உறுப்பு தானம் ஒருமைப்பாட்டுணர்வின் வெளிப்பாடு - திருத்தந்தை


உறுப்பு தானங்களை ஊக்குவிக்கும் இத்தாலிய கழகத்தினர் சந்திப்பு (ANSA)

இயேசுவின் சீடர்கள், நாட்டின் சட்டம் மற்றும் அறநெறிகளுக்கு உட்பட்டு, உடல் உறுப்புக்களைத் தானம் செய்யும் செயல், மிக அழகானது, ஏனெனில், தேவையில் இருக்கும் ஒரு சகோதரருக்குச் செய்யும் அனைத்தும் எனக்கே செய்தீர்கள் என்ற ஆண்டவரின் துன்பங்களுக்கு அது கொடையாக அமைகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

உறுப்பு தானங்களை ஊக்குவிக்கும் ஓர் இத்தாலிய கழகத்தின் ஏறக்குறைய நானூறு உறுப்பினர்களை, ஏப்ரல் 13, இச்சனிக்கிழமை முற்பகலில், வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கழகத்தினர், உறுப்பு தானம் என்ற சிறப்பான நடவடிக்கை வழியாக, வாழ்வைப் பாதுகாத்து, அதை ஊக்குவித்து வருவதைத் தொடர்ந்து ஆற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

உறுப்பு தானம் என்பது, ஒருவர் தனது தேவைகளைக் கடந்து, மற்றவரின் நலனுக்காக, தாராள மனதுடன் தன்னையே வழங்குவதாகும் என்றும், இந்தக் கண்ணோட்டத்தில், இச்செயல், ஒரு சமுதாயக் கடமையாக இருப்பது மட்டுமன்றி, எல்லா மனிதரையும் ஒன்றிணைக்கும் உலகளாவிய உடன்பிறப்பு உணர்வின் வெளிப்பாடாக அமைகின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.

உறுப்பு தானம், அறநெறிப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதால், இது, பலனை எதிர்பாராத இலவசச் செயலாகக் காக்கப்பட வேண்டியது முக்கியம் என்றுரைத்த திருத்தந்தை, உண்மையில், இரத்தமோ அல்லது உடல் உறுப்புகளோ தானமாக வழங்கப்படும்போது,  அதனை வர்த்தகமாக்குவது மனித மாண்புக்கு முரணானது என்றும் தெரிவித்தார்.

சமய நம்பிக்கையற்றவர்களும், தேவையில் இருக்கும், சகோதரருக்கு உறுப்பு தானம் செய்கையில், தன்னலமற்ற மனிதத் தோழமையுணர்வில் ஆற்றப்படுவதாக உள்ளது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அயலவருக்கு உண்மையான மற்றும் தெளிவான அன்பைக் காட்டுகையில், நாம் கடவுளிடமிருந்து, அதற்குப் பலனைப் பெறுகின்றோம் என்றும் ஊக்குவித்தார். (வத்திக்கான் செய்தி)

Add new comment

13 + 6 =