்கள் என்ற மனநிலையோடு நற்செய்தி அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். புனித பிரான்சிஸ் சவேரியார் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை இயேசுவை அறியாத மக்களிடம் அறிவித்து மிகச்சிறந்த பணியைச் செய்தார். அப்படிப்பட்ட புனிதர் நாம் நாட்டிற்கு வந்து பணி செய்தது நம் ஒவ்வொருவருக்கும் பெருமையாகவும், உந்துசக்தியாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்கின்றது.
எனவே இன்றைய நாளிலே புனித பிரான்சிஸ் சவேரியாரைப் போல நாம் நற்செய்திப் பணி செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். அதற்கு புனித சவேரியார் கொண்டிருந்த ஒரு சில வாழ்வியல் பாடங்களை நாம் கற்றுக் கொள்வது மிகவும் அவசியமாகும். முதலாவதாக, சவேரியார் இறைநம்பிக்கை மிகுந்தவராக இருந்தார். இறைநம்பிக்கை என்பது கிறிஸ்தவ வாழ்விற்கு அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. நம்பிக்கை இல்லையென்றால், கிறிஸ்தவம் என்ற ஒன்று இல்லை. எனவே நம்பிக்கையில்தான் இறைவனுடைய அருளையும் மாபெரும் செயல்களையும் அனுபவிக்க முடியும். புனித பிரான்சிஸ் சவேரியார் இறைவன்மீது ஆழமான நம்பிக்கை கொண்டதால்தான் பல இன்னல்களுக்கு மத்தியில் கடல் பயணம்செய்து இந்திய நாட்டிற்கு வர முடிந்தது. இக்காலத்தில் இருப்பது போல அக்காலத்தில் கடல் பயணம் என்பது ஒரு எளிமையான ஒன்றல்ல ;மாறாக, பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளாக நேரிடும். இருந்த பொழுதிலும் தன்னை அழைத்த கடவுள் தன்னைக் காப்பார் என்ற நம்பிக்கையோடு புனித பிரான்சிஸ் சவேரியார் கடற்பயணம் மேற்கொண்டு நம் நாட்டிற்கு வந்தார். தான்பெற்ற நம்பிக்கையை எல்லோரும் பெற்றுக் கொள்ளும் வகையில் நற்செய்தியை நம்பிக்கையோடு அறிவித்தார். இயேசுவின் பெயரால் நம்பிக்கையோடு வல்ல செயல்களைச் செய்தார். இதன் வழியாக இயேசுவை அறியாத எண்ணற்ற மக்கள் இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெற்று இறைநம்பிக்கையில் இணைந்தனர். புனித பிரான்சிஸ் சவேரியாரின் வழித்தோன்றல்களாக இருக்கின்ற நாமும் இறைநம்பிக்கை மிகுந்தவர்களாக வாழ்ந்து நம்மோடு வாழக்கூடிய பிறரும் இறைநம்பிக்கையைப் பெறும் பொருட்டு நம் வாழ்வை அமைத்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்.
இரண்டாவதாக எதையும் கற்றுக் கொள்ளக்கூடிய ஆர்வம் புனித பிரான்சிஸ் சவேரியாரிடம் இருந்தது. புனித பிரான்சிஸ் சவேரியார் நம்முடைய நாட்டிற்கு வந்த போது நம் நாட்டின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள், மொழி போன்ற எதுவும் தெரியாது. ஆனால் அவர் மிகுந்த ஆர்வத்தோடு அனைத்தையும் கற்று மிகச்சிறந்த ஒரு பணியைச் செய்தார். திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் நற்செய்திப் பணி செய்யவும், அதற்குத் தேவையான குணநலன்களையும், மதிப்பீடுகளையும், படிப்பினைகளையும் ஆர்வத்தோடு கற்றுக் கொள்ளவும் அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு கற்றுக் கொள்ளும் பொழுது தான் நாம் மிகச் சிறந்த ஒரு நற்செய்தி பணியைச் செய்ய முடியும்.
மூன்றாவதாக புனித பிரான்சிஸ் சவேரியாரிடம் முழு ஈடுபாடு அதிகமாக இருந்தது. அவர் மக்களிடம் சென்று மறை பணிச் செய்யும் பொழுது,முழு மனதோடும், ஈடுபாட்டோடு தன்னுடைய பணியைச் செய்தார். பெரும்பாலான கடற்கரைக் கிராமங்களில் இயேசுவின் போதனைகளை நற்செய்தியாக அவர்களுக்கு வழங்கி தன்னால் மனமாற்றம் பெற்ற மக்களுக்குத் திருமுழுக்கும் கொடுத்தார். இவர் திருமுழுக்குக் கொடுத்து கை விரல் கூட தேய்ந்ததாகவும் கூறுவர். அந்த அளவுக்கு முழு ஈடுபாட்டோடு தன்னுடைய பணியைச் செய்தார்.
நான்காவதாக புனித பிரான்சிஸ் சவேரியார் தூய்மை வாழ்வுக்கு சொந்தக்காரராக இருந்தார். "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
" (மத்: 5:8) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப தன் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ்ந்தார். தான் செய்த ஒவ்வொரு செயலிலும் தூய்மை இருந்தது. எனவே தான் கடவுள் இவரது உடலை இன்றளவும் அழியாமல் பாதுகாத்து வருகிறார். இப்படிப்பட்ட புனிதரின் பாதம்பட்ட மண்ணில் வாழும் நாமும் புனித வாழ்வு வாழ்ந்துகடவுளின் அன்பையும் அருளையும் அனுபவிக்க முயற்சி செய்வோம். நான் புனித வாழ்வு வாழ்ந்தால் மட்டுமே கடவுளுடைய உடனிருப்பை உணர முடியும். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் இந்த உலகம் சார்ந்த மாயை, கவர்ச்சி, நிலையற்ற அற்ப ஆசைகள் இவைகளை விடுத்துக் கடவுளுக்கு உகந்த வகையில் தூய்மையாக வாழ முயற்சி செய்வோம்.
இவ்வாறாக புனித பிரான்சிஸ் சவேரியார் தனது ஆன்மாவை காத்துக்கொள்ள தன்னையே முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணித்து மிகச்சிறந்த நற்செய்திப் பணியைச் செய்தார். எனவே அவரைப்போல நாமும் அன்றாட வாழ்வில் மிகச் சிறந்த ஒரு நற்செய்திப் பணி செய்திடத் தேவையான பண்பு நலன்களை புனித பிரான்சிஸ் சவேரியாரிடமிருந்து கற்றுக்கொள்வோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! இந்த நாளுக்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். புனித பிரான்சிஸ் சவேரியாரை எங்கள் இந்திய நாட்டின் பாதுகாவலராகக் கொடுத்ததற்காக நன்றி செலுத்துகின்றோம். அவர் வழியாக எம் நாட்டில் உம்முடைய வல்லமையுள்ள வார்த்தைகளை அறிவிக்க நீர் திருவுளம் கொண்டதற்காக நன்றி செலுத்துகிறோம். தொடர்ந்து எங்களை ஆசீர்வதித்து அவரின் பண்பு நலன்களை நாங்கள் வாழ்வாக்கி இறை நம்பிக்கையோடும், கற்றுக்கொள்ளும் மனப்பான்மையோடும், முழு ஈடுபாட்டோடும், தூய்மையான உள்ளத்தோடும், வாழ்ந்து உமது நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகிர்ந்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment