Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தடைகளை நீக்குதல் | யேசு கருணா
6 டிசம்பர் 2020 திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு
I. எசாயா 40:1-5,9-11 II, 2 பேதுரு 3:8-14 III. மாற்கு 1:1-8
தடைகளை நீக்குதல்
திருவருகைக்காலத்தில் நாம் இயேசுவின் மூன்று வருகைகளையும் முதன்மைப்படுத்திச் சிந்திக்கின்றோம். அவருடைய முதல் வருகை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அவருடைய இரண்டாம் வருகை உலக முடிவில் நடக்கும். அவருடைய மூன்றாம் வருகை அன்றாடம் நடந்தேறுகிறது. அவருடைய முதல் மற்றும் இரண்டாம் வருகை காணக்கூடிய அளவில் இருந்தது, இருக்கும். ஆனால், மூன்றாம் வருகையை நாமாக முயற்சி எடுத்தாலன்றிக் காண இயலாது. ஆண்டவரை அன்றாடம் நம் வாழ்வில் வரவேற்க நாம் நிறையத் தடைகளைக் களைய வேண்டும், நம் வாழ்வில் நிறைய மாற்றங்களை உருவாக்க வேண்டும்.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 40:1-5,9-11), இரண்டாம் எசாயா நூலின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் சிக்கியிருக்கும் இஸ்ரயேல் மக்கள் விரைவில் தங்கள் சொந்த நாடு திரும்புவார்கள் என்பதை முன்னறிவிக்கிறார் இறைவாக்கினர். கிமு 587இல் எருசலேம் நகரம் அழிக்கப்பட்டதையும், இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்டதையும் நேருக்கு நேர் கண்ட இறைவாக்கினர்கள், மக்களாலும் மக்களின் அரசர்களின் தவறான வாழ்வியல் முறைகளால் இந்த அழிவு நேரிட்டது என்பதை எண்ணி வருந்துகின்றனர். மேலும், கடவுளின் உடன்படிக்கையை மக்கள் மீறியதற்காக, கடவுள் அவர்களுக்கு அனுப்பிய தண்டனை என்றும் பலர் கருதினர். கடவுள் தன் மக்களை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டார் என்று நினைத்துப் புலம்பினர். இத்தகைய சூழலில் இறைவாக்குரைக்கின்ற எசாயா, இந்த நிகழ்வு பற்றிய ஒரு புதிய புரிதலை முன்வைக்கின்றார்.
'ஆறுதல் கூறுங்கள்!' என்பதுதான் கடவுள் தனக்குக் கொடுத்த பணி என்று எசாயா தன் பணியின் இலக்கை வெளிப்படுத்துகின்றார். கடவுள் மூன்று வினைச்சொற்களைப் பயன்படுத்துகின்றார்: 'ஆறுதல் கூறுங்கள்,' 'கனிமொழி கூறுங்கள்,' மற்றும் 'உரக்கச் சொல்லுங்கள்'. கடவுள் பழிதீர்க்கும் கடவுள் அல்லர் என்றும், கடவுள் தூரத்தில் நிற்கும் கடவுள் அல்லர் என்றும், கடவுள் தன் மக்களை ஒருபோதும் கைவிடுபவர் அல்லர் என்றும் இவ்வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. இஸ்ரயேலின் கடவுள் அவர்களோடு என்றும் தங்குகிறார். மேலும், 'ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும். மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர். ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்' எனக் காட்சி காண்கிறார் எசாயா. இதுவே 'நற்செய்தி' என அவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. கடவுள் அவர்களோடு இருந்து அவர்களைக் காத்து வழிநடத்தும் அர்ப்பணத்தை இது அவர்களுக்கு நினைவூட்டுகிறது. கடவுள் மீண்டும் அவர்களை முந்தைய நன்னிலைக்குக் கொண்டுவர விரும்புகிறார் என்பதை ஓர் உருவகம் வழியாக உரைக்கின்றார் எசாயா: 'ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.' இந்த உருவகத்தின் வழியாக, ஆண்டவராகிய கடவுளே இஸ்ரயேல் மக்களின் தலைவராக இருப்பார் என்பதும், அடிமைத்தனத்தில் சிதறுண்ட மக்களை ஒன்று சேர்ப்பார் என்பதும், நலிவுற்றவர்களைத் தாங்கிக் கொள்வார் என்பதும், புதிய உயிர்கள் பிறப்பதற்கு அவரே துணை நிற்பார் என்பதும் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.
இந்த வாக்குறுதி நிறைவேற வேண்டுமெனில், 'பாலைநிலத்தில் வழி ஆயத்தமாக்கப்பட வேண்டும்,' 'பாழ்நிலத்தில் நெடுஞ்சாலை சீராக்கப்பட வேண்டும்.' 'பாலைநிலம்' மற்றும் 'பாழ்நிலம்' என்பது இஸ்ரயேல் மக்கள் புதிதாக மேற்கொள்ள வேண்டிய பயணத்தை அல்ல, மாறாக, அவர்கள் ஏற்கெனவே பெற்றிருந்த விடுதலைப்பயண அனுபவத்தை அவர்களுக்கு நினைவூட்டுகின்றன. சீனாய் மலை வழியாக பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்கள் மேற்கொண்ட பயணத்தில்தான் கடவுள் அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டு, 'நாம் உங்கள் கடவுளாய் இருப்போம். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்!' என மொழிந்தார். அங்குதான் அவர்கள் தங்களுடைய கடவுளை முழுமையாக அன்பு செய்யக் கற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய பயங்களும் தவறான எண்ணங்களும் மறைந்து, சந்தேகங்கள் விலகியது அங்கேதான். 'இதோ! உன் கடவுள்!' என்று இஸ்ரயேல் மக்களுக்கு இப்போது சொல்வதன் வழியாக, எசாயா தன் மக்களை எழவும், குரல் எழுப்பவும், மீண்டும் தாயகம் திரும்பவும் அழைக்கின்றார்.
இரண்டாம் வாசகத்தில் (காண். 2 பேது 3:8-14) ஆண்டவரின் வருகையோடு தொடர்புடைய பிரச்சினை பற்றிப் பேசுகின்றார். ஆண்டவரின் இரண்டாம் வருகை இல்லை என்று போதித்துவந்து போலிப் போதகர்களால் கவரப்பட்ட தன் திருச்சபைக்கு எழுதுகின்ற பேதுரு, அவர்கள் இழந்த நம்பிக்கையை மீண்டும் தட்டியெழுப்புகிறார். அவர்களது பொறுமையின்மையைக் கடிந்துகொண்டு, பொறுமையோடு எதிர்நோக்க அழைக்கின்றார். மேலும், அவர்களது பயங்களையும் ஐயங்களையும் களைகின்றார்.
முதலில், ஆண்டவரின் நேரமும் நம் நேரமும் ஒன்றல்ல என்று வரையறுக்கிறார்: 'ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன.' ஆக, 'விரைவில் வருகிறார்' என்பதை மனித கால வரையறையின்படி நாம் அறிந்துகொள்ள முடியாது. இரண்டாவதாக, இரண்டாம் வருகையின் தாமதத்திற்குக் காரணம் கடவுளின் அன்பும் பொறுமையுமே. தன் வருகையைத் தள்ளி வைப்பதன் வழியாக, மற்றவர்கள் மனம் மாறுவதற்கு நேரம் கொடுக்கிறார் கிறிஸ்து. ஆக, நம்பிக்கை கொண்ட இறைமக்கள் காலத்தைக் கணிப்பதை விடுத்துவிட்டு, தங்களையே தயார்படுத்திக்கொள்ளவும் சரிசெய்யவும் வேண்டும். தங்களையே 'மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்' நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண் மாற் 1:1-8), மாற்கு நற்செய்தியின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்' என்று தன் நற்செய்தியைத் தொடங்கும் மாற்கு, எசாயா இறைவாக்கினரின் வாக்கு, திருமுழுக்கு யோவானில் நிறைவுபெறுவதாக எழுதுகின்றார். பாலைநிலத்தில் குரலெழுப்பிய தூதரும், பாவமன்னிப்புக்கான திருமுழுக்கைப் போதித்தவரும் யோவானே என முன்மொழிகின்றார். கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவுக்குத் தடையாகப் பாவம் இருந்ததால், அந்தப் பாவத்தைக் களைந்துவிட்டு, தனிமனித மனமாற்றம் அடைய மக்களை அழைக்கின்றார் யோவான். தடைகளை நீக்குகின்ற நம்பிக்கையாளர்கள் 'தூய ஆவியாரால் திருமுழுக்கு பெறுவர்.'
ஆக,
பயம், ஏமாற்றம், ஐயம் என்னும் தடைகள் நீக்கப்பட்டால், மக்கள் தங்கள் கடவுளோடு தங்களை மீண்டும் இணைத்துக்கொள்ளலாம் என்று முதல் வாசகத்தில் எசாயாவும்,
பரபரப்பும் கலக்கமும் நீங்கி பொறுமையும் விடாமுயற்சியும் பிறந்தால், இறைமக்கள் ஆண்டவரின் இரண்டாம் வருகையை எதிர்கொள்ள முடியும் என்று பேதுருவும்,
பாவத்தை நீக்குதல் தூய ஆவியாரின் அருள்பொழிவைப் பெற வழி என்று திருமுழுக்கு யோவானும் மொழிகின்றனர்.
இன்றைய நாள் நமக்கு வைக்கும் பாடம் என்ன?
கடவுளின் இரக்கப் பெருக்கை மறத்தல், பரபரப்போடு இருத்தல், பாவத்தொற்றிலேயே நிலைத்திருத்தல் போன்றவை இன்றயை நம் தடைகளாக இருக்கலாம். மேற்காணும் தடைகளை நாம் உணர்வதோடு, அவற்றை நீக்க நாம் முழுமுயற்சி செய்ய வேண்டும்.
எப்படி நீக்குவது?
'சிறியவற்றில் பிரமாணிக்கம், பெரியவற்றிலும் பிரமாணிக்கம்.'
'சிறியவற்றில் தோல்வி, பெரியவற்றிலும் தோல்வியே.'
இஸ்ரயேல் மக்கள் ஒரே நாளில் கடவுளின் உடன்படிக்கையை மீறவில்லை. சின்னச் சின்ன விடயத்தில் மீறினார்கள் பெரிய அளவில் துன்பம் அடைந்தார்கள்.
சிறிய பழக்கம், சிறிய தொடர் பயிற்சி, சிறிய ஒழுக்கம் நம்மைப் பெரியவற்றுக்கு இட்டுச்செல்லும். இதன் வழியாக நாம் வலிமையும், ஞானமும், நன்மையும் பெறுவோம். அதே போல, சிறிய பொய் பெரிய பொய்க்கும், சிறிய இன்பநுகர்வு பெரிய துரோகத்திற்கும், சிறிய மதுபாட்டில் பெரிய மதுப்பழக்கத்திற்கும் இட்டுச் செல்லும். ஆக, நாம் எந்தப் பாதையைத் தேர்வு செய்தாலும் அதை நேராக்கவும், சமதளமாக்கவும் வேண்டும். நாம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் நம்மை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ இட்டுச் செல்லும். சிறிய விளைவுகள் பெரிய விளைவுகளைக் கொண்டுவரும். சங்கிலி போல அது தொடரும்.
நாம் மேற்கொள்ளும் தெரிவுகளின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் நாம். சரியான முடிவுகள் சரியான விடிவுக்கு இட்டுச்செல்லும்.
தடைகளை நீக்குதல் மெசியாவைக் காண்பதற்கு வழி செய்யும்.
அப்போது, 'நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம் நாடு நல்கும்' (காண். திபா 85).
அருள்பணியாளர் யேசு கருணா, பேராசிரியர், புனித பவுல் குருமடம், திருச்சி
Add new comment