Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
துணிச்சலும் தாழ்ச்சியும் கொண்டு இறையரசில் பெரியவராவோமா? | குழந்தைஇயேசு பாபு
இன்றையவாசகங்கள் (10.12.2020)
திருவருகைக் காலத்தின் இரண்டாம் வியாழன்
I: எசா: 41: 13-20
II: திபா: 145:1,9,10-11,12-13
III: மத்: 11: 11-15
துணிச்சலும் தாழ்ச்சியும் கொண்டு இறையரசில் பெரியவராவோமா?
.
துணிச்சலும் தாழ்ச்சியும் எவரையும் ஒருபோதும் அழித்ததில்லை. அவர்களை வாழவைத்து மற்றவர் முன் உயர்த்தும் என்பதை விவிலியத்திலும், வரலாற்றிலும் நாம் அறிந்திருக்கிறோம். விவிலியத்தில் நாம் காணும் நீதித்தலைவர்கள்,
இறைவாக்கினர்கள் ,கடவுளின் வழியில் நடந்த அரசர்கள் யாவரும் கடவுள் முன் தன்னைத் தாழ்த்தியவர்களாகவும், உண்மையைத் துணிச்சலுடன் பறைசாற்றியவர்களாகவும் இருந்தனர். எனவே கடவுள் அவர்களை உயர்த்தினார். அவர்களை வல்ல செயல்கள் புரிய வைத்தார். பெரியவர்களாய் ஆக்கினார்.
இன்றைய நற்செய்தியில்
"மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை" என்று இயேசு திருமுழுக்கு யோவானைப் பார்த்து கூறுகிறார். திருமுழுக்கு யோவான் எவரையும் விட்டுவைக்கவில்லை. தவறு என்றால் அரசனாலும் சாதாரண மக்களானாலும் அதை முகத்திற்கு நேராய் சுட்டிக்காட்டும் துணிச்சலைக் கொண்டவர். ஏரோது அரசன் செய்த பாவத்தைச் சுட்டிக்காட்டிய துணிச்சலுக்காகத் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டவர் அவர். அதே நேரத்தில் தாழ்மையின் உதாரணமாகவும் இருக்கிறார். நான் மெசியா அல்ல என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். மெசியாவின் மிதியடிவாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன் எனத் தாழ்த்தினார். மேலும் அவர் இறைவாக்கினர் எலியாவின் மறுபிறப்பாகவும் கருதப்பட்டார்.
எலியா மிகவும் சக்திவாய்ந்த இறைவாக்கினர். கடவுளின் முன் தன்னைத் தாழ்த்தினார். கடவுளையன்றி வேறு தெய்வமில்லை என்று பாகாலின் இறைவாக்கினர்கள் முன் துணிச்சலுடன் நிரூபித்து அவர்களைக் கொன்றழித்தார். அரசன் ஆகாபையும் அவர் மனைவி ஈசபேலையும் எதிர்த்துநின்றார் என அரசர்கள் நூலில் வாசிக்கிறோம். இத்தகைய நற்குணங்களான தாழ்மையையும் துணிச்சலையும் தன்னகத்தே கொண்டு வரவிருக்கும் மெசியாவிற்காக பாதையை ஆயத்தமாக்கியவர்தான் திருமுழுக்கு யோவான்.எனவே தான் அவர் விண்ணரசில் பெரியவராக ஆண்டவரால் இயேசுவாலேயே
புகழப்பட்டார்.
இச்சிந்தனைகள் நமக்குக் கூறுவது என்ன? இத்தகைய துணிச்சலும் தாழ்மையும் நம்மிடம் இருக்கிறதா?
நாம் எல்லோருமே பெருமையையும் புகழையும் எதிர்பார்ப்பவர்களாகவே இருக்கிறோம்.நம்முடைய திறமைகள், வெற்றிகள், ஏன் பிறருக்கு உதவி செய்தால் கூட அதை "நான் தான் செய்தேன்" எனப் பலமுறை தம்பட்டம் அடிக்கத்தான் செய்கிறோம். இதற்கு யாரும் விதவிலக்கில்லை. அவ்வேளைகளில் கடவுளின் திருஉளம் இன்றி இவை நடக்க வாய்ப்பில்லை என்பதை மனதார உணர்ந்தோமானால் அது தான் உண்மையான தாழ்ச்சி. திருமுழுக்கு யோவான் எவ்வாறு தன்னைவிடப் பெரியவர் ஒருவர் இருக்கிறார் எனறாரோ அதைப்போல நம்மை விட குணத்தில்,திறமைகளில்,அனுபத்தில், அறிவில் உயர்ந்தவர்கள் வரும்பொழுது தன்னடக்கத்துடன் வழிகொடுக்கவும்,அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் பழகிக்கொண்டால் அது நம்முடைய குடும்ப வாழ்வுக்கும் பணிவாழ்வுக்கும் நல்ல வெற்றியைத் தேடித்தரும் என்பதில் ஐயமில்லை.
அதோடு மட்டுமல்லாது நாமும் தவறுக்குத் துணைபோகாமல் தவறுகள் அநீதிகள் நடக்கின்ற இடங்களில் ஆண்டவரின் குரலாக இருந்து துணிச்சலுடன் செயல்பட வேண்டும்."நமக்கெதற்கு வீண்வம்பு" என்று நமக்கு நாமே பாதுகாப்புப் போர்வையை போர்த்திக்கொள்ளும் மனநிலையை அறவே விட்டுவிட வேண்டும். அவ்வாறு செய்தால் ஆண்டவர் இயேசு கூறியதைப்போல நாமும் இறையாட்சியில் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் ஆக முடியும். சிந்திப்போம். துணிச்சலையும் தாழ்ச்சியையும் நம்வசப்படுத்தி இறையாட்சிக்காக உழைப்போம். இயேசுவின் பிறப்புக்காக நம்மைத் தயாரிப்போம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! நாங்கள் திருமுழுக்கு யோவானைப் போல உம்முன் எங்களைத் தாழ்த்தி, துணிச்சலுடன் உண்மைக்காகவும், நீதிக்காகவும் போராடும் வலிமையைத் தாரும். இதனால் நாங்கள் விண்ணரசில் பெரியவர்களாய் வாழும் பேற்றினைப் பெறுவோமாக. ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment