ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தப்படுவோமா! | குழந்தைஇயேசு பாபு


இன்றையவாசகங்கள் (06.12.2020)
திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு 
I: எசா: 40: 1-5, 9-11
II: திபா:  85: 8-9. 10-11. 12-13
III: 2 பேது: 3: 8-14
IV: மாற்: 1: 1-8

 

ஒர் ஊரில் வாழ்ந்து வந்த மனிதர் ஒருவர்,தனது வாழ்வில திறமையான பல செயல்களைச் செய்து வாழ்ந்து, மிகச்சிறந்த காரியங்களையெல்லாம் செய்து வந்தார். தனது உழைப்பின் பயனாகப் பொருளாதாரத்தில் வளர்ந்தார். எண்ணற்ற மக்களுக்கு உதவிகள் செய்தார். ஆனால் அவருக்கு ஒரு வகையான சோகம் இருந்தது. இச்சோகம் அவரது மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவிக்கத் தடையாக இருந்தது. அது என்னவென்று சற்று ஆழ்ந்து தியானிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் அவர் "தனது தந்தையை மன்னிக்காத மனநிலையே இதற்குக் காரணம் " என உணர்ந்து கொண்டார். இவருடைய சிறுவயதில் இவரின் தந்தை இவரை கண்டிப்போடு வளர்த்தார். தவறு செய்தால் உடனே இவருடைய தந்தை இவருக்குத் தண்டனைக் கொடுப்பார். எனவே தந்தையின் மீது ஒரு வகையான கோபம் சிறுவயது முதலே இருந்தது. வளர்ந்த பிறகும் தன் தந்தையின் மீது உள்ள கோபத்தைத் தன்னிடமிருந்த அகற்றாமல் வாழ்ந்து வந்தார். இத்தகைய மனநிலை தான் இவரின் மகிழ்ச்சியற்ற வாழ்விற்குக் காரணம் என்பதை உணர்ந்து கொண்டார். எனவே தன் தந்தையிடம் சென்று அவரின் காலில் விழுந்து என்னை மன்னித்து விடுங்கள். இவ்வளவு நாள் உங்கள் மீது கோபம் கொண்டிருந்தேன் என்று கூறினார். தன் மகன் காலில் விழுந்ததும் அவரை அன்போடு தூக்கி அரவணைத்து முத்தமிட்டு 'உன்னை மன்னிக்கிறேன் மகனே' என்று கூறினார். அதன்பிறகு அந்த மனிதருக்கு அவர் உள்ளத்தில் இருந்த மன உளைச்சல் நீங்கி மகிழ்வோடு வாழ ஆரம்பித்தார்.

மன்னிப்பும் மனமாற்றமும் தான் நமக்கு நிலையான வாழ்வையும் மகிழ்வையும் வழங்கும். இயேசு இந்த உலகத்தில் குழந்தையாகப் பிறந்தது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்து, நம்மை மீட்பின் கனியை சுவைக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே . ஆனால் இயேசு கொண்டு வந்த மகிழ்ச்சியை நாம் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அதற்கு காரணம் மனமாற்றத்தின் வழியாக நம்மையே ஆயத்தப்படுத்தாததேயாகும். நம்முடைய வாழ்வைச் சீர்தூக்கிப் பார்த்து, கடவுளுக்கு உகந்த வகையிலே நம்மையே ஆயத்தப்படுத்தி மனமாற்றத்தின் வழியாக மீட்பரை வரவேற்கும் மனநிலையைப் பெற்றிட இந்த திருவருகைக் காலம் நம்மை அழைக்கின்றது.

தவக்காலம் எப்படி ஒரு மனமாற்றத்தின் காலமாகவும், அருளின் காலமாகவும், மன்னிப்பின் காலமாகவும், இரக்கத்தின் காலமாகவும் இருக்கின்றதோ, அதைப்போலவே  இந்த திருவருகைக் காலமும் இருக்கின்றது. திருவருகைக்காலம் நம்மையே ஆயத்தப்படுத்தும் காலமாக இருக்கின்றது.  ஆயத்தப்படுத்துதல் என்பது நம் வாழ்வின் இலக்கினை அடைய முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. ஒரு மாணவன் நல்ல முறையில் தேர்ச்சி பெற வேண்டுமெனில் அதற்காக அவன் ஒவ்வொரு நாளும் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி ஆயத்தப்படுத்தத் தவறினால் தேர்விலே நல்ல வெற்றியை அடைய முடியாது. ஒரு விவசாயி நல்ல அறுவடையைப் பெற வேண்டுமெனில் அவர் விவசாயம் செய்யும் இடத்தைப் பண்படுத்தி ஆயத்தப் படுத்த வேண்டும். ஆயத்தப்படுத்திய பிறகு  அந்த நிலத்தை உழுது, விதைத்து, களையெடுத்து, தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும். அப்பொழுதுதான் மிகுந்த விளைச்சலைப் பெற முடியும். ஒரு தாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கத் தன்னுடைய ஆசைகளையெல்லாம்  துறந்து, தனக்குப் பிடித்த உணவைச் சாப்பிடாமலும், தனக்குப் பிடிக்காத உணவை சாப்பிட்டும் தன்னையே ஆயத்தப்படுத்துவார். அப்படி 10 மாதங்கள் தன்னை ஆயத்தப்படுத்தும் பொழுது பல்வேறு துன்பங்களும் இடையூறுகளும் அனுபவித்தாலும் இந்த உலகிற்கு ஒரு மனித உயிரைக் கொடுக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் அனைத்தையும் மறந்து விடுவார். ஒரு வாகனத்தை ஓட்ட தயாராக இருக்கும் ஓட்டுனர் பயணத்திற்குத் தேவையான எரிபொருள் இருக்கிறதா என்பதை அறிந்து அதனை ஆயத்தப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் ஒரு நிறைவான பயணத்தை  மேற்கொள்ள முடியும். இவ்வாறாக ஆயத்தப்படுத்துதலின் மேன்மையைப் பற்றி நாம் வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம்.

நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடுவதற்காகவும், ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகவும் நம்மையே ஆயத்தப்படுத்த இந்த திருவருகைக்காலம் அழைப்பு விடுக்கின்றது. உயர் பதவியிலுள்ள இவ்வுலகம் சார்ந்த சாதாரண மனிதர்களுக்கே நாம் நம்முடைய இடங்களை ஆயத்தப்படுத்துகிறோமென்றால் இந்த உலகை மீட்க வந்த நம் ஆண்டவர் இயேசுவுக்கு எவ்வளவு ஆயத்தப்படுத்த வேண்டும்? என்பதை ஆழமாகச் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். நம் ஆண்டவர் இயேசு நம் உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்கவும், இரண்டாம் வருகை எப்போது வந்தாலும் நாம்  தயாராக இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்கவும் இந்நாளிலே அழைக்கப்பட்டுள்ளோம். 
 மனமாற்றம் பெற்று கடவுளின் அருளையும் இரக்கத்தையும் அன்பையும் நிறைவாக பெற நம்மையே ஆயத்தப்படுத்த வேண்டும்.  படைப்பின் தொடக்கம் முதல் ஆண்டவர் இயேசு இந்த உலகத்திற்கு வரும்வரை தன்னால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் பாவ வாழ்வை விட்டுவிட்டு ஒளியின் வாழ்வாகிய தூய வாழ்வை வாழ வேண்டும் என கடவுள் விரும்பினார். ஆனால் மனிதர்கள் தங்களுடைய சுயநலத்தினாலும், அற்ப ஆசையினாலும் நாளுக்குநாள் தவறுகள் செய்து கொண்டே சென்றனர். ஆனால் கடவுள் எண்ணற்ற வாய்ப்புகளைக் கொடுத்து மனமாற அழைப்பு விடுத்தார். ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் மனம் போன போக்கில் சென்று கடவுளை மறந்து வாழ்ந்தனர். இருந்தபோதிலும் கடவுள் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தியவர்கள் நல்வாழ்வைப் பெற்றனர். உதாரணமாக,பழைய ஏற்பாட்டில் நம்முடைய முதல் பெற்றோர் ஆதாம் மற்றும் ஏவாள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் அவர் உண்ணக் கூடாது என்று கூறியப் பழத்தை உண்டு பாவம் செய்தனர். எனவே கடவுளின் அருளை அவர்கள் இழந்தாலும்  அவர்கள் மனம் மாற கடவுள் வாய்ப்புக் கொடுத்தார்.  அடுத்து நோவா காலத்தில் மக்கள் அனைவரும் கடவுளுக்கு எதிரான பாவங்கள் செய்தனர். கடவுள் இம்மண்ணுலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் அழிக்க  வேண்டுமென நினைத்தாலும் நேர்மையாளரான நோவை அழிக்காமல் மனித இனத்திற்கே ஒரு வாழ்வு கொடுக்கிறார். இது எதைச் சுட்டிக்காட்டுகிறது என்றால் எத்தகைய சூழலிலும் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழும் பொழுது  எவ்வளவு பெரிய சீற்றங்களும் பேரழிவுகளும் வந்தாலும் கடவுள் நம்மைக் காப்பார் என்பது உறுதி. அதற்குத் தேவை மனமாற்றமுள்ள தூய வாழ்வு. 

அடுத்ததாக தாவீது மனமாற்ற வாழ்வுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். அவர் தனது மனித பலவீனத்தின் காரணமாக கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்த பொழுதிலும் கடவுள் தன்னை மன்னிப்பார் என்று சாக்கு உடை அணிந்து மன்னிப்பு கேட்டார். கடவுளின் மன்னிப்பைப் பெற்றபிறகு புனித வாழ்வை வாழத் தொடங்கினார். 
 அதைப்போல புதிய ஏற்பாட்டில் சக்கேயு  மனமாற்ற வாழ்விற்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். இயேசுவை தனது உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்ற பிறகு  தகுதியற்ற தன்னிலை உணர்ந்து குறுக்கு வழியில் சம்பாதித்த இவ்வுலகம் சார்ந்த சொத்துக்களை நான்கு மடங்காக கொடுக்க முன்வந்தார். இச்செயல் இவரின்  மனமாற்ற வாழ்வுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது.  இயேசு லூக்கா நற்செய்தியில் கூறிய ஊதாரி மைந்தன் உவமை கடவுளின் மன்னிக்கும் மேன்மையை சுட்டிக்காட்டுகிறது. எவ்வளவுதான் நாம் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தாலும் கடவுள் நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கையோடு இருளின் வாழ்வாகிய பாவத்தை விட்டு விட்டு ஒளியாகிய கடவுளின் மீட்பைச் சுவைக்க பாவத்திலிருந்து மனமாற்றம் அடைய அழைக்கப்படுகிறோம். 

எனவே மனமாற்ற வாழ்வு என்பது ஒரு பயணம். இருளிலிருந்து ஒளியை நோக்கிய பயணம். பாவத்திலிருந்து புனிதத்தை நோக்கிய பயணம். சாவிலிருந்து வாழ்வை நோக்கிய பயணம். வெறுப்பிலிருந்து அன்பை நோக்கிய பயணம் . அப்படி என்றால் மனமாற்றம் என்பது நம்மை இவ்வுலகம்  சார்ந்த சிற்றின்பங்களுக்குள் அடிமையாக்கும் பாவத்திலிருந்து  ஒளியின் வாழ்வுக்கு இட்டுச்செல்வதாகும்.  மனமாற்றம் பெற்று கடவுளின் அருளைப் பெற வேண்டுமெனில் நாம் இரண்டு வகையான மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். முதலாவதாக நான் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தேன் என்பதை ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். நான் பாவத்திலிருந்து முழு விடுதலை பெறவேண்டுமெனில் நம்முடைய பாவத்தைக் கடவுளுக்கு முன்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இரண்டாவதாக அந்தப் பாவத்தை நினைத்து மனம் வருந்த வேண்டும். இனிமேல் இத்தகைய பாவங்களைச் செய்யக்கூடாது என்று உறுதி எடுக்க முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு முயற்சி செய்கின்ற பொழுது நாம் தூய்மையான வாழ்வை  வாழ முடியும். அத்தகைய தூய்மையான மனநிலையைப் பெறுவது தான் உண்மையான மனமாற்ற வாழ்வு.  இதற்காகவே இந்த திருவருகைக்காலம் நம்மை அழைக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் புனித  திருமுழுக்கு யோவான் "பாவ நிலையிலிருந்து மனமாற்றம் அடைந்து திருமுழுக்குப் பெறுங்கள் " என பறைசாற்றுகிறார். ஏனெனில் பாவம் பரவலாக மக்களிடையே காணப்பட்டது. பரிசேயர்களும் சதுசேயர்கள் மக்களை ஒரு ஆயரைப் போல வழி நடத்தவேண்டிய கடமையில் இருந்த போதிலும் அவர்கள் சட்ட ஒழுங்கு முறைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர். புறம் சார்ந்த சட்டங்களுக்கும் சமய வழிபாடுகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் மக்களின் அகம் சார்ந்த தூய வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனவேதான் மக்கள் அனைவரும்  பாவத்தில் வாழ்ந்து கடவுள் தர விரும்பும் மீட்பை சுவைக்க முடியாமல் தவித்தனர். பல்வேறு துன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாகினர். எனவேதான் திருமுழுக்கு யோவான் மனம் மாறி நற்செய்தியை நம்ப  அழைப்பு விடுத்தார். அதுமட்டுமல்ல ஆண்டவர் இயேசுவின் வழியை ஆயத்தமாக்கும் பணியினை செய்தார். திருமுழுக்கு யோவான் கடவுளால் அனுப்பப்பட்ட இறைத்தூதராக கருதப்பட்டார். எனவேதான் மக்கள் அவரிடம் சென்று திருமுழுக்குப் பெற்றனர். அனைவரும் திருமுழுக்கு யோவானை மெசியா  என கருதினர்.  அவர் நினைத்திருந்தால் தான்தான் மெசியா என்று மக்களிடம் அறிவித்து மக்களிடம் நற்பெயர் வாங்கியிருக்கலாம். ஆனால் திருமுழுக்கு யோவான் தாழ்ச்சி உள்ளவராய் "என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதி இல்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்'' எனப் பறைசாற்றியது நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கின்றது. தாழ்ச்சி யான திருமுழுக்கு யோவானிடம் இறைவனின் மகனாகிய இயேசு திருமுழுக்குப் பெற தேடி வந்தார். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் திருமுழுக்கு யோவானை போல தாழ்ச்சியான உள்ளத்தோடு நம்மையும் பிறரையும் ஆயத்தப்படுத்தும் பொழுது பிறக்கப்போகும் பாலன் இயேசு நம் உள்ளத்திலும் இல்லத்திலும் பிறப்பார்.

திருவருகைக் காலத்தில் இருக்கின்ற நாம் இவ்வுலகம் சார்ந்த ஆடம்பரங்களிலும் ஆணவத்திலும் செல்வச் செழிப்பிலும் இயேசுவைத் தேடாமல் எளிமையான தாழ்ச்சியான உள்ளத்தில் இயேசுவை வரவேற்போம். அப்படிப்பட்ட உள்ளங்களை இயேசு விரும்புகிறார். எனவே திருவருகைக் காலத்தில் நம்மாலான உதவிகளை நம்மோடு வாழக்கூடிய ஏழை-எளிய கைவிடப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு செய்யும் பொழுது நாம் ஆண்டவர் இயேசுவுக்கே செய்கிறோம். எனவே நம்முடைய மனமாற்ற வாழ்வின் வழியாகவும் தாழ்ச்சியான உள்ளத்தின் வழியாகவும் மனிதநேய செயல்பாடுகள் வழியாகவும் இயேசுவின் வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்த தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! இந்த திருவருகைக் காலத்தில் திருமுழுக்கு யோவானைப் போல உம்முடைய வருகைக்காக எங்களுடைய உள்ளத்தையும் உடலையும் ஆயத்தப்படுத்த தேவையான அருளைத் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

10 + 1 =