தாயுள்ளம் கொண்டவர்களா நாம் ! குழந்தைஇயேசு பாபு


இன்றையவாசகங்கள் (02.12.2020) திருவருகைக் காலத்தின் 1 ஆம் புதன் 
I: எசா: 25:6-10
II: திபா: 23:1-3,3-4,5,6
III: மத் 15:29-37

தாயுள்ளம் கொண்டவர்களா நாம் !

ஒரு தாயானவள் தன் குழந்தையின் தேவை என்ன என்பதை நன்கு அறிவாள். தன் குழந்தையின் சிறு அசைவைக்கொண்டே அக்குழந்தை என்ன சொல்ல விழைகிறது என்பதை அறிபவள்தான் தாய். தாய் தன் குழந்தையின் பசியைப் போக்குவாள். பயத்தை நீக்குவாள்.பாதுகாப்பு தருவாள்.கண்ணீரைத் துடைப்பாள். துணிச்சலைத் தருவாள். துன்பத்திலும் இன்பத்திலும் உடன் நிற்பாள். தன் குழந்தையைப் பெருமைப்படுத்துவாள்.வாழ்வு தருவாள். இப்படியாக ஒரு தாயின் பண்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். நாம் அனைவருமே நம்மைப் பெற்ற தாய் வழியாக மேற்கூறிய அனைத்தையும் ஏன் அதைவிட மேலாகவே அனுபவித்திருப்போம். அத்தகைய தாய் அன்பையே மிஞ்சும் அளவுக்கு நம் மேல் அளவுகடந்த அன்பைக் கொண்டவர்தான் நம் கடவுள். இத்தைகைய தாயுள்ளம் கொண்ட இறைவனைப் படம் பிடித்துக் காட்டுகின்றன இன்றைய வாசகங்கள்.

தாய் இருக்கும் வீட்டில் பிள்ளைகள் பட்டினியாய் இருக்கமாட்டார்கள் என்ற உண்மை நாம் அறிந்ததே.தனக்கு இல்லாவிட்டாலும் தன் பிள்ளைகள் உண்ணட்டும் என எண்ணுபவள் தான் தாய். இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மலைகளின் மேல் விருந்து ஏற்பாடு செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்விருந்தில் சுவைமிகுந்த உணவை பிறஇனத்தவர் உட்பட  பாரபட்சமின்றி கடவுள் அனைவருக்கும் வழங்குவதாக நாம் வாசிக்கிறோம்.உணவளிக்கும் இறைவன் தன் மக்களின் துயரைப்போக்கி அவர்கள் முகத்தை மூடியிருக்கும் முக்காட்டை அவிழ்த்து விடுவார். கண்ணீரைத்துடைப்பார் என்ற ஆறுதல் மொழிகள் நம்மை ஆற்றுப்படுத்தி புது வாழ்வு அளிப்பதாக இருக்கின்றன.

 அதே போல நற்செய்திலும் தன்னுடைய போதனையைக் கேட்க வந்த மக்கள் பசியாய் திருப்பிச் செல்ல கூடாது என்று விரும்பிய இயேசு அம்மக்கள் மேல் பரிவு கொண்டு சீடர்கள் வழியாக அவர்களுக்கு உணவளிக்கிறார் என வாசிக்கிறோம்.இவை கடவுளின் தாயுள்ளத்தை உள்வாங்கிய இயேசு அதை எப்படி பிரதிபலிக்கிறைர் என்பதை மிகத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. 

இச்சிந்தனைகள் நமக்கு கூறும் செய்தி என்ன? கடவுளின் தாயுள்ளத்தை தியானிக்கும் அவருடைய மக்கள் நாமும் அவரைப்போலவே தாயுள்ளம் கொண்டவர்களாகத் திகழ வேண்டும் என்பது தான். எவ்வாறு இயேசு கடவுளின் பரிவுமிக்க தாயன்பை தன்னிடம் வெளிப்படுத்தினாரோ அதைப்போல நாமும் செய்ய வேண்டும் என்பதே இன்று நமக்கு விடுக்கப்படும் அழைப்பு. நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்வதும், பிறர் கண்ணீரைத் துடைப்பதும், துன்ப நேரத்தில் ஆறுதலளிப்பதும் ,பசித்தோருக்கு உணவளிப்பதும் நம் தாயுள்ளத்தை பிறருக்கு எடுத்தியம்புவதோடு மட்டுமல்லாமல் நமக்குள் இருக்கும் இறைவனின் தாயன்புக்குச் சான்றாய் அமையும். 

திருவருகைக் காலத்தில் பாலன் இயேசுவை நம் உள்ளக்குடிலில் ஏற்றுக்கொள்ள தயார் செய்துகொண்டிருக்கும் இந்நாட்களில், கடவுளின் தாயுள்ளத்தை நமதாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். கடவுளின் தாயன்பைச் சுவைக்கும் நாம் அவருக்கு நன்றி உள்ளவர்களாய் வாழ்வோம். கடவுளை நம்மில் எடுத்துக்காட்டுவோம். அதுவே உண்மையான கிறிஸ்து பிறப்பு விழா தயாரிப்பு என்பதை உணர்வோம். 

இறைவேண்டல்

தாயுள்ளம் கொண்டு எங்கள் பசி போக்கி, துன்பம் போக்கி, கண்ணீர் துடைத்து புது வாழ்வு தரும் இறைவா உம்முடைய தாயுள்ளத்தை இயேசுவைப் போல நாங்களும் எங்கள் நற்செயல்களால் பிரதிபலிக்க வரம் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

12 + 4 =