Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சிறப்பு நற்செய்தி மாதம் - இன்றைய இறை சிந்தனை | October 189 | Ep-18
இன்று நற்செய்தியாளர் புனித லூக்காவின் விழாவினைக் கொண்டாடுகிறோம். புனித பவுல் திமேத்தேயுக்கு எழுதிய கடிதத்தில் என்னோடு உடன்பயணிக்க லூக்காவைத் தவிர யாருமில்லை என்பதனைக் குறிப்பிடுகிறார். லூக்கா திருத்தூதர்பணி 10 ஆம் அதிகாரத்திலிருந்து நாங்கள் என்று தொடங்குகிறார். தான் பவுலுடன் பயணித்ததைக் குறிப்பிடுகிறார். அதே வேளையில் தன்னுடைய வாசிப்பவர்களையும் இந்த திருத்தூதுப் பயணத்தில் உடன் பயணிக்க அழைக்கிறார்.
லூக்கா நற்செய்தியானது இயேசுவோடு உடன் பயணித்து அவருடைய உரைகளைக் கேட்டு, சிலுவை-உயிர்ப்பை கண்டு அனுபவித்த நேரடிச் சாட்சியங்களிலிருந்து லூக்காவல் எழுதப்பட்டது. ஆனால் லூக்கா இயேசுவுக்கு நேரடி சாட்சியல்ல. மற்ற நற்செய்தியாளர்கள் 12 சீடர்கள் பற்றிதான் குறிப்பிடுகிறார்கள். ஆனால் லூக்கா நற்செய்தியாளர் 72 சீடர்களை அனுப்புவதாகக் குறிப்பிடுகிறார். எனவே 12 சீடர்களுக்கு மேலாக நற்செய்தி அறிவிப்புப் பணிசெய்தவர்கள் இருக்கிறார்கள் என லூக்கா குறிப்பிடுகிறார். இயேசு இவர்களை அழைத்து அனுப்புவதற்கு முன்னதாக எருசலேம் நோக்கிய தம் பயணத்தைத் தொடங்குகிறார். அதாவது இவர்கள் இயேசுவின் வருகைக்காக தயாரிக்கச் சென்றார்கள் எனலாம். மேலும் சீனாய் மலையில் பெற்ற திருச்சட்டமானது 70 நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டதாக யூத மரபு உண்டு. அப்படியென்றால் இயேசுவின் சீடர்கள் எல்லா மக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள் எனக் கொள்ளலாம்.
லூக்காவிற்கு இறையாட்சியின் சிறப்பினைப் பற்றி எடுத்துரைப்பது முக்கியமல்ல, மாறாக இறையாட்சி பற்றிய செய்தி எல்லா மக்களுக்கும் சென்றடையவேண்டும் என்பதுதான். எல்லாருக்கும் இறையாட்சியில் பங்குண்டு என்பது வரலாற்று சிறப்புமிக்கச் செய்தி. 72 சீடர்களுக்கு கொடுக்கப்பட்ட வழிமுறைகளும் 12 திருத்தூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வழிமுறைகளும் ஒன்றே. அறுவடையோ மிகுதி, வேலையாட்களோக் குறைவு. அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அக்டோபர் 22, 2017 இல் இவ்வாறு கர்தினால் பிலோனிக்கு இவ்வாறு எழுதுகிறார்: எனவே அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். செபம் தான் நற்செய்தி அறிவிப்பின் ஆன்மா. அறுவடையின் ஆண்டவர்தான் நம்மிடம் வருகிறார். அவரே நம்மை அழைக்கிறார், அனுப்புகிறார்.
நாமும் இயேசுவின் செபத்தோடும், அவரோடு மக்களுக்காக வாழ்ந்து தந்தையோடு இணைந்த பயணத்தில் இணைவோம்: நான் உங்களை ஓநாய்களிடையே ஆடுகளைப்போல அனுப்புகிறேன். அனுப்பப்பட்டவர்கள் அடக்குமுறையும், வலிமையையும். வன்முறைகளையும் சார்ந்திருக்கக்கூடாது. மாறாக நம்முடைய வளமைமிகுந்த நம்பிக்கையால், செபத்தால் அன்பில் இயேசுவோடு தனிப்பட்ட உறவில் வேரூன்ற வேண்டும்.
ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும், வெற்றியோ தோல்வியோ, நகரமோ கிராமமோ, தனிவாழ்வோ பொதுவாழ்வோ எதுவும் அனுப்பப்பட்டவர்களைத் தடுத்துநிறுத்தமுடியாது. அவர்கள் மீட்பிற்கான உடனடியான கடைசியான வேண்டுதலை எல்லாருடைய செவிக்கும், இதயத்திற்கும் எடுத்துச்செல்வார்கள். அதற்கான விலை எதுவாக இருந்தாலும் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். 2 திமோ 4:10-17 | லூக்கா 10:1-9
Add new comment