Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஈரானில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை உதவி
ஈரானின் வடகிழக்கு மற்றும் தென் பகுதியில், கடந்த இரு வாரங்களாகப் பெய்த கனமழை மற்றும் வரும் நாள்களில் தொடர்ந்து மழைபெய்யக்கூடிய அச்சுறுத்தல் காரணமாக, துன்புறும் இலட்சக்கணக்கான மக்களுக்கு அவசரகால உதவியாக, ஒரு இலட்சம் யூரோக்களை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
துன்புறும் மக்களுடன் தனது ஆன்மீக அளவிலான ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, திருத்தந்தை, இந்த உதவியை, முதல்கட்டமாக வழங்கியுள்ளார் என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை அறிவித்துள்ளது.
திருத்தந்தை, இந்த உதவியை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை வழியாக வழங்கியுள்ளார்.
மேலும், துன்புறும் அம்மக்களுக்கு, திருத்தந்தையின் செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியையும், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.
ஈரானின் Golestan, Lorestan மற்றும் Kuzestan ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையால், இரண்டு இலட்சத்துக்கு அதிகமான மக்கள், தங்களின் கிராமங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கு அவசரகால உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
ஈரானில் பெய்த கனமழையால், இதுவரை 77 பேர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 1,070 பேர் காயமுற்றுள்ளனர்.
இதற்கிடையே, ஈரான் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பும், பாதிக்கப்பட்ட இம்மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது என்றும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை தெரிவித்துள்ளது.
நீர்த் தேக்கங்களும், ஆறுகளும் நிரம்பி வழியும் ஆபத்தில் உள்ளன என கூறப்பட்டுள்ளது. (வத்திக்கான் செய்தி)
Add new comment