Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உரோம் புனிதப் படிகள், 300 ஆண்டுகளில் முதன் முறையாகத் திறப்பு
இயேசு கிறிஸ்து, எருசலேம் பிலாத்து அரண்மனையில் விசாரிக்கப்பட்டு, மரண தண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டவேளையில், அவர் நின்றுகொண்டிருந்த படிகள் என நம்பப்படும், உரோம் நகரிலுள்ள ‘Scala Sancta’ புனிதப் படிகள், கடந்த முன்னூறு ஆண்டுகளில் முதன் முறையாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
1724ம் ஆண்டிலிருந்து மரத்தால் மூடி வைக்கப்பட்டிருந்த, இந்த வெள்ளைநிற பளிங்குப் படிகள், ஏப்ரல் 11, இவ்வியாழனன்று திருப்பயணிகளின் பக்தி வணக்கத்திற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளன.
திருப்பயணிகள், முழந்தாள்படியிட்டு செபித்துக்கொண்டே செல்லும் இப்புனிதப் படிகள், வருகிற ஜூன் 9, தூய ஆவியார் பெருவிழா வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய இலாத்தரன் பசிலிக்காவுக்கு அருகிலுள்ள ஆலயத்தில் அமைந்திருக்கின்ற இந்தப் புனிதப் படிகள், நானூறுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் அவர்களால், பொது மக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டன.
இந்தப் பளிங்குப் படிகள் திருப்பயணிகளால் மோசமடையத் தொடங்கியதையடுத்து, 1724ம் ஆண்டில், இறைஊழியர் திருத்தந்தை 13ம் பெனடிக்ட் அவர்கள், இப்படிகளை மரத்தால் மூடினார்.
பேரரசர் கான்ஸ்ட்டைன் அவர்களின் அன்னை, அரசி ஹெலேனா அவர்கள், நான்காம் நூற்றாண்டில், புனித பூமியிலிருந்து உரோம் நகருக்கு, புனிதப் படிகளை எடுத்து வந்தார் என, மரபு வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது. (வத்திக்கான் செய்தி)
Add new comment