அன்னை மரியா திருஅவையின் தாய்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் எட்டாம் திங்கள்; I: தொ. நூ:3:9-15,20; II: தி.பா: 87: 1-2. 3,5. 6-7 ; III : யோ:  19:25-34

இன்று நம் தாய் திருஅவை "அன்னை மரியா திரு அவையின் தாய்" என்பதை நினைவுகூறுகிறது. நேற்றைய தினம் பெந்தகோஸ்தே  எனும் தூய ஆவியாரின் விழாவை நாம் கொண்டாடினோம்.
இந்நாள்  திருஅவையின் பிறந்த நாள் என்பதை நாம் மறுக்க இயலாது. அத்திரு அவையின் தூண்களாக இருந்து அதைக் கட்டிஎழுப்ப அயராது பாடுபட்டு உழைத்த சீடர்களுடனிருந்து அவர்களைத் தேற்றிய அன்னையை நாம் இன்றைய தினத்தில் நினைவு கூறுவது சாலச் சிறந்தது.

அன்னை மரியா எவ்வாறாக திருஅவையின் அன்னையாக விளங்குகிறார் என்பதை நாம் தெளிவாகக் காண்போம்.

முதலாவதாக கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை சொன்னபோது "இதோ ஆண்டவரின் அடிமை" எனத் தலைவணங்கி இறைவிருப்பத்தை ஏற்றவர் நம் அன்னை. இறைமகன் இயேசுவைப் பெற்றெடுத்தார். இறைவனின் அன்னையானார். அக்கிறிஸ்து இயேசுவே திருஅவையின் மூலைக்கல் என்பதை நாம் அறிவோம். (தி.ப 4:11; எபே 2:20; 1பேதுரு 2:6)
இவ்வாறு திரு அவையின் மூலைக்கல்லைச் சுமந்து பெற்றெடுத்த தாய் அத்திருஅவையின் தாயாக விளங்குகிறார் எனக் கூறுவதில் வியப்பில்லை.

இரண்டாவதாக  இயேசுவின் முதல் அருஞ்செயலாக விளங்கிய தண்ணீரை திராட்சை இரசமாக மாற்ற இயேசுவைத் தூண்டியவர் அன்னை மரியா என்பதை யோவான் எழுதிய நற்செய்தி இரண்டாம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். இவ்வாறு செய்ததால் இயேசுவிடம் பலர் நம்பிக்கை கொள்வதற்கு மரியா வழிகாட்டினார்.குறிப்பாக இயேசுவைப் பின் தொடர எண்ணிய  சீடர்களுக்கு இந்நிகழ்வு நம்பிக்கையின் அடித்தளமாய் அமைந்து. அந்நம்பிக்கையால் வளர்ந்ததே நம் திருஅவை.

முன்றாவதாக அன்னை மரியா இயேசுவோடு கல்வாரி பயண இறுதி வரை நடந்தார். அவருடைய உடனிருப்பை இயேசுவோடு நிறுத்திவிடவில்லை. மாறாக சீடர்களோடும் அவர் இருந்தார். இயேசுவின் இறப்புக்குப் பின் மனம் தளர்ந்த சீடர்களோடு உடனிருந்து அவர்களைத் திடப்படுத்தினார். சீடர்களோடு இணைந்து இறைவேண்டல் செய்த போது அன்னை மரியாவும் சீடர்களும் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டனர் என்பதை திருஅவை மரபு நமக்குக் கற்றுத் தருகிறது. 

இவ்வாறாக அன்று இயேசுவோடும் சீடர்களோடும் வழிநடந்த மரியா திரு அவையின் உறுப்பினர்களான நம்மோடும் தொடர்ந்து நடந்து வருகிறார்.  "இதோ உம் தாய்" என கல்வாரி மலையில் நமக்காதத் தரப்பட்ட நம் மரியன்னை திரு அவைக்குத் தாயாக பாதுகாவலாக விளங்குகிறார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை அன்றோ!அவ்வன்னையின் வழிநடந்து அவரின் பரிந்துரையோடு நம் திருஅவையை உயிரோட்டமானதாய் மாற்றுவோம்.

இறைவேண்டல்

தந்தையே அன்னை மரியாவை திருஅவைக்குத் தாயாகத் தந்த உமது தாயன்புக்கு நன்றி. அவ்வன்னையின் பரிந்துரையோடு நாங்கள் திருஅவையின்  உண்மையான உயிரோட்டமான மக்களாய் வாழ அருள் புரியும். ஆமென்

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 8 =